Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் அட்டகாசம்... வில்வித்தையில் காலிறுதிக்குத் தகுதிபெற்றது இந்தியா

ஒலிம்பிக்ஸுக்கு முந்தைய தொடர்களிலும் அவர்கள் இருவருமே இணைந்து சிறப்பாக ஆடியிருந்தனர். ஆனால், டோக்கியோவில் நேற்று நடைபெற்ற வில்வித்தை ரேங்கிங் சுற்றில் அடானுதாஸ் மிகவும் சுமாராக செயல்பட்டிருந்தார். 64 வீரர்கள் பங்கேற்றிருந்த சுற்றில் 35-வது இடத்தையே பெற்றிருந்தார். அடானு தாஸ் அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் களமிறங்கிய பிரவீன் ஜாதவ் அவரை விட சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தார். தரவரிசையில் 31-வது இடத்தையும் பிடித்திருந்தார்.

இந்த தரவரிசையில் சிறப்பாக ஆடியிருந்ததால் அடானு தாஸுக்கு பதில் பிரவீன் ஜாதவே தீபிகா குமாரியுடன் சேர்ந்து ஆட தேர்வு செய்யப்பட்டார். தீபிகா-பிரவீன் என இந்த இணை இதற்கு முன் எந்த பெரிய தொடரிலும் இணைந்து ஆடியதில்லை. இன்றுதான் முதல்முறையாக ஒன்றாக களமிறங்கினர். பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு சீன தைபேவின் லின் ஜியா இன்-டேங் ஜின் ஜன் இணையை வீழ்த்தியிருக்கிறது இந்திய ஜோடி.

மொத்தம் நான்கு செட்கள் கொண்ட போட்டியில் முதல் செட்டை 35-36 என்ற கணக்கில் தைபேவிடம் இழந்திருந்தது இந்திய இணை. இரண்டாவது சுற்று 38-38 என டை ஆனது. கடைசி இரண்டு செட்களும் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. மூன்றாவது செட்டின் நான்கு வாய்ப்புகளிலுமே வட்டத்தின் மையத்தை துளைத்து முழுமையாக 40 புள்ளிகளையும் பெற்றது தீபிகா-பிரவீன் கூட்டணி. பதிலுக்கு சீன தைபே இணை 35 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்ததால் இந்திய அணி இந்த செட்டை வென்றது.

3-3 புள்ளிகள் எடுத்து இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால் முடிவை தீர்மானிக்கப்போகும் கடைசி செட்டின் மீது எதிர்பார்ப்பு கூடியது. இதில் சீன தைபே அணி 36 புள்ளிகளை எடுத்தது. இந்திய அணி முதல் இரண்டு வாய்ப்புகளில் 17 புள்ளிகளை மட்டுமே எடுக்க, கடைசி இரண்டு வாய்ப்புகளில் முழுமையாக 20 புள்ளிகளையும் எடுத்தால்தான் வெற்றி என்ற சூழல் உண்டானது. மிகப்பெரிய அழுத்தமான சூழலில் தீபிகா-பிரவீன் இருவருமே பொறுமையாக குறிபார்த்து நேர்த்தியாக வட்டத்தின் மையத்தை துளைத்து 20 முழுப்புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம் இந்திய கூட்டணி த்ரில் வெற்றி பெற்றது. அடுத்த காலிறுதி சுற்றுக்கும் தகுதிப்பெற்றது.

காலிறுதிப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.



source https://sports.vikatan.com/olympics/deepika-kumari-and-praveen-jadhav-takes-india-to-last-eight-in-archery-mixed-team-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக