அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சூழலுக்கு பெரிதளவில் தள்ளப்பட்டவர்கள் பழங்குடி சமூகத்தினர். அப்படிப்பட்ட பழங்குயினர் சமூக மக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். சாதி சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களின் வாயிற்படியில் பலமுறை ஏறியும் சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வந்த 101 பழங்குடியினர் மாணவர்களுக்கு அண்மையில் சாதி சான்றிதழ் வாங்கியிருந்தார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். இச்செயல் பலரது பாராட்டையும் பெற்றது. அப்படி இருக்க, மேல்படிப்பு படிப்பதற்கு ஆசை இருந்தும் 'இன்னும் 7 தினங்களுக்குள் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை எனில் எங்களது கல்லூரி படிப்பே கேள்விக்குறி தான்' என வருந்துகின்றனர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு காத்திருக்கும் பழங்குடியினர் மாணவர்கள் சிலர். பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த அந்த 6 மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியாமல் அரசு அதிகாரிகளின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தன் சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக கூறும் அவர்கள், அதன் நகல்களை அதிகாரிகளுக்கு அளித்த மனுக்களில் இணைத்து கொடுத்துள்ளனர். ஆனால், தங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லை என மனம் வருந்துகின்றனர்.
Also Read: மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி!
ஆறு மாணவர்களில் ஒருவரான ராஜேஷ் என்பவரிடம் இது குறித்து பேசினோம். "நான் வானூர் வட்டத்தில் உள்ள கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவன். அப்பா, அம்மா படிக்காதவங்க. கூலி வேலைக்கு போய் தான் எங்களை படிக்க வைக்கிறாங்க. எங்க வீட்டுல நானும் என்னுடைய அண்ணனும் மட்டும்தான். நான் பத்தாவது படிச்சப்போ ஸ்கூல்ல சாதி சான்றிதழ் கேட்டாங்க. ஆனால, வானூர் தாலுகா ஆபீஸ்ல கையெழுத்து வாங்கி விழுப்புரத்தில இருக்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ்ல கொடுத்தோம். கொஞ்ச நாள் கழிச்சி சான்றிதழ் கேட்ட போது, அந்த மனுவை தொலைச்சிட்டதாக சொன்னாங்க. மறுபடியும் மனு கொடுத்திருந்தோம். ஆனா, சாதி சான்றிதழ் கிடைக்கல. பத்தாவது வரை எங்க ஊரில் இருக்ககூடிய அரசு பள்ளியில் படிச்சேன். 12ம் வகுப்பை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளியில் (உயிரி-கணிதம்) படிச்சேன். 12வதுல 496.81 மார்க் எடுத்தேன். எனக்கு பி.ஏ (BA) தமிழ் படிக்கணும்னு ஆசை. காலேஜ்க்கு அப்ளிகேஷன் போடலாம் அப்படின்னு பார்த்தா சாதி சான்றிதழ் இல்ல. அப்ளிகேஷன் போடுறதுக்கு இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்கு. 10.08.2021 தான் கடைசி தேதி. கொஞ்ச நாள் தான் இருக்கிறதால சாதி சான்றிதழ் வேண்டும் என கேட்டு வெவ்வேறு ஊரை சேர்ந்த நாங்க 4 பேர் கடந்த 28ம் தேதி விழுப்புரம் கலெக்டரை நேரில் சந்தித்தோம். எங்கள விசாரிச்ச கலெக்டர் சார், விசாரணை நடத்தி சான்றிதழ் தரேன்னு சொன்னாரு. ஆனா, எந்த அதிகாரியும் விசாரணை பண்றதுக்கு வரல. இந்த வாரத்தில் எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை அப்படின்னா... நாங்க மேல் படிப்பு படிக்கிறது கேள்விக்குறி தான்" என்றார்.
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் சகோதரி லூசினா என்பவரிடம் பேசினோம்.
"நாங்க சுமார் 26 வருஷமா இருளர் சமூக மக்களோடு பழகி பணிசெய்து வருகிறோம். அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பது ஒவ்வொரு முறையும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மாணவர்களைப் போல இதற்கு முன்பாக 12ம் வகுப்பு முடித்த சில மாணவர்கள் சிலருக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் போனதால்... 'அடுத்த வருடம் சேர்ந்து படித்துக் கொள்ளலாம்' என எண்ணி கிடைத்த வேலையை நோக்கி சென்றார்கள். ஆனால், மீண்டும் படிக்க முடியாமல் ஒரே வருடத்தில் அவர்களின் வாழ்க்கையே வேற மாதிரி மாறியதை பார்த்திருக்கிறோம். படிப்பதற்கு ஆசைகொண்ட அந்த மாணவர்களின் வாழ்க்கை அப்படி ஆகும்போது மிகவும் மன வருத்தமாக இருக்கும். சாதி சான்றிதழ் இன்றி இருக்கும் 20 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் சமுதாய மாணவர்களின் விவரங்கள் உள்ளன. பல வருடமாக சாதி சான்றிதழ் வேண்டி கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த 20 குடும்பங்களுக்கு உட்பட்ட ஆறு மாணவர்கள் தற்போது 12-ம் வகுப்பு முடித்துள்ளார்கள். அனைவருக்குமே மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒவ்வொரு மாணவர்களும் 600க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் தான் பெற்றுள்ளனர்.
இவர்கள், கல்லூரி சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் இன்னும் ஒருவார காலம் தான் இடைவெளி உள்ளது. விண்ணப்பிப்பதற்கு சாதி சான்றிதழே தடையாக இருக்கிறது. கடந்த 28ம் தேதி நான்கு மாணவர்கள் மாவட்ட ஆட்சிரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். நேற்று(02.08.2021) இரண்டு மாணவர்கள் கோரிக்கையை முன் வைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருக்கிறார்கள். அண்மையில் மாவட்ட ஆட்சியர் பழங்குடியினர் சமூகத்தினர் 101 நபர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுத்திருந்தார், அது வரவேற்கத்தக்கது. 12ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி செல்ல துடிக்கும் இது போன்ற மாணவர்களையும் உரிய பரிசீலனை செய்து சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
Also Read: `எனது குழந்தைகளுக்கு சாதி, மதம் வேண்டாம்!’ - சான்றிதழ் கேட்டு மதுரை ஆட்சியரிடம் மனு
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் பேசினோம். "உரிய விசாரணை மேற்கொண்டு, உறுதி செய்து ஓரிரு தினங்களில் அந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/irular-community-students-are-suffering-from-not-being-able-to-apply-to-college-due-to-caste-certificate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக