Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? - மனப்போக்கை மாற்றும் கேள்விகள்!

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? - இப்படியொரு நேரடியான, எளிமையான கேள்வியை வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் கேட்டதற்குக் காரணம் இருந்தது. நீங்கள் இந்தக் கேள்விக்கு என்னவென்று பதிலளிப்பீர்கள்? கிரிக்கெட் என்று பதிலளித்துவிட்டு உங்களைத் திருத்திக் கொள்வீர்களா... அல்லது ஹாக்கி என்பதில் திட்டவட்டமாக இருக்கிறேன் என்கிறீர்களா... அல்லது ஒருவேளை கபடியோ என்று மனம் ஊஞ்சலாடுகிறதா?

இந்திய ஹாக்கி அணி

ஆனால் ஒரு தகவல் நம் ஆர்வத்தைத் தூண்டும். காலங்காலமாகப் போட்டித் தேர்வுகளில் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்ற கேள்வி இடம் பெறுவதும், ஹாக்கி என்று பதிலளிப்பவர்களுக்கு மதிப்பெண் தரப்படுவதும் நடந்து வருகிறது. ஆனால் இது தவறாம். தகவல் அறியும் சட்டப்படி இந்தக் கேள்வியை ஒருவர் நமது மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு ஒருவர் அனுப்ப, அதற்குக் கிடைத்த பதில் இதுதான். ‘’தேசிய விளையாட்டு என்று எந்த விளையாட்டையும் அரசு அங்கீகரிக்கவில்லை’’ என்பதுதான்.

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரில் உள்ள வகுப்பறையில், 'ஆண்களைவிடப் பெண்களுக்குப் பற்களின் எண்ணிக்கை குறைவு' என்று ஓர் ஆசிரியர் கூறினார். அரிஸ்டாட்டில் எழுதி வைத்த இது ஓர் உயிரியல் பாட ​நூலில் இடம்பெற்றிருக்கிறது. மாலையில் வீட்டுக்குச் சென்ற மாணவன் கலிலியோ தன் அப்பா, அம்மாவின் வாய்களைத் திறக்கச் செய்து பற்களை எண்ணினான். இரண்​டிலுமே தலா 32 பற்கள்தான் காணப்பட்டன.

மறுநாள் வகுப்பறைக்குச் சென்று இதை கலிலியோ கூறியவுடன் ஆசிரியர் அவரை அடித்தார். அதெப்படி அரிஸ்டாட்டில் கூறியதை ஒரு சாதாரண சிறுவன் மறுக்கலாம்... ஆனால் காலப்போக்கில் பற்களின் எண்ணிக்கை என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒன்றுதான் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ப்பட்டது.

பல்

இப்படியொரு சோதிக்கும் தன்மை ​சின்ன வயதிலேயே இருந்ததினால்தான் கலிலியோவால் ஊசல் விதிகளைப் பின்பு கண்டுபிடிக்க முடிந்தது. அதற்கு முன்பு ஊசலின் அலைவு நேரத்துக்கும், ஊசலின் எடைக்கும் தொடர்பு உண்டு என்றார்கள். பலவிதச் சோதனைகளுக்குப் பிறகு அப்படித் தொடர்பு இல்லை என்பதையும், ஊசலின் நீளத்திற்கும், அலைவு நேரத்துக்கும்தான் தொடர்பு உண்டு என்பதையும் அவர் நிரூபித்தார்.

அறிவியலுக்கு மட்டுமல்ல மனவியலுக்கும் இது பொருந்தும். அதிக மதிப்பெண் வாங்காதவன் மக்கு என்ற எண்ணம் ஒரு காலத்தில் ஊடுருவி இருந்தது. கணவனை விட்டு நீங்கி பிறந்தகத்தில் வாழும் ​பெண்ணின் போக்கு, ஆராயப்படாமலேயே, அவ​தூறாகப் பேசப்பட்டது. அவ்வளவு ஏன், ஒரு காலத்தில் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வது என்றிருந்தது. இப்போது முதியோர் இல்லங்களிலிருந்து ‘பெற்றோரை தத்தெடுத்துக் கொள்வது’ என்ற போக்கும் தொடங்கியிருக்கிறது.

கலிலியோ

தொலைக்காட்சியில் ஒரு வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தியபோதுதான் படித்த ஒரு தகவலைக் கேள்வியாக்கினார் தொகுப்பாளர். அந்தத் தகவலை அவர் வார இதழ் ஒன்றில் படித்திருந்தார். அதில் ஒரு இதழில், ‘’அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் 1799-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு இறந்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read: புத்தம் புது காலை - 100 : கொரோனா காலாவதியானாலும் கற்றவை வீணாகிவிடுமா... தேடல் உணர்த்துவது என்ன?

அதாவது ஓர் ஆண்டின் இறுதி நிமிடத்தில் இறந்திருக்கிறார். இந்தத் தகவல் தொகுப்பாளரின் மனதில் பதிய, ‘’டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு இறந்த ஒரு நாட்டுத் தலைவர் யார்?’’ என்று கேட்டிருக்கிறார். எந்த அணியும் ‘சரியான பதிலை’ அளிக்கவில்ல. (அப்போதெல்லாம் கணிப்பொறி, கூகுள் எல்லாம் கிடையாது. எனவே உடனுக்குடன் தகவல்களை சரிபார்க்க இயலாத சூழல்).

சில நாள்களுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்பான ஒரு நூலைப் படித்தபோது பகீர் என்பதை அறிந்துகொண்டார். ஜார்ஜ் வாஷிங்டன் இறந்தது 1799 டிசம்பர் 14 அன்று. அவர் ஒன்றும் நள்ளிரவில் இறக்கவில்லை.

கேள்வி - பதில்

கேள்விகள் எழுப்பாமல் கேட்பவற்றை ஏற்றுக்கொண்டே இருந்தால் அது நம் அறிவின் வளர்ச்சிக்கு உதவாது. கேள்விகள்தான் உலகில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கும் சமூகப் பயன்பாடுகளுக்கும் விதையாக அமைந்தது. கேள்விகளால் வேள்விகளைச் செய்யும் ஒருவன் தன் சமூகத்துக்கான சிறந்த பங்களிப்பைச் செய்கிறான்.

வாருங்கள், காலங்காலமாக நம்முள் நிலவும் மனப்போக்கை மாற்றும் கேள்விகளைக் கேட்போம். பதில்பெறுவோம்.


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/what-is-our-national-game-some-questions-that-will-change-our-mindset

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக