Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

சர்வைவர் - 17| தலைவரான உமாபதி, சிலந்தி வலையில் பார்வதி, அடிப்பட்ட விக்ராந்த்!

இந்த வாரத்துக்கான தலைவர் யார் என்கிற போட்டிதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ஆனால் சும்மா சொல்லக்கூடாது... ஐஸ்வர்யாவின் அந்த அசாத்தியான ஸ்போர்ட்ஸ்மேன்... மன்னிக்க... ஸ்போர்ட்ஸ்வுமன்ஷிப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்.

எங்கு சென்றாலும் தான்தான் ‘கன்டென்ட் குயின்’ என்பதை பார்வதி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஆம், இதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த ‘மூன்றாம் உலகம்’ பார்வதியின் வருகையால் களைகட்டி விட்டது.

சும்மா ஒரு கற்பனையான உரையாடல்:

சர்வைவர் டெக்னிக்கல் ஹெட்:- “ஏம்ப்பா… அந்த ‘மூன்றாம் உலகம்’ செட்டுக்கு ஆறு கேமராவை அனுப்பு...”

உதவி:- “ஏன்.. சார்.. வழக்கமா அங்க ஒருத்தரைத்தானே வைப்போம். அதுக்கே சரியா ஃபுட்டேஜ் கிடைக்கிறதில்ல”

“யோவ்... இப்ப பார்வதி அங்கதான் இருக்காங்க... ஒட்டுமொத்த டெக் டீமை அங்க ஷிஃப்ட் பண்ணுங்க. இனிமே அங்கதான் ஓவர்டைம் போட்டு வேலை செய்யணும். வெவரம் புரியாதவன்க...”

ஓகே… சர்வைவர் 17-ம் நாளில் என்ன நடந்ததென்று விரிவாகப் பார்க்கலாம்.

சர்வைவர் - 17

பார்வதி என்னதான் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாலும் அவர் இல்லாத குறையை வேடர்கள் அணி இப்போது ஃபீல் செய்வது உண்மை. “கடைசி டாஸ்க் நல்லாப் பண்ணாங்க... அவங்க மேல நல்ல அபிப்ராயம் வந்தது. ஆனா பேசியே கெடுத்துக்கிட்டாங்க” என்று நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரவி.

தலைவர் வேட்பாளராக நிற்கச் சொல்லி நந்தாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் ரவி. ஆனால், நந்தாவோ ‘Wait and watch’ உத்தியை பின்பற்றுகிறார் போலிருக்கிறது. ஒருவகையில் இது புத்திசாலித்தனமான மூவ். இதனால்தான் நந்தாவை ‘கிங்மேக்கர்’ என்று பார்வதி சொன்னாரோ? பார்வதி இதை ‘சர்காஸ்டிக்’ பொருளில் சொல்லியிருந்தாலும் நந்தாவின் மெளனத்தின் பின்னால் ஒரு சதுரங்க ஆட்டம் நிகழ்வது போன்ற பிரமை.

வேடர்கள் அணியில் ராமுக்கு பூச்சி கடித்ததால் ஸ்கின் அலர்ஜி வந்து விட்டது. சமையலுக்கு விறகு வெட்டும் போது விக்ராந்த்துக்கு மண்டையில் அடிபட்டு விட்டது. இந்த இருவருக்கும் மெடிக்கல் டீம் வந்து சிகிச்சை செய்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உண்மையாகவே சிரமப்படுகிறார்களா அல்லது எல்லாம் செட்டப்பா என்கிற சந்தேகம் பலருக்கு வரலாம். ஆனால் இந்தப் போட்டி உண்மையிலேயே சிரமமானது என்பதற்கான சாட்சியங்கள் இவை. ஆனால், ஆங்கில நிகழ்ச்சியோடு ஒப்பிடும் போது தமிழ் வடிவம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இரு அணிகளுக்கும் செய்தி வந்திருந்தது. இந்த வார தலைவர் போட்டிக்கு நிற்பவருக்கு ‘முடிவெடுக்கும் திறமை’ இருக்க வேண்டுமாம். காடர்கள் அணியில் உமாபதி போட்டியிட தயாராக இருந்தார். இன்னொரு வேட்பாளருக்காக ராமை அழைத்தார் விக்ராந்த். ‘’உனக்கு ஹெல்த் ஓகேல்ல... நல்லா யோசிச்சிக்க. பின்னாடி என்னை குறை சொல்லாத” என்பது போல் முன் ஜாமீன் வாங்கிக் கொண்ட விக்ராந்த், பிறகு ராமை ஓரமாக அழைத்துச் சென்று சில விஷயங்களை நேரடியாகப் பேசி தெளிவுப்படுத்திக் கொண்டது சிறப்பான விஷயம். “எதுவாக இருந்தாலும் பின்னாடி பேசாத. எனக்குப் பிடிக்காது... நேரா பேசிடு” என்பதுதான் விக்ராந்த் சொன்னதின் சாரம்.

சர்வைவர் - 17 - அர்ஜுன்

விக்ராந்த், விஜயலட்சுமி, சரண், உமாபதி போன்றவர்கள் சினிமா பின்னணி கொண்டவர்கள் என்பதால் அவர்களோடு இயல்பாகப் பழகுதவற்கு ராமுக்கு ஏதோ மனத்தடை இருக்கிறது போல. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் சட்டென்று ஒன்று கூடிவிடுவார்கள். அது சார்ந்த அரசியல் நிச்சயம் இருக்கும். ஆனால் ராம் தனது தாழ்வுணர்ச்சியைத் தாண்டி இங்கு செயல்பட வேண்டும். இது ஒரு கேம்.

“நெகட்டிவ் ஆட்கள் என்று சொன்னது அவர்களை இல்லை... என் புரிதலைத்தான் அப்படிச் சொன்னேன்” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டினார் ராம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பார்வதியின் சைலன்ட் வெர்ஷன் என்று ராமைச் சொல்லலாம். மாற்றி மாற்றிப் பேசுகிறார். எலிமினேஷன் போட்டியின் போது ‘‘நெகட்டிவ்வான ஆட்களை என்னால் ஹேண்டில் செய்ய முடியவில்லை” என்று கசப்புடன் சொன்னவர் இவர்தான்.

பார்வதியின் அனத்தல் சத்தம் இல்லாமல் வேடர்கள் தீவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறதாம். “என்ன ப்ரோ.. சொல்றீங்க?” என்று பார்வதி மாதிரியே பேசி அம்ஜத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார் ரவி. (பொறுங்கண்ணே... எங்க ஆத்தா களத்துக்கு வரட்டும்... அப்ப இருக்கு சேதி!). “ஆனா அவங்க பேசுறது க்யூட்டா இருக்கும்ல” என்றும் பாதுகாப்பாக இணைத்துக் கொண்டார். பார்வதியை இவர்கள் மிஸ் செய்கிறார்கள் போல.

சர்வைவர் - 17

பார்வதி சந்தேகப்படுவது போல் வேடர்கள் குழுவை பின்னிருந்து மெளனமாக இயக்கிக் கொண்டிருப்பது நந்தாவும் லட்சுமிபிரியாவும் என்றுதான் தோன்றுகிறது.அதிலும் லட்சுமிபிரியா பயங்கர ஸ்மார்ட்டாக இருக்கிறார். கேமராவின் முன்னால் மிக ஜாக்கிரதையாக பேசுகிறார்.

“நாராயணன் நாம சொல்ற பேச்சைக் கேட்பாரு. ஆனா நந்தாவும் ஐஸ்வர்யாவும் அப்படியில்ல. ஐஸ்வர்யாவுக்கு மொதல்ல ஸ்கெட்சு போட்டிருக்கோம். இது ஒரு கேம். ஸ்ட்ராட்டஜியாத்தான் இதை விளையாட முடியும்” என்று இன்னொரு பக்கம் மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டிருந்தார் அம்ஜத். ஆனால் அங்கும் மையமாக தலையாட்டினார் லட்சுமி பிரியா.

“இந்த நிமிஷம் வரைக்கும், நாங்க ஒரு டீம்-ன்ற ஃபீல் எனக்கு இருக்கு. இது எப்ப தனிநபர் ஆட்டமோ மாறுதோ, அப்ப என்னையும் அதுக்கேத்த மாதிரி மாத்திப்பேன்” என்பது லட்சுமிபிரியாவின் ஸ்ட்ராட்டஜி.

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று தன் டெம்ப்ளேட் வசனத்தை சொல்லி தலைவர் போட்டிக்கு அழைத்தார் அர்ஜூன். பொதுவாகவே இவர் அணியும் ஆடைகள், மிதமான நிறங்களில் மிக நேர்த்தியாக இருக்கின்றன. ஆக்‌ஷன் கிங்கிற்கு வயது ஏறத்தாழ அறுபது என்று நம்பவே முடியவில்லை.

“காடர்கள் கண்ணை மூடிட்டு வாங்க… இப்ப பாருங்க... வேடர்கள் அணியில் ஏதாவது மாற்றம் தெரியுதா?” என்று பார்வதி அந்த அணியில் இல்லாததை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார் அர்ஜுன். இதைப் பார்த்த காடர்களுக்கு பயங்கர சிரிப்பு. இந்தச் சிரிப்பில் வேடர்களும் கலந்து கொண்டார்கள். (பார்வதியக்கா இதுவரை செய்திருந்த பர்ஃபாமன்ஸ் அப்படி.) “ஐஸ்வர்யாவைத்தான் தூக்கிடுவாங்கன்னு நெனச்சேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் உமாபதி.

“வேடர்களே, நீங்க சொல்லுங்க... இப்பத்தான் உங்களுக்கு கடல் சத்தம், காத்து சத்தம்லாம் நல்லா கேக்குதாமே?” என்று இந்தப் பக்கம் வண்டியைத் திருப்பினார் அர்ஜுன். “ஆமாம் சார்... இதுவரைக்கும் பார்வதி பேசினது மட்டும்தான் காதுல ரொய்ங்க்…ன்னு கேட்டுட்டே இருந்தது. இப்பத்தான் அமைதியா இருக்கு. இனிமேத்தான் இந்த தீவுல வேறென்ன மிருகங்க இருக்குன்னு பார்க்கணும்” என்பது போல் வேடர்கள் கோரஸ் பாடினார்கள். (இந்த ஃபுட்டேஜையெல்லாம் அக்கா கிட்ட போட்டுக் காண்பிச்சா... இன்னமும் நல்லா பத்திக்கும்!).

“பார்வதி... உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாங்களோமே?” என்று அர்ஜூன் கேட்ட அடுத்த நொடியே வேடர்களின் முகங்களில் இருந்த சிரிப்பு மறைந்தது. வடிவேலு காமெடி போல ‘ஒரே ஒரு லெட்டர்தான் பார்வதி போட்டாங்க... டோட்டல் அணியோட மானமும் க்ளோஸ்” என்பது மாதிரி ஆகி விட்டது.

தலைவர் போட்டி ஆரம்பித்தது. “ஏற்கெனவே போட்டியிட்டவர்கள் வரக்கூடாது. யாராவது இருவர் மட்டுமே வரலாம்” என்று விதியை சற்று மாற்றினார் அர்ஜுன். எனவே காடர்கள் அணியிலிருந்து உமாபதி மற்றும் ராம் வந்தார்கள். வேடர்கள் அணியிலிருந்து ஐஸ்வர்யா மற்றும் நந்தா வந்தார்கள். (நந்தா ஏன் திடீரென மனம் மாறினார் என்று தெரியவில்லை).

“இது கஷ்டமான கேம். அதனால நல்லா யோசிச்சிக்குங்க” என்று எச்சரிக்கை தந்தார் அர்ஜூன். என்றாலும் முடிவில் எதுவும் மாற்றமில்லை. ஒருவகையில் இதை பளு தூக்கும் போட்டி அல்லது பளு தாங்கும் போட்டி என்று சொல்லலாம். போட்டியிடும் நபர் முதல் சுற்றில் 15 கிலோ எடை சுமையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு இதில் பத்து கிலோ கூட்டப்படும். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மேலும் ஐந்து கிலோ கூடும்.

இதில் என்னவொரு ட்விஸ்ட் என்றால், போட்டியாளர் இந்த நிலையையும் கடந்து தாக்குப் பிடித்தார் என்றால், “யார் அணியின் தலைவராக வரக்கூடாது” என்று கருதுபவர், கூடுதல் எடையை அந்தப் போட்டியாளரின் மீது சுமத்தலாம்.

சர்வைவர் - 17

முதலில் வேடர்கள் அணியில் இருந்து நந்தாவும் ஐஸ்வர்யாவும் வந்து போட்டியிட்டார்கள். எடை கூட கூட நந்தா எவ்வித சலனமும் இல்லாமல் அப்படியே நின்றார். ஆனால் ஐஸ்வர்யாவின் உத்தி ஆச்சரியமூட்டியது. அவர் தனது சுமையுடன் ஜாலியாக squat எடுக்க ஆரம்பித்தார். இதனால் சுமையானது அவரது தோளில் இன்னமும் அழுத்தும் ஆபத்து இருந்தது. ஆனால் இப்படி அசைவதின் மூலம் தன்னை ஏதோவொரு வகையில் ஐஸ்வர்யா செளகரியமாக்கிக் கொண்டார் என்று யூகிக்கத் தோன்றியது.

‘‘ரெண்டு பேரும் ஓகேதானே?” என்று அவ்வப்போது கேட்டு உறுதி செய்து கொண்டார் அர்ஜூன். இவர்களுக்கு சிரமம் தெரியாமல் இருக்க போட்டியாளர்கள் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தினார்கள். நந்தாவுக்கு நிகராக ஐஸ்வர்யா சமாளித்துக் கொண்டிருந்த விதத்தை அர்ஜூன் பாராட்டினார்.

இருவரும் மூன்று நிலைகளையும் கடந்து விட்டதால், அவரது அணியில் உள்ளவர்கள், தாங்கள் விரும்பாத தலைவருக்கு எடையைக் கூட்டலாம். நாராயணனும் அம்ஜத்தும் எழுந்து வந்து ஐஸ்வர்யாவுக்கு எடையைக் கூட்டினார்கள். இதைப் போலவே ரவியும் லட்சுமிபிரியாவும் நந்தாவுக்கு எடையைக் கூட்டினார்கள். இதில் ஐஸ்வர்யா பக்கம் அனுதாபம் இருந்ததைப் போல் தெரிந்தது. ஒரு கட்டத்தில் இரு போட்டியாளர்களும் 40 கிலோ எடையை சுமந்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு பலத்த போராட்டத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா சமாளிக்க முடியாமல் எடையை இறக்கி வைத்தார். ஆக... வேடர்கள் அணியின் இந்த வார தலைவராக நந்தா ஜெயித்தார். (அதென்னமோ சர்வைவர் ஃபார்மட்டில் மட்டும் தலைவர் பதவி, ஆசைப்படாதவங்களைத்தான் தேடி வருது!).

அடுத்ததாக காடர்கள் அணியிலிருந்து உமாபதியும் ராமும் வந்தார்கள். உண்மையில் சரண்தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்ததாம். ஆனால், இது கடினமான போட்டி என்பதால் ராமை அனுப்புகிறார்கள் போல. ராம் தனக்கு ஏற்பட்டிருக்கும் தோல் ஒவ்வாமை காரணமாக, மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருந்தார்.

முன்னர் விவரித்த அதே வழிமுறைதான். ஆனால் சிறிது நேரம் தாக்குப்பிடித்த ராம், இரண்டாம் நிலையிலேயே (25 KG) தொடர முடியாமல் எடையை கீழே போட்டு விட்டார். ஆக... அதிக சிரமம் இல்லாமல் வெற்றி பெற்றவர் உமாபதி. அவரே இந்த வாரத்தின் காடர்கள் அணித் தலைவர்.

மூன்றாம் உலகம். ஏற்கெனவே சொன்னபடி அழுது வடிந்து கொண்டிருந்த இந்த ஏரியா, பார்வதி காலடி எடுத்து வைத்ததுமே களை கட்ட ஆரம்பித்து விட்டது. (நாளைக்கு ஒரு நாயர் வந்து இங்கே டீக்கடை போடப் போவதாக ஒரு ரகசிய தகவல் வந்திருக்கிறது).

சர்வைவர் - 17

காயத்ரியிடம் பல வம்புகளை பேசி அவரை பயங்கரமாக உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் பார்வதி. இதற்குப் பொருத்தமாக சிலந்தி வலை, பூச்சி போன்ற வீடியோ ஃபுட்டேஜ்களை பொருத்தமாக இணைத்து குறும்பு செய்து கொண்டிருந்தது, சர்வைவர் டீம்.

“அடுத்த வாரம் பலியாடா யாரு இங்க வருவா?” என்கிற உரையாடலில் “வேற யாரு ஜாலி ப்ரோ... நாராயணன்தான்” என்றார் பார்வதி. ஆனால் காயத்ரியின் எதிர்பார்ப்பு ‘ராம்… அவன் மட்டும் இங்கே வரட்டும் இருக்கு அவனுக்கு” என்று கறுவிக் கொண்டிருந்தார் காயத்ரி. ஆரம்பத்தில் காயத்ரியும் ராமும் நண்பர்களாக இருந்தார்கள். பஞ்சாயத்து பிரச்னையில் ராம் அந்தர் பல்டி அடித்து விட்டார். அந்தக் கோபத்தில் காயத்ரி இருப்பது நியாயமே.

சர்வைவர் - 17

“அம்ஜத் வரட்டும்... யாரு வேண்டும்னாலும் வரட்டும்… எவனையும் நான் சட்டை பண்ண மாட்டேன்... பேசக்கூட மாட்டேன்... ஜிங்சா கச்சேரில்லாம் என்னால பண்ண முடியாது. கிளம்பும் போதுகூட எவன்கிட்டயும் நான் பேசலையே. ஆளை விடுங்கடா சாமின்னு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துட்டேன்’’ என்பது போல் லெங்க்த்தாக சுயபெருமை பேசிக் கொண்டிருந்தார் பார்வதி.

ஆனால், பார்வதியிடம் இருந்த ஒரு நல்ல விஷயத்தை பார்க்க முடிந்தது. முன்பே சொல்லியதுதான். சிலர் சிக்கலான சூழலைக் கூட தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். இந்திரஜா இருந்த போது அந்தத் தீவை சுற்றிப்பார்க்க கூட விரும்பாமல் ஒரே இடத்தில் இருந்தார். ஆனால், இப்போது பார்வதியோ “இளமை என்னும் பூங்காற்று’ பாடலை உற்சாகமாக பாடிக் கொண்டே “இந்தத்தீவுல நாம ரெண்டு பேரு மட்டும் இருக்கறது ஒரு மாதிரி நல்லாயிருக்குல்ல... அங்க இருந்ததை விட இங்க நிம்மதியா ஃபீல் பண்றேன்” என்றார். விட்டால் அங்கேயே பத்து ஏக்கர் நிலம் வாங்கி செட்டில் ஆகி விடுவார் போலிருக்கிறது. (நீங்க தமிழ்நாட்டுக்கு வேணும் பார்வதி!).

விஜயலட்சுமி, ராம் ஆகியோர் முன்னர் சொன்னதையெல்லாம் இப்போது நினைவுகூர்ந்து காயத்ரியிடம் சொல்லி அவரை கொலைவெறியாக்கிக் கொண்டிருந்தார் பார்வதி. சிலந்தி இன்னமும் உற்சாகமாக வலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. இதன் முடிவு என்னவாக இருக்கும்.

பார்த்துடுவோம்!


source https://cinema.vikatan.com/television/survivor-tamil-reality-shows-17th-episode-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக