Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

சர்வைவர் - 16 | பார்வதி அடி வாங்காத பஞ்சாயத்தே இல்ல… இறுதியாக எலிமினேட் ஆன இந்திரஜா!

‘மூன்றாம் உலக’ சேலன்ஜில் தோற்று சர்வைவர் போட்டியில் இருந்து இந்திரஜா வெளியேற்றப்பட்டார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். பெரியவர்களே ஒருவேளை கலந்துகொள்ளத் தயங்கும் இது போன்ற போட்டியில், இத்தனை இளம்வயதில் துணிச்சலாக அவர் கலந்து கொள்ள முன்வந்தது பாராட்டத்தக்கது.

வேறென்ன? பார்வதியின் அனத்தல் என்டர்டெய்ன்மென்ட்டை எங்கே இழந்து விடுவோமோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஆனால் எதிர்பார்த்தபடியே மூன்றாம் உலகத்துக்கு அவர் ஷிஃப்ட் ஆனார். ஆக… என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆகாது. காடர்கள், வேடர்கள் அணிகளுக்கு எதிராக ‘மூடர்கள் அணி’ என்று ஏதாவதொன்றை பார்வதி அங்கு உருவாக்கலாம்.

ஓகே... சர்வைவர் 16-வது எபிசோடில் என்ன நடந்தது?

ட்ரைபல் பஞ்சாயத்தில் பார்வதியின் எலிமினேஷன் முடிந்து, வேடர்கள் அணி கலைந்து சென்றார்கள். சர்வைவர் நிகழ்ச்சியின் சம்பிரதாயப்படி பார்வதியை தனியான விசாரணைக்கு அழைத்தார் அர்ஜூன். பார்வதிக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு. சபையில் சொல்ல முடியாத விஷயங்களை இங்கே சொல்லலாம். ஆனால் பார்வதிக்கு அப்போது ஒரு பேச்சு.. இப்போது ஒரு பேச்சு என்பதே கிடையாது. முன்பு என்னவெல்லாம் புகார் கூறினாரோ இப்போதும் அதையே ரிப்பீட்டில் போட்டு ஆரம்பித்தார்.

சர்வைவர் - 16

“ஒவ்வொருத்தரும் நடிக்கறாங்க. கிங்மேக்கர் நந்தா சொல்றதைத்தான் எல்லோரும் கேட்குறாங்க... என்னால அங்க நடிக்க முடியலை. நான் ஒரிஜினலா இருக்குறது அவங்களுக்குப் பிடிக்கல. ஐஸ்வர்யா என்னை முதுகில் குத்திட்டாங்க... ஒரு ஷோ பத்தி (என்ன ஷோ அது?!) நாங்க தனியாப் பேசினதை பொதுவில் போய் சொல்லிட்டாங்க.. எல்லோரும் நல்ல நடிகர்கள்...” என்று நான் ஸ்டாப்பாக புகார் பட்டியலை பார்வதி தொடர…

“எல்லோருமேவா... உங்களுக்கு எதிரா இருப்பாங்க? ஸ்ருஷ்டி கிட்ட கூட உங்களுக்கு பிரச்னை இருந்துச்சு போலயே?” என்று மடக்கினார் அர்ஜூன். ‘’நான் கீழே விழுந்தப்ப அவங்க தொடர்ந்து சிரிச்சாங்க” என்றார் பார்வதி.

நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியதுதான். ‘இந்த உலகமே எனக்கு எதிராக இருக்கிறது. நான் மட்டும் சரியாக இருக்கிறேன்’ என்று ஒருவர் கற்பனை செய்து கொள்வது அவருக்குள் நிரம்பியுள்ள எதிர்மறையான குணாதிசயத்தை மட்டுமே காட்டுகிறது... பார்வதியின் ஆதாரமான பிரச்னை இதுதான்.

“இது சர்வைவர் கேம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பிளான் பண்ணுவாங்க. உத்தி வெச்சிருப்பாங்க. நீங்க ஏன் அதையெல்லாம் பர்சனலா எடுத்துக்கணும்?” என்று சரியாக கேட்ட அர்ஜூன், இதற்கு மேலும் இவரிடம் போராட முடியாது என்பதைப் புரிந்து கொண்டு “ஓகே... இந்த விளையாட்டில் தொடர உங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்தா ஏத்துப்பீங்களா?” என்று கேட்டவுடன் “ஓ மை காட்... ஓ மை காட்...” என்று மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் பெருகிய எக்ஸ்பிரஷனை தந்தார் பார்வதி.

சர்வைவர் - 16

‘வேடர்கள் அணியை இத்தனை திட்டி விட்டு வந்திருக்கிறோமே... இனிமேல் அங்கு எப்படி செல்வது?’ என்கிற தயக்கமும் ஓரமாக அவரிடம் இருந்தது போல் தெரிந்தது. “நீங்க மூன்றாம் உலகம்-ன்னு ஒரு இடத்துக்குப் போவீங்க... அங்க சில போட்டிகள் இருக்கும். பெஸ்ட் ஆஃப் லக்” என்று சொல்லி பார்வதியை வழியனுப்பி வைத்தார் அர்ஜூன். (பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்ததில் ஆக்ஷன் கிங்கிற்கே கொஞ்ச நேரத்திற்கு தலையைச் சுற்றியிருக்கலாம்).

வேடர்கள் தீவு. அவர்களின் காலைப்பொழுதை இனிமையாக்க ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அந்தக் கடிதம் முழுக்க நீரால் நனைந்திருந்தது. ஆம், பார்வதி ஒட்டுமொத்த வேடர்கள் அணியையும் ‘கழுவிக் கழுவி ஊற்றி’ எழுதிய கடிதம் அது. பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார் பார்வதி. இதில் தப்பிப்பிழைத்தவர் நாராயணன் மட்டுமே. (ஜாலியான ஆளுப்பா அவரு!).

“எவன் வாழ்க்கையை அழிக்கணும்னே பிளான் பண்ணுவாய்ங்க..” என்று பிற்பாடு இது குறித்து மிகையாக கமென்ட் செய்து கொண்டிருந்தார் பார்வதி. ஓர் அணியுடன் பழகத் தொடங்கிய ஒரே வாரத்தில் இப்படி மிகையான கமென்ட்டுகளை அள்ளி வீசுவதற்கு முரட்டுத்தனமான குருட்டுத்தனம் வேண்டும். அதுவும் ஒரு ரியாலிட்டி கேமிற்குப் போய் இப்படியான கமென்ட்டுகள் எல்லாம் ரொம்பவே ஓவர்.

“நந்தா பயங்கரமான தந்திரக்காரர். ‘வாய்க்குதான் லாயக்கு’ (அடடே! டைட்டில் நல்லாயிருக்கே?!) என்று வந்த முதல் நாள்லயே என்னைப் பத்தி உதாசீனமா பேசினாரு. அம்ஜத்தும் ரவியும் என்னை குறைசொல்லிட்டே இருந்தாங்க... லட்சுமி எனக்கு எதிரான முடிவுகளை எடுத்தாங்க” என்று தான் எழுதிய கடிதத்திற்கு கோனார் நோட்ஸ் தந்து கொண்டிருந்தார் பார்வதி.

பார்வதியின் கடிதத்தைப் படித்து விட்டு வேடர்கள் அணி சோகத்துடன் தலையில் கைவைத்துக் கொண்டது. “ஒருத்தர் போட்டில இருந்து விலகும் போது ‘ஓகே... ஆல் த பெஸ்ட். நீங்க நல்லா பண்ணுங்க-ன்னு சொல்றதுதானேப்பா உலக சம்பிரதாயம்... இந்தப் பொண்ணு என்னப்பா லெட்டர் முழுக்க திட்டி வெச்சிருக்கு” என்று அதிர்ந்து போனார்கள்.

சர்வைவர் - 16

ட்ரைபல் பஞ்சாயத்தின் போது ‘’இந்த அணில இருந்து ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கத்துக்கிட்டேன்” என்று பூசி மெழுகிய பார்வதி, கடிதத்திலோ ‘அம்ஜத் கிட்ட கத்துக்கறதுல்லாம் ஒரு மண்ணும் இல்ல” என்பது போல் எழுதியிருந்ததைப் பார்த்ததும் அவர் காண்டாகி ‘’இந்தக் கடிதத்துல நெகட்டிவிட்டி மட்டும்தான் இருக்குது. இது வேணாம்” என்று அதைக் கிழித்தெறிந்தார்.

“நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோ.. இது கேம்தான். இதைத்தாண்டி ரியல் லைஃப்-ன்னு ஒண்ணு இருக்கு. நீ மட்டுமே ஸ்மார்ட்டுன்னு நெனக்காத” என்று ரவி கேமராவைப் பார்த்து பார்வதிக்கு சொன்ன செய்தி சிறப்பானது. பார்வதியின் உடல்மொழியை அம்ஜத்தும் ஐஸ்வர்யாவும் பிறகு கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

அறுபது, எழுபதுகளில் வந்த தமிழ் சினிமாக்களில் ஒரு சென்ட்டிமென்ட் காட்சியைக் காட்ட வேண்டுமென்றால், ஒரு முதியவர் பயங்கரமாக இருமிக் கொண்டிருப்பதைப் போலவோ அல்லது தன் வறுமையான குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு வயதான அம்மணி தையல்மெஷினை 24x7 மிதிப்பதைப் போலவோ காட்டுவார்கள். பின்னணியில் சோகமான இசை பெருக்கெடுத்து ஓடும். அது போல சர்வைவரின் சென்ட்டிமென்ட் ஏரியா என்றால் அது மூன்றாம் உலகம்தான்.

காயத்ரியும் இந்திரஜாவும் யாருமே இல்லாத திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகள் போல திரிந்து கொண்டிருந்தார்கள். ‘பசி சார்... தனிமை சார்... குளிர் சார்…” என்று அவர்கள் சொல்லும் போது கண்ணீரே வந்து விடும் போல் இருந்தது.

சென்ட்டிமென்ட் சீனை சற்று ஒதுக்கி வைத்து இதை ஆக்ஷன் காட்சியாக மாற்ற முடியுமா என்று சர்வைவர் டீம் யோசித்தது. ஆனால் அதுவும் சோகம் கலந்த சென்ட்டிமென்ட்டாகவே முடிந்தது. காயத்ரிக்கும் இந்திரஜாவுக்கும் வந்திருந்த Reward Challenge என்னவெனில், அவர்கள் ஒரு மிதவையை தயார் செய்து சற்று தூரத்தில் நிற்கும் படகிற்கு சென்றால் அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். (ஹைய்யா சோறு... சோறு..!).

சர்வைவர் - 16

சோர்ந்து போயிருந்த இருவரும் இந்த அறிவிப்பினால் உற்சாகமாகி மிதவை தயார் செய்து கடலில் தள்ளிக் கொண்டு சென்றார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மிதவையை இயக்க முடியவில்லை. காயத்ரி மேலே அமர்ந்து துடுப்பு போட, இந்திரஜா கீழே இறங்கி மிதவையை படகு நோக்கி இழுத்துச் செல்ல முயன்றார். ஆனால் இந்த சாகசப் பயணம் தோல்வியில் முடிந்தது. படகு ஒரு திசையில் இருக்க, இவர்களின் மிதவை அதற்கு எதிர்திசையில் கோக்குமாக்காக சென்றது. எனவே அவர்கள் பரிதாபமாக கரைக்குத் திரும்பினார்கள்.

ஏற்கெனவே சோறு இல்லாத சோகத்தில் ஆழ்ந்திருந்த மூன்றாம் உலக உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்... எலிமினேட் ஆன பார்வதி மூன்றாம் உறுப்பினராக அங்கு வந்து சேர்ந்தார். நாம் தனிமையான தீவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு புதிய நபர் வந்தால் மகிழ்ச்சியடைவோம் அல்லவா... ஆனால், காயத்ரி அளித்த ஸ்டேட்மென்ட் “அவங்களைப் பார்த்ததும் எனக்கு ஷாக்கா இருந்தது”. பார்வதியின் பவர் அப்படி!

“எப்படி இருக்கீங்க?” என்று இருவரையும் விசாரித்தார் பார்வதி. ‘இதுவரைக்கும் நல்லாத்தான் இருந்தோம்’ என்பது அவர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கும். “என்னது... இங்க சாப்பிடறதுக்கு சோறு இல்லையா?” என்று அதிர்ச்சியான பார்வதி, சரி வம்பையாவது மெல்வோம் என்று ஆரம்பித்தார்.

“டீம் லீடரான உன்னையே தூக்கிட்டாங்களா?” என்று காயத்ரியை நோக்கி உசுப்பேற்றிய பார்வதி, தன் அணியில் நடந்த பஞ்சாயத்தையெல்லாம் விரிவாக விளக்க ஆரம்பிக்க “பார்வதி பழைய கதையையெல்லாம் கதாகாலட்சேபம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மூன்றாம் உலகத்துல இதுவரைக்கும் ‘ஆர்க்யூமென்ட்’ன்ற விஷயம் இல்லாம இருந்தது. இனி என்ன ஆகப் போகுதோ?’’ என்று தலையைப் பிடித்துக் கொண்டார் காயத்ரி.

“நான் எல்லா ஊரு பஞ்சாயத்துலயும் அடிவாங்கியிருக்கேன்.. தெரியுமா...” என்று வடிவேலு பேசும் தற்பெருமை போல “எனக்கு ஆறு வாக்கு எதிரா விழுந்தது... என் கிட்ட நேரா சண்டை போட மாட்டாங்க... நான் ஜிங்சா போடுற ஆளு கிடையாது” என்று சொன்ன பார்வதி “நான் எதுக்கு அழணும்... அழ வேண்டியது அவிய்ங்கதான்” என்று முடித்ததுதான் நல்ல காமெடி.

இந்த மூவருக்கும் ‘அடுத்த சவால்’ பற்றிய கடிதம் வந்தது. “பெரியப்பா ஊர்ல இருந்து வாறாகளாம்…” என்பது மாதிரியே அதை இழுத்து வாசித்தார் பார்வதி. “சரி…’ என்று இழுவையுடன் பின்பாட்டு பாடினார் இந்திரஜா.

சர்வைவர் - 16

இந்தச் சவாலில் யாராவது இருவர் கலந்து கொள்ள வேண்டும். இதை இவர்களே பேசி முடிவு செய்ய வேண்டும். “நான் இப்பத்தான் ஒலிம்பிக் போட்டி முடிச்சிட்டு வந்திருக்கேன். டயர்டா இருக்கு... நீங்க ஆடுங்கப்பா” என்று எஸ்கேப் ஆனார் பார்வதி. “சரி… அப்ப பஞ்சாயத்து தலைவர் கிட்டயே முடிவை ஒப்படைச்சுடுவோம். அவர் பார்த்து சொல்லட்டும்” என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இவர்களுக்காக அர்ஜூன் காத்திருந்தார். ‘‘மூன்றாம் உலக அனுபவம் எப்படியிருக்கு?” என்று இவர்களைக் கிண்ட ஆரம்பிக்க “பசி சார்... குளிர் சார்... தனிமை சார்…” என்று அந்த சென்ட்டி கோரஸ் பாடலை மறுபடியும் ஆரம்பித்தார்கள். இதில் புதிதாக இணைந்த காந்தர்வ குரல் பார்வதியுடையது.

“அங்க பார்வதியை திடீர்னு பார்த்தவுடனே எப்படியிருந்தது?” என்று மேலும் வம்பை அர்ஜூன் கிளற “ஹிஹி… சந்தோஷமா இருந்தது” என்று காயத்ரியும் இந்திரஜாவும் மேலுக்கு சொன்னாலும் அவர்களின் மைண்ட் வாய்ஸ் அப்போது பதிவாகியிருந்தால் டெரராக இருந்திருக்கும்.

“ஓகே.. போட்டிக்குள்ள போகலாம். யாரு ரெண்டு பேர்னு முடிவாகலையா சரி... கல் ஜோசியம் பார்த்துடுவோம்” என்றபடி சாக்குப்பையை எடுத்தார் அர்ஜூன். அதில் இருக்கும் மூன்று கற்களில் கறுப்பு நிற கல் வந்தால் அவர் போட்டியிடத் தேவையில்லை. வெள்ளை நிற கல் வந்தால் போட்டிக்கு வர வேண்டும். இதில் பார்வதி எஸ்கேப் ஆகி விட, காயத்ரியும் இந்திரஜாவும் போட்டியில் இறங்கியாக வேண்டும்.

ஆனால் இந்த இருவருக்குமே ‘தாங்கள்... இன்று போட்டியிடப் போகிறோம்’ என்கிற உள்ளுணர்வு இருந்தது. அதிலும் இந்திரஜாவை வென்று காட்ட வேண்டும் என்கிற துடிப்பில் இருந்தார் காயத்ரி. ஏனெனில்’ ‘காயத்ரிக்கு டஃப் பைட் கொடுப்பேன்” என்று முன்பு இந்திரஜா சொல்லியிருந்தார். பழிக்குப் பழி.

சர்வைவர் - 16

ஒரு கயிறு வலைக்குள் நான்கு க்யூப்கள் இருக்கும். அதை வெளியே எடுத்து விட்ட பிறகு நான்கு க்யூப்களையும் சரியான வரிசையில் அடுக்க வேண்டும். எந்தவொரு பக்கத்திலும் ஒரே நிறம் இரண்டு முறை வரக்கூடாது. இதுதான் போட்டியின் விதிமுறை.

வலைக்குள் இருந்து க்யூப்களை எடுக்க இருவரும் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தினார்கள். இதில் காயத்ரியின் உத்தி சிறப்பானதாக இருந்தது. அவர் நான்கு க்யூப்களையும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தி வந்தார். ஆனால் இந்திரஜாவோ முதல் க்யூபை மட்டும் நகர்த்தி நகர்த்தி வெளியே கொண்டு வந்த பிறகு அடுத்ததிற்கு மீண்டும் சென்றார். இது நேர விரயத்தை ஏற்படுத்தும்.

காயத்ரி அனைத்து க்யூப்களையும் விரைவில் வெளியே கொண்டு வந்து விட்டாலும் அதை முறையான வரிசையில் அடுக்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார். எப்படி அடுக்கி விட்டுப் பார்த்தாலும் ஒரே நிறத்தில் இரண்டு க்யூப்கள் வந்தன. பிறகு இந்திரஜாவும் வந்து இணைந்து கொண்டார். இருவருமே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சில பரபரப்பான நிமிடங்கள் கடந்ததும் “ஒரு சின்ன க்ளூ தர்றேன்... படிப்படியா அடுக்கினா கொஞ்சம் ஈஸியா வந்துடும். மூணு க்யூபை செட் பண்ணிட்டா நாலாவது ரொம்ப சுலபம்” என்று அர்ஜூன் டிப்ஸ் தந்ததும் காயத்ரியின் முகத்தில் திடீர் வெளிச்சம் வந்தது. அவர் மறுபடியும் வரிசையைக் கலைத்து ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து அடுக்கத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் சரியாக அடுக்கி இந்த சவாலில் வெற்றி பெற்றார்.

ஆக... இந்தப் போட்டியில் இருந்து இந்திரஜா நிரந்தரமாக வெளியேற்றப்படுவது உறுதியாகி விட்டது. ஒருவகையில் அவர் வீட்டுக்குப் போகும் எண்ணத்துக்கு முழுதாக வந்து சேர்ந்து விட்டார் என்பதை முந்தைய வாக்குமூலங்களில் இருந்து அறிய முடிகிறது. எனவே இந்தத் தோல்வி அவருக்கு அத்தனை பெரிய அதிர்ச்சியைத் தராது.

“இந்தத் தீவை மிஸ் பண்ணுவேன். என் டீமை மிஸ் பண்ணுவேன்... ஆனா மூன்றாம் உலகத்தை மிஸ் பண்ண மாட்டேன். பயங்கர அனுபவம். என்னோட பத்தொன்பது வயசுல என் ஃபேமிலியை விட்டு வெளியே வந்தது இதுதான் முதன்முறை. என் மீது எதிர்பார்ப்பு வைத்த பெற்றோர்களை ஏமாற்றி விட்டேன். ஸாரி… ஆனா நான் இருநூறு சதவீதம் முயற்சி செய்துதான் தோற்றேன்…’’ என்றபடி விடைபெற்றார் இந்திரஜா.

சர்வைவர் - 16

உடனே நம் மனோதத்துவ நிபுணரான பார்வதி, இந்திரஜாவின் வெளியேற்றத்தைப் பற்றி வம்பு பேசத் துவங்கி விட்டார். “அவ இருநூறு சதவீதம் முயற்சி செஞ்சேன்னு சொல்றதுல எனக்கு லைட்டா சந்தேகம் இருக்கு. அவளுக்கு வீட்டுக்குப் போக ஆசை வந்துடுச்சு போல!”

“காயத்ரி... நீங்க மூன்றாம் உலகத்தின் ரெண்டாவது சேலன்ஜ்லயும் ஜெயிச்சுட்டீங்க வாழ்த்துகள்... என்ன சொல்ல விரும்பறீங்க?” என்று அர்ஜூன் கேட்டதும் “நான் என் tribe-க்கு திரும்பணும்... ‘என்னை வேணாம்’னு முடிவு செஞ்சி அனுப்பியவங்க முன்னாடி என்னை நிரூபிக்கணும்” என்று உறுதியாகப் பேசினார் காயத்ரி. நல்ல விஷயம்.

அதற்கு முன் காயத்ரி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால் ஒன்று இருக்கிறது. அது பார்வதியுடன் நாட்களைக் கழிக்கப் போகிற கடினமான சவால். இதில் அவர் எத்தனை தூரம் வெற்றி பெறுவார்?

பார்த்துடுவோம்!


source https://cinema.vikatan.com/television/survivor-tamil-reality-shows-episode-16-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக