Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

ஆவடி: சிறுவர்களை குறி வைக்கும் கொள்ளையர்கள்! - அச்சத்தில் பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (42). இவரின் மனைவி தமிழ்செல்வி (39). இந்த தம்பதிக்கு பரத்வாஜ் (14), கேசவன் (12) என இரு மகன்கள் உள்ளனர். நாராயணன் அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் சிறுவர்கள் இருவரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாகப் பாடங்களைக் கவனித்து வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் தம்பதியினர் இருவரும் வழக்கம் போல் சிறுவர்களை வீட்டில் விட்டு விட்டு, தையல் கடைக்குச் சென்றனர்.

வீட்டில் சிறுவர்கள் இருவரும் தனியாக இருந்த நிலையில், அவர்களை நோட்டமிட்டு கதவைத் தட்டிய மர்மநபர்கள் சிலர் சிறுவர்களிடம், "உங்கள் தந்தை எங்களிடம் கடன் பெற்றிருந்தார். அந்த பணத்தை இன்று வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறியிருந்தார். அதனால் தான் வந்திருக்கிறோம்" என்று கூறியிருக்கின்றனர். அவர்களின் பேச்சை நம்பிய சிறுவர்கள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

சிறுவர்களை ஏமாற்றி கொள்ளை

Also Read: `தடுப்பூசி போட வந்துருக்கேன்' - ஆவடியில் சிறுவர்களை ஏமாற்றி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்

அதையடுத்து, போனில் நாராயணனிடம் பேசுவது போல் காட்டி கொண்ட மர்ம நபர்கள், "உங்கள் தந்தை பீரோவிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்கிறார். எனவே, சீக்கிரமாக எடுத்து வாருங்கள்" என்று கூறி சிறுவர்களை நம்ப வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் பீரோவை திறக்க சென்றிருக்கின்றனர். அந்த நேரத்தில், அவர்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு, திசைதிருப்பிய மர்ம நபர்கள் அவர்கள் வருவதற்குள் பீரோவை திறந்து, அதிலிருந்த பணம் மற்றும் நகைகளைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கின்றனர். மர்ம நபர்கள் பணத்தைத் திருடிக் கொண்டு தப்பியோடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்திருக்கின்றனர்.

Also Read: இரவு 10 மணிக்குப் பூட்டிய வீடு; 11 மணிக்குக் கொள்ளை! - சுற்றுலா சென்ற பொறியாளர் வீட்டில் துணிகரம்

ஆனால், கொள்ளையர்கள் அதற்குள் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், தையல் கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்கு விரைந்த தம்பதி இருவரும் பீரோவை சோதனை செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் 10 சவரன் தங்கநகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் குறித்து நாராயணன் ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொள்ளை

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே ஆவடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களிடம், தடுப்பூசி போட வந்திருப்பதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்து, மர்ம நபர் ஒருவர் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருந்த நிலையில், மீண்டும் அதே பாணியில் அரங்கேறியிருக்கும் இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/avadi-police-are-in-search-of-the-thieves-who-cheated-the-boys-and-looted-the-jewelry-and-money

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக