Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

`பொங்கலுக்குள் ஆந்திரா பொன்னிக்கு நிகரான புதிய நெல் ரகம்!' - உலக நெல் மாநாட்டில் அறிவிப்பு

தஞ்சாவூரில் இயங்கி வரும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகமும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையமும் இணைந்து நடத்திய உலக நெல் மாநாடு, தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய வேளாண் ஆய்வுக் கழக இயக்குநர் ஏ.கே.சிங், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தேசிய வாழை ஆராய்ச்சி இயக்குநர் வி.அம்பேத்கர் மைய இயக்குநர் எஸ்.உமா, ஆடுதுறை நெல் ஆராய்சி நிறுவனத்தின் இயக்குநர் அம்பேதகர் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

உலக நெல் மாநாடு

Also Read: `வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!' - விவசாயிகளின் வேண்டுகோள்

இம்மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார். ``தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது, வேளாண் பல்கலைக்கழகம் 50-வது ஆண்டை நிறைவு செய்து, 51-ம் ஆண்டில் தொடங்குவதால் பொன் விழாவாகக் கொண்டாடுகிறோம். வேளாண் பல்கலைக் கழகத்தில் நிறைய துறைகள் உள்ளன. இந்தப் பொன் விழா ஆண்டையொட்டி, இத்துறைகள் மூலம் ஆங்காங்கே தேசிய அளவில் அல்லது பன்னாட்டு அளவில் கருத்தரங்குகள் நடக்கின்றன. இதன்படி, இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஆடுதுறையிலுள்ள நெல் ஆராய்ச்சி நிலையம் இந்த நெல்லுக்கான கருத்தரங்கம் நடத்துகிறது. இதில், கிட்டத்தட்ட 350 பேர் பங்கேற்றுள்ளனர். வெளிநாட்டிலிருந்து 30 விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளை அளித்துள்ளனர்.

நெல் விளைச்சலில் உலக அளவில் நம் நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. இதை முதலிடத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல் நம்முடைய பாரம்பர்ய உணவுப் பொருள். நெல் உற்பத்தி பெருகிக்கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம், நிலப் பற்றாக்குறை, பருவ மழை தவறி பெய்தல், புதிய நோய்கள், பூச்சிகள் அதிகமாக வருதல் போன்ற பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் ஆதாரம் மிக மோசமாக உள்ளது. நிலத்தடி நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தினாலும், அதைச் சேமிக்கவும் வேண்டும். மழைக்காலத்தில் மழை நீரைச் சேமித்து வைத்தால், நிலத்தடி நீர் ஆதாரம் குறையாது.

உலக நெல் மாநாடு

Also Read: 120 ரகங்கள், 2 லட்சம் மலர்ச்செடிகள்; தளர்வுகளுக்கு பின் மலர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி!

இச்சூழ்நிலையில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி நெல் விளைச்சல் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. வறட்சியை எதிர்கொண்டு வளர வைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திரா பொன்னிக்கு நிகரான, புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனைகள் முடித்து தயார் நிலையில் உள்ளது. வருகிற பொங்கல் அன்றோ, அதற்கு முன்பாகவோ அறிமுகம் செய்ய உள்ளோம். இந்தப் புதிய நெல் ரகமானது. பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகமாகவும் இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 29 முதன்மை நெல் விஞ்ஞானிகள் தங்களின் ஆராய்ச்சி அனுபவங்களைக் காணொலி வாயிலாகப் பகிர்ந்துகொண்டனர். மத்திய மற்றும் மாநில அரசு நிறுவன விஞ்ஞானிகள், வேளாண்மை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை பதிவு செய்தனர். இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.



source https://www.vikatan.com/news/agriculture/tnau-vice-chancellor-said-that-new-paddy-variety-like-andhra-ponni-to-be-introduced

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக