Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

சர்வைவர் - 13 | ஓவர் ஆக்டிங் பார்வதியும், ஆப்ரிக்க தீவில் தூள் கிளப்பிய 'ரவுடி பேபி' பாடலும்!

காடர்களும் வேடர்களும் தங்களின் ஆடல், பாடல் கலைத்திறமையைக் காண்பித்ததுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். (இதை ‘ஹைலைட்’ என்று சொல்லலாமா என்று தெரியவில்லை). தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் அணிக்கு ‘இம்யூனிட்டி சேலன்ஞ்சில்’ ஒரு சிறப்பு அனுகூலம் இருக்குமாம்.

மாசாய் என்கிற இனக்குழுவைச் சேர்ந்த பழங்குடிகள் தீவுக்கு வந்து விழாவைச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தது.

எந்த அணி சிறப்பாக தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள்?

சர்வைவர் பதிமூன்றாவது நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 13

கென்யா மற்றும் தான்சானியாவில் வாழும் ஒரு பழங்குடிதான் மாசாய் இனக்குழு. இவர்கள் வேட்டையில் சிறந்தவர்கள். நாடோடி வாழ்க்கையை மேற்கொள்பவர்கள். இவர்களின் தனித்துவமான கலாசாரத்தினால், உலகின் பிரபலமான இனக்குழுக்களுள் ஒன்றாக அறியப்படுகிறார்கள். ‘மா’ என்னும் மொழியைப் பேசும் இவர்கள், சுவாஹலி மற்றும் ஆங்கில மொழியையும் கற்கிறார்கள்.

ஏதோ பத்து மார்க் விடைக்கான பதில் போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா... ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு நேற்று சிறப்பு விருந்தினர்களாக வந்த பழங்குடி மக்களைப் பற்றிய சுருக்கமான பயோடேட்டா இது.

‘ஜாம்போ... ஜாம்போ…” என்று சொல்லியபடி அதிகாலையிலேயே தீவுக்கு வந்த பழங்குடியினர், காடர்கள் மற்றும் வேடர்கள் தங்கியிருக்கும் ஏரியாவில் வந்து அவர்களை எழுப்பினார்கள். ‘ஜாம்போ’ என்றால் ‘குட்மார்னிங்’ போல என்று நம்மாட்களும் குன்சாக புரிந்து கொண்டு பதிலுக்கு ‘ஜாம்போ… ஜாம்போ’ என்று சொல்லி அவர்களை வரவேற்றார்கள்.

மாசாய் இனத்தினர் வேட்டையில் சிறந்தவர்கள் என்பதால் ஈட்டி எறிதல், அம்பு எறிதல் போன்றவற்றை ‘சர்வைவர்’ போட்டியாளர்களுக்கு கற்றுத் தந்தார்கள். ஆக... வரும் எபிசோடுகளில் இவர்கள் சிங்கத்தை வேட்டையாடும் பரபரப்பான சாகசக் காட்சிகளை நாம் பார்க்கப் போகிறோமா என்று கோக்குமாக்காக எல்லாம் எண்ணிக் கொள்ளக் கூடாது. மெரீனா பீச்சில் பலூன் சுடுவது போன்று இதெல்லாம் ஒரு ஜாலிக்காக. போட்டியாளர்களில் சிலர் சீரியஸாக அம்பு விட ட்ரெய்னிங் எடுக்கும் போது இம்சை அரசன் வடிவேலு அநாவசியமாக நினைவுக்கு வந்து போனார்.

சர்வைவர் - 13

மாசாய் இனக்குழுவினர் தங்களின் நடனத்தை ஆட ஆரம்பித்தனர். இளையராஜா பாடல்களில் வரும் இனிமையான கோரஸ் போல ஒரே குரலில் பாடிக் கொண்டே அவர்கள் நடனமாடியது நன்றாக இருந்தது. ஸ்பிரிங் வைத்த பந்து போல நிலத்திலிருந்து ஐந்தடிக்கு எம்பிக் குதிப்பதுதான் அவர்களின் ஸ்பெஷல் திறமை போலிருக்கிறது. அவர்கள் குதிப்பதை வெறுமனே பார்க்கும் போதே நமக்கு முட்டி வலிக்கிறது.

“அவர்களின் இசையில், நடனத்தில் உள்ள தாளத்தை என்னால் நெருக்கமாக உணர முடிகிறது” என்றார் ராப் பாடகர் லேடி காஷ். “அவங்க எப்பவும் சந்தோஷமா இருக்காங்க. அதுதான் இதுல முக்கியமான செய்தியா எனக்குத் தெரியுது” என்றார் அம்ஜத். “நானும் உங்க மாதிரியே இருக்கேன் பாருங்க” என்று அவர்களுடன் ஐக்கியமானார் ரவி.

இரண்டு அணிகளுக்கும் செய்தி வந்தது. அதேதான். கலை நிகழ்ச்சி சார்ந்த அறிவிப்பு. இதில் மூன்று அயிட்டங்கள் இருக்கும். ஒரு தமிழ் பாடல் பாட வேண்டும். ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும். ஒரு சீனை உருவாக்கி நடித்துக் காட்ட வேண்டும். ‘’என்ன செய்யலாம்..?” என்று வேடர்கள் அணி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் போது ‘ஐஸ்வர்யா பாடடட்டும்.. பார்வதி ஆடட்டும்’ என்பது மாதிரி பேசிக் கொண்டார்கள்.

இதில் என்ன காமெடி என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு எதிர் அணியைப் பற்றி வம்பு பேசும் போது ‘ஐஸ்வர்யா.. ஆட... பார்வதி பாட…’ என்று விக்ராந்த் கிண்டல் செய்து கொண்டிருந்தார். அவர் நகைச்சுவைக்காக சொன்னது இப்போது உண்மையாகவே நிகழப் போகிறது.

எதை வைத்து நாடகம் போடலாம்? என்று ஆலோசிக்கும் போது லேடி காஷின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, அவர் கடந்து வந்த பாதையை வைத்து சிறு நாடகம் போடலாம் என்று முடிவு செய்தது, வேடர்கள் அணி.

அந்தப் பக்கம், காடர்கள் அணி ‘ரவுடி பேபி’ பாடலை வைத்து நடனமாட முடிவு செய்தார்கள். விஜி மற்றும் உமாபதி இதற்கு ஆடுவார்களாம். இதற்கான ஒத்திகையின் போது ‘செட் பிராப்பர்டி’ என்கிற பெயரில் ஷூவை சுத்தம் செய்வதற்காக ராமின் முதுகுப் பகுதியை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் உமாபதி.

சர்வைவர் - 13

‘’களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’’ என்று அழைப்பு விடுத்தார் அர்ஜூன். மாசாய் பழங்குடிகளில் இருந்து நாலைந்து பேர் சிறப்பு பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். அவர்கள்தான் இன்று போட்டியாளர்களின் கலைத்திறமையைப் பார்த்து மதிப்பிடப் போகிறார்களாம். மிகச் சிறப்பான விஷயம் இது. தங்களின் பிரத்யேக நடனத்தை அவர்கள் ஆடிக் காட்டினார்கள். அதில் ஓர் இளைஞர், ஸ்பிரிங் வைத்த பந்து போல மிக அநாயசமாக எம்பிக் குதித்துக் கொண்டேயிருந்தார்.

முதலில் காடர்கள் அணியில் இருந்து வந்த லேடி காஷ், ராப் பாடலைப் பாட அதற்கு வாயினால் சப்தம் கொடுத்து உதவினார் ராம். பிறகு வந்த ஐஸ்வர்யா, ‘மரியான்’ திரைப்படத்தில் வந்த.. ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?’ பாடலை பாடி முடித்தார். தமிழ் அவ்வளவாக தெரியாமல் இதை அவர் பாடியதுதான் விசேஷமான அம்சம். பழங்குடி நீதிபதிகள் ‘வெரி குட்...’ என்று இதை சிலாகித்து மகிழ்ந்தார்கள்.

அடுத்த வந்த உமாபதியும் விஜயலட்சுமியும் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடினார்கள். பின்னணியில் துணை நடிகர்களாக விக்ராந்த், ராம் போன்றவர்கள் பங்குபெற்றார்கள். ஆனால் சும்மா சொல்லக்கூடாது... இருவரின் நடனத்திறமையும் நன்றாகவே இருந்தது. குறிப்பாக இந்தப் பாடல் பழங்குடி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. துள்ளிக் குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் வெளியான ‘ரகிட... ரகிட…’ பாடலுக்கு ரவி, ஐஸ்வர்யா, பார்வதி ஆகியோர் நடனமாடத் தொடங்க மற்றவர்களும் பின்னணியில் வந்து இணைந்து கொண்டார்கள். ஒரு மாதிரியாக இந்தக் கூத்து நடந்து முடிந்தது.

சர்வைவர் - 13

அடுத்ததாக டிராமா. ஒரு ராப் பாடகர் ஆவதற்கு லேடி காஷ் கடந்து வந்த சிரமங்களை சுருக்கமாக விவரிப்பதாக இது இருந்தது. சிங்கப்பூரில் மிடில் கிளாஸ் தமிழ் குடும்பத்தில் பிறந்த கலைவாணி என்கிற இளம் பெண், ராப் பாடகராக ஆகும் விருப்பத்துடன் தன் தந்தையிடம் கெஞ்சி அனுமதி வாங்கி சென்னைக்கு வருகிறார்.

ஆனால் இங்கு அவர் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. கோபமும் வருத்தமும் அடையும் அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு வருகிறது. பாடகர் பென்னி தயாள் அழைக்கிறார். இதை நம்ப மறுக்கும் லேடி காஷ், அவநம்பிக்கையுடன் செல்ல, அங்கு உண்மையாகவே ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ திரைப்படத்துக்காக பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. கலைவாணி என்கிற இளம்பெண் ‘லேடி காஷ்’ என்கிற பிரபல ராப் பாடகராக உருமாறியதின் சுருக்கம் இது.

லேடி காஷின் தந்தையாக விக்ராந்த், தயாரிப்பாளராக ராம், அவரின் உதவியாளராக சரண் போன்றோர் நடித்தார்கள்.

அடுத்தது வேடர்கள் போட்ட டிராமா. இந்தத் தீவில் உணவுக்காக அவர்கள் பட்ட கஷ்டத்தையே நகைச்சுவையாக மாற்றினார்கள். “சமைப்பதற்கு இங்கு எதுவுமே இல்லையே. உப்பு, இனிப்பு, கசப்பு என்று அறுசுவையுடன் இன்னொரு ‘ப்பு’வும் இல்லையாம். அது நெருப்பு. இயற்கையான விஷயங்களில் இருந்தே இந்த அறுசுவை அம்சங்களை தேடிக் கொண்டு வருகிறேன் என்று ஆளாளுக்கு கிளம்பினார்கள்.

சர்வைவர் - 13

ஆனால் இவர்கள் ஆசையாக சமைத்த உணவில் அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் பூனையொன்று வாய் வைத்து விட, உணவைச் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்களாம். பசியில் இருந்தாலும் இவர்கள் சில விஷயங்களை இழக்கவில்லையாம். ‘துணிச்சல், அன்பு...’ என்று ஆளாளுக்கு ஓர் உணர்ச்சிகரமான வார்த்தையைச் சொல்ல பார்வதி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ‘ஒற்றுமை’. இதைக் கேட்டதும் பழங்குடி ஆசாமிகளே விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். பார்வதியின் ஓவர்ஆக்டிங் பர்ஃபாமன்ஸோடு இந்த ஸ்கூல் டிராமா ஒருவழியாக நிறைந்தது.

‘அவனவன் பூனையையே போட்டு சமைக்கிறான். அந்த மாதிரி சாப்பாடு கிடைக்காத ஏரியால இருந்துக்கிட்டு, இவிய்ங்க பூனை வாய் வெச்சதால சாப்பிட மாட்டார்களாம். என்ன கொடுமை சார்... இது?!

தீர்ப்பு வெளியாகும் நேரம். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் பழங்குடிகளிடம் ‘எப்படியிருந்தது?’ என்று கேட்டு அறிந்து கொண்ட அர்ஜூன், இப்போது அவர்களுடன் கூடிப் பேசி முடிவுகளை அறிவிக்கத் தொடங்கினார்.

அதன்படி ஆண்களில் சிறப்பான பங்களிப்பு செய்தவர் ‘உமாபதி’யாகவும் பெண்களில்’ ஐஸ்வர்யா’வும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இருவரின் நடனத்திறமையும் நன்றாக இருந்ததாம். குறிப்பாக மண்ணில் அரைவட்டம் அடித்து டான்ஸ் ஆடிய ஐஸ்வர்யா அவர்களை வியக்க வைத்து விட்டாராம். (பார்வதியின் மைண்ட் வாய்ஸ் இப்போது என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க நமக்கே திகிலாகத்தான் இருக்கிறது). இந்த இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பரிசு அளிக்கப்படுமாம். (பூனை பிரியாணியா?!).

இரண்டு அணியினரும் நடத்திய நாடகத்தில் லேடி காஷின் வாழ்க்கையைப் பற்றிய நாடகம் உணர்வுபூர்வமானதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆக.. காடர்கள் அடைந்த ஆறுதல் வெற்றியாக இதைச் சொல்லலாம்.

மூன்றாம் உலகம். ‘பாவம்... யாரு பெத்த பிள்ளைகளோ. இப்படி அநாதையா சுத்துதுங்களே’ என்கிற இரக்கத்தை காயத்ரியும் இந்திரஜாவும் கூடுதலாக எழுப்பினார்கள். நாடு கடத்தப்பட்டவர்களைப் போல இவர்கள் தனிமையில் வாடுவதைப் பார்க்க சகிக்கவில்லை.

இவர்கள் ஒருமாதிரியாக நெருப்பை வரவழைத்து அரிசியையும் பருப்பையும் கலந்து சமையல் செய்து முடித்தார்கள். ஒரு சிக்கலான சூழலையும் தனக்கு சாதமாக்கிக் கொள்பவர்கள் சிலர்தான். “வா... இந்தத் தீவை சுத்தி பார்க்கலாம்னு இந்திரஜாவை கூப்பிட்டேன். வரமாட்டேன்னுட்டா... சமைக்கிறா... அங்கயே தங்கிக்கறா.. அவ்வளவுதான்” என்று வருத்தத்துடன் சொன்னார் காயத்ரி.

“பாரு... இங்க இருந்து நம்ம தீவைப் பார்க்க முடியுது. கொஞ்சம் நடந்து போய் நீந்திப் போயிட்டா தீவை எட்டிப் பிடிச்சுடலாம்.. என்று காயத்ரி ஒரு டெரரான யோசனையைச் சொல்ல ‘நான் முன்னாடியே யோசிச்சேன். அதெல்லாம் ஆவற கதையில்ல’ என்று தட்டிக் கழித்தார் இந்திரஜா.

நாளை இரு அணிகளுக்கும் ‘இம்யூனிட்டி சேலன்ஞ்’ இருக்கிறது. இதில் தோற்கும் அணியிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். (வேற எங்க... மூன்றாம் உலகம் என்கிற பக்கத்துல இருக்கிற பிரான்ச்தான்).

இதிலாவது காடர்கள் வெல்வார்களா… வேடர்கள் தோற்கும் பட்சத்தில் பார்வதி என்ன ஆவார்?!

பார்த்துடுவோம்!


source https://cinema.vikatan.com/television/survivor-tamil-reality-shows-episode-13-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக