Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

`உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வியும், திமுக-வின் பதிலும்!

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த வாரம் ராணிப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், ``திமுக அமைச்சரவையில் எட்டு அமைச்சர்கள் முன்னாள் அதிமுக உறுப்பினர்கள். திமுகவில் ஆள் இல்லாததினால் வாடகைக்கு ஆள் பிடித்து கட்சி நடத்துகிறார்கள். அதுமட்டுமல்ல 15 முன்னாள் அதிமுக உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிமுகவில் உண்மையாக உழைக்கும் யாரும் உயர்ந்த பதவிக்கு வரலாம். அதுவே திமுகவில் வர முடியுமா? நீங்கள் கருணாநிதியின் மகனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதிமுகவின் சாதாரண தொண்டனைக் கூட வெல்ல முடியாது. அதிமுகவில் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தொண்டர்கள்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், ``திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்ட ஒழுங்கு தானாகச் சீர்குலைந்து விடும். ரெளடிகள் அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். இதை நாம் இந்த குறுக்கிய காலத்தில் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த நான்கு மாத காலத்திலேயே எத்தனை கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என்று குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான உதவியைச் செய்தோம். ஏழை எளிய மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தோம். கல்வி கற்கத் தேவையான திட்டங்களைக் கொண்டு வந்தோம்.

தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. சம்பிரதாயத்திற்கு ஒரு சில அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுள்ளது. அதிமுகவின் ஒரு வாக்கு எங்கு இருந்தாலும் அவர்களை அழைத்துவந்து பதிவு செய்யவேண்டும். அதே போல பூத் ஏஜென்ட்டாக இருப்பவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். நம்மைத் திசை திருப்பி கள்ள ஓட்டுப் போட்டுவிடுவார்கள். பெட்டியைச் சீல் செய்து இருப்பிடம் போகும்வரை பின்னால் காவலுக்குச் செல்லவேண்டும். மையத்திலும் கண்ணும் கருத்துமாகக் காவலுக்கு இருக்க வேண்டும். இல்லை என்றால் பெட்டியை மாத்தி விடுவார்கள், அது அவர்களுக்குக் கைவந்த கலை. வாக்கு எண்ணும்போதும் கவனமாக இருக்க வேண்டும் அங்கும் ஏதாவது தில்லு முல்லு செய்து வெற்றிபெற வாய்ப்புள்ளது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, ``திமுக-வில் கருணாநிதி, அதற்குப் பிறகு அவரின் மகன். குரங்கு குட்டி தாவிப் போகும், அதுபோல உதயநிதி என்ற குட்டியும் தாவிப் போய்க்கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுக-வில் உள்ள மூத்த அமைச்சர்கள் கூட உதயநிதியிடம் கையை கட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதையெல்லாம் சட்டமன்றத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அமைச்சர் பேரன் வயதிருக்கும் உதயநிதியிடம் கையை கட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக-வில் அப்படி இல்லை, உண்மையாக பணியாற்றினால், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் சாதாரண தொண்டன் கூட மேலே வர முடியும். திமுகவில் வரமுடியுமா? திமுக கட்சி தேய்த்துக்கொண்டே போகிறது" என்று கூறினார்.

Also Read: ``உதயநிதி புகழாரம் முதல் துரைமுருகன் பெருமிதம் வரை" - சட்டசபை ஹைலைட்ஸ்!

பழனிசாமியின் இந்த கருத்து தொடர்பாக திமுக-வின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``உதயநிதி குறித்துப் பேசுவதற்கு முன்னர், முதல்வர் பழனிசாமி பதவியேற்கும் முன்பு அவருக்கு என்ன தகுதி இருந்தது. அதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளர் ஆகும்போது, அதற்கு முன்பிருந்த தலைவர்கள் நிலை என்ன ஆனது. சசிகலாவிடம் மண்புழு போல ஊர்ந்து சென்று பதவியேற்றார் பழனிசாமி. பதவி வழங்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. தமிழர்களின் துரோகிகளான பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு தமிழர்களுக்கே துரோகம் செய்தவர் அவர். அவருக்கு உதயநிதி பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தொடர்ந்து பேசியவர், `` உதயநிதி கட்சிக்கு வருவதற்கு முன்பே, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர். கட்சி தொண்டர்கள், உறுப்பினர்களின் தொடர் வேண்டுகோள் காரணமாகக் கட்சியில் இணைத்தார். கடுமையாகக் கட்சி வேலைகள் செய்து இளைஞர் அணி செயலாளராக ஆனார். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பணி செய்தவர் அவர். அதுமட்டுமில்லாது சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் 69,355 வாக்குகள் வித்தியாசம் வெற்றிபெற்றுள்ளார். கட்சி உறுப்பினர்கள் மட்டுமில்லாது பொதுமக்களாலும் அதிகம் நேசிக்கப்படுபவர் உதயநிதி" என்று விளக்கமளித்தார்.

Also Read: `உதயநிதி Vs விஜய்' - தயாராகும் தேர்தல் களம்?



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-qualification-udayanidhi-stalin-have-edappadi-palanisamy-question-and-dmk-answer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக