திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ்(40). காய்கறி வியாபாரம் செய்துவரும் இவருக்கு முருகேஸ்வரி(35) என்ற மனைவியும், சந்தோஷ் 15) என்ற மகனும் செளந்தர்யா(13) என்ற மகளும் உள்ளனர்.
முருகேஸ்வரி சிலுக்குவார்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் நூறு நாள் வேலைக்குச் சென்றுவந்துள்ளார். சந்தோஷ் சிலுக்குவார்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்துவந்தார். செளந்தர்யா கரியாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல சந்திரபோஸ் நிலக்கோட்டை சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு காய்கறி வியாபாரத்திற்கு கிளம்பினார். அப்போது அவர் காய்கறி எடைபோடும் தராசை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து மகன் சந்தோஷூக்கும் போன் செய்து தராசை எடுத்துவருமாறு சந்திரபோஸ் கூறியுள்ளார். சந்தோஷ் தராசைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கூட சந்தோஷ் அருகில் இருந்தவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகு சிறிது நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டு முருகேஸ்வரி, சந்தோஷ், செளந்தர்யா மூவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சந்திரபோஸ் வீட்டு முன்பு திரளாகக் கூடினர். இச்சம்பவத்தால் கரியாம்பட்டி பகுதியே சோகத்தில் மூழ்கியது.
தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 3 உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read: சென்னை: 16-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை! - போலீஸ் தீவிர விசாரணை
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``வழக்கமான மாமியார் மருமகள் சண்டை மட்டும் இருந்துள்ளது. அதுவும் எப்போதாவது தான் நடந்திருக்கிறது. கடன் பிரச்னைகள் எதுவும் இல்லை. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் இல்லை. உறவினர்களிடமும், சுற்றுப்பகுதி மக்களிடமும் விசாரித்துவிட்டோம். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/three-members-of-the-same-family-commit-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக