Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

செவ்வாயில் ரோபோக்களுக்கு `லீவு'... இரண்டு வாரங்களுக்குத் தகவல் தொடர்பை நிறுத்திவைக்கும் நாசா! ஏன்?

செவ்வாயில் அயராது வேலை பார்த்து வரும் ரோவர்களுக்கும், லேண்டர்களுக்கும் மற்றும் ஆர்பிட்டர்களுக்கும் கொஞ்சம் விடுமுறை அளிக்கவிருக்கிறது நாசா. ரோபோக்களுக்கு விடுமுறையா என்று குழம்ப வேண்டாம். அடுத்த சில வாரங்களுக்குச் செவ்வாயும் பூமியும் எதிர் எதிரே சூரியனிற்கு இரு பக்கமும் இருக்கும். எனவே செவ்வாயிலிருந்தோ பூமியிலிருந்தோ தகவல்களை அனுப்புவதில் குழப்பங்கள் ஏற்படலாம். எனவேதான் அடுத்த சில வாரங்களுக்குச் செவ்வாயில் இருக்கும் ரோபோக்களுடன் தகவல் தொடர்பை நிறுத்தி வைக்கப்போகிறது நாசா.

Mars Solar Conjunction

பூமியும் செவ்வாயும் எதிர் எதிராகச் சூரியனிற்கு இருபக்கமும் வரும் நிகழ்வை Mars Solar Conjunction என்று குறிப்பிடுகின்றனர். சூரியனில் இருந்து எப்போதும் வெப்பமான, அயனியாக்கம் செய்யப்பட்ட வாயு (Ionized Gas) வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் செவ்வாயில் இருந்தோ, பூமியில் இருந்தோ தகவல்களை அனுப்பும் போது நடுவில் சூரியன் இருப்பதால் தகவல்கள் முழுமையாக எதிர்ப்பக்கத்தைச் சென்று சேராது.

எதிர் எதிர் திசையில் சூரியனிற்கு இருபுறமும் இருக்கும் பூமி மற்றும் செவ்வாய்

பூமியில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்றால், செவ்வாயில் இருக்கும் ரோவர்கள், லேண்டர்களில் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் இந்தக் காலத்தில் மட்டும் தகவல்தொடர்பை நிறுத்தி வைக்கிறது நாசா.

இந்த நிலை இரண்டு வாரங்கள்வரை தொடரும். இது வழக்கமாக இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு தான். கடந்த 2019-ல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இதே போன்று இரண்டு வாரங்களுக்குத் தகவல் தொடர்பை நிறுத்திவைத்தது நாசா. இப்போது அக்டோபர் 2 முதல் அக்டோபர் 16 வரை தகவல்தொடர்பை நிறுத்தி வைக்கவிருக்கின்றனர்.

Also Read: கையை மீறிச் சென்று கொண்டிருக்கும் E-Waste பிரச்னை... எப்படிக் கையாள்கிறது ஐரோப்பிய ஒன்றியம்?

இந்த இரண்டு வாரக் காலங்களும் செவ்வாயில் இருக்கும் ரோபோக்கள் செயல்படாதா?

இந்த இரண்டு வாரக் காலம், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே தகவல் தொடர்பு மட்டும்தான் துண்டிக்கப்படும் என்பதால், அதற்கு முன்பே அவற்றுக்கான 'ஹோம் வொர்க்' கொடுக்கப்பட்டுவிடும். செவ்வாயில் இருக்கும் ரோபோக்கள் இந்த இரண்டு வாரக் காலமும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற கமாண்டை முன்பே கொடுத்துவிடுவார்கள் நாசா விஞ்ஞானிகள். அதற்கேற்ற வகையில் அவை தரவுகளைச் சேர்த்து வைத்திருக்கும். மீண்டும் தகவல் தொடர்பு சீரானதும் சேர்த்து வைக்கப்பட்ட தரவுகளை மொத்தமாகப் பூமிக்கு அனுப்பிவிடும்.

தற்போது செவ்வாயில் நாசாவினுடைய Perseverance மற்றும் Curiosity ஆகிய இரண்டு ரோவர்கள், Ingenuity ஹெலிகாப்டர், Insight லேண்டர், Odyssey, MAVEN மற்றும் Mars Reconnaissance Orbiter ஆகிய ஆர்பிட்டர்கள் இயக்கத்தில் இருக்கின்றன.

செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே சூரியன் வரும் இந்த இரண்டு வாரங்களுக்கு மட்டும் ஏன் தகவல் தொடர்பை நிறுத்தி வைக்கிறார்கள் என்பதை நாசாவின் ஒரு நிமிட காணொளியின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

செவ்வாயில் இருக்கும் ரோபோக்கள், என்னனென்ன செயல்களைச் செய்கின்றன?

Perseverance ரோவர் செவ்வாயின் வானிலை தொடர்பான தகவல்கள் சேகரிப்பது, புதிய சத்தங்களைப் பதிவு செய்வது ஆகிய செயல்களை மேற்கொள்ளும். Ingenuity ஹெலிகாப்டர் Perseverance-ல் இருந்து 175 மீட்டர் தொலைவில் தற்போது இருக்கிறது. அது ரோவருக்கு அதன் நிலை குறித்த தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

கியூரியாஸிட்டி ரோவரும் வானிலை தொடர்பான தகவல்கள், ரேடியேஷன் குறித்த தகவல்களோடு சேர்த்து, அதன் கேமரா செவ்வாயின் மண் துகள்கள் குறித்த தரவுகளையும் சேகரிக்கும். இன்சைட் லேண்டர் அதன் செய்ஸ்மோமீட்டர் கருவியைக் கொண்டு செவ்வாயின் தரைப்பரப்புக்கு அடியில் நிகழும் நிகழ்வுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும். செவ்வாயை வட்டமடித்து வரும் மூன்று ஆர்பிட்டர்களும் செவ்வாயின் மேற்பரப்பு குறித்த தகவல்களைச் சேகரிக்கும்.



source https://www.vikatan.com/science/astronomy/nasa-will-stand-down-from-commanding-its-mars-missions-for-the-next-few-weeks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக