Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

பி.கே ப்ளான் ; கன்னையா குமார், ஜிக்னேஷ் என்ட்ரி - புது ரத்தம் பாய்வதால் காங்கிரஸ் தேறுமா?

``நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சிதான் இருக்கிறது. அந்த பெரிய கப்பலைக் காப்பாற்றாவிட்டால், சிறிய கப்பல்கள் தப்பிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றினால், காந்தி வலியுறுத்தும் ஒற்றுமை, பகத்சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவம் இவை எல்லாம் பாதுகாக்கப்படும்''

ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான கன்னையா குமார், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து தெரிவித்த விளக்கம் இது. இவரைப்போல, குஜாராத் மாநிலம், வட்காம் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏவும் தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும், 2022-ல் குஜராத்தில் நடைபெறப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏவான இவர், காங்கிரஸ் கட்சியில் தற்போது இணைந்தால் எம்.எல்.ஏ பதவிக்கு சிக்கல் என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். களச்செயல்பாடுகளின் மூலம் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற இவ்விரு இளைஞர்களின் வருகை, காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியைக் கொடுக்குமா என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக இருவர் குறித்தும் அடிப்படையான சில விஷயங்களைப் பார்ப்போம்.

ராகுல் காந்தி - கன்னையா குமார்

கன்னையா குமார் ; 

பீகாரில், பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பெஹாத் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கன்னையா குமார். இந்த ஊர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகம் நிறைந்த 'டேகரா' சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. கன்னையா குமாரின் குடும்பத்தினரும் தீவிரமான கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள். அதனால், பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிசக் கருத்துக்களைத் தாங்கிய நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வமிக்கவராகத் திகழ்ந்துள்ளார் கன்னையா குமார். பாட்னாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் 2007-ம் ஆண்டு புவியியல் பட்டப்படிப்பை முடித்த அவர், அடுத்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் (ஏ.ஐ.எஸ்.ஏ) உறுப்பினராகச் சேர்ந்தார். முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு, ஜே.என்.யு-வில் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் பிரிவில் `ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ்' ஆய்வுப் படிப்பில் இடம் கிடைத்தது. செப்டம்பர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவரான முதல் "அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு" உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். ரோகித் வெமூலாவின் மரணம்தான் கன்னையா குமாரைத் தீவிரமான அரசியலின் பக்கம் திருப்பியது.

பல்கலைக்கழக வளாகத்தில், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில், தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக கன்னையா குமார், டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது ஐ.பி.சி 124ஏ மற்றும் 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம், இந்திய அரசியலில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. தொடர்ந்து, 2018-ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கன்னையாகுமார், 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்தக் கட்சியின் சார்பில் பெகுசாராய் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்துவந்த கன்னையா, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை இரண்டு முறை சந்தித்து உரையாடியதாகச் செய்திகள் வெளியானது. கடந்த செவ்வாய்கிழமை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், ராகுல்காந்தி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.

ராகுல் காந்தி - ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி

இவர் குஜராத் மாநிலம், மெக்சனா மாவட்டத்தில் உள்ள மெனு என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அகமதாபாத் எச். கே. கலைக் கல்லூரி மாணவனாக இருந்தபோதுதான், இலக்கியத்தின் மீதும் அரசியலின் மீதும் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது ஜிக்னேஷ் மேவானிக்கு. தொடர்ந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஜிக்னேஷ் மேவானி, சட்டமும் பயின்றவர். குஜராத் மாநிலம் உனா நகரில் மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக நான்கு தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு எதிராக, அகமதாபாத்திலிருந்து உனா வரை 20,000 தலித் மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தினார் ஜிக்னேஷ் மேவானி. இந்திய அளவில் கவனிக்கத்த இளம் தலைவரானார். ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் எனும் அமைப்பை நடத்திவரும் இவர், 2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். இவருக்காக அப்போது, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. இந்தநிலையில், காங்கிரஸின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும் 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Also Read: பிரசாந்த் கிஷோர் வந்தால்... காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ்ஸா... மைனஸா?! - ஒரு பார்வை

``காங்கிரஸ் கட்சியில் பதவிகளை அனுபவித்து, புதிய பதவிகளுக்காக மாற்றுக் கட்சிகளில் சிலர் சேர்ந்துவரும் நிலையில், மக்களுக்காக களத்தில் நின்ற போராளிகள் எங்களுடன் இணைந்துவருவது இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் ஏழு மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும். தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் அதன் தாக்கம் இருக்கும்'' என கன்னையா குமாரின் வருகையை, ஜிக்னேஷ் மேவானியின் ஆதரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். ``கன்னையா குமாரின் வருகையால் காங்கிரஸ் கட்சி பயனடையும்'' என பீகார் மாநில காங்கிரஸ் தலைவர், மதன் மோகன் ஜா தெரிவித்துள்ளார். ஜிக்னேஷ் மேவானியின் வருகையின் மூலம் தலித் மக்களின் ஆதரவை உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பெறமுடியும் எனவும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மறுபுறம், ``கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையாக இருக்கவில்லை'' என விமர்சித்துள்ளார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.

பிரசாந்த் கிஷோர்

`` பிரசாந்த் கிஷோரின் முயற்சியால்தான் இந்த விஷயங்கள் நடந்திருக்கின்றன. இருவரின் வருகையும் காங்கிரஸ் கட்சியின் மீது இளைஞர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், இதன் மூலமே தேர்தல்களில் வெற்றிபெறமுடியும் என்று சொல்லமுடியாது. காரணம், தேர்தல் வெற்றிக்கு, கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் முக்கியம். காங்கிரஸ் கட்சிக்கு ஒருசில மாநிலங்களைத் தவிர மிகப்பெரிய அளவில் கட்சிக் கட்டமைப்பு இல்லை. தலைவர்களின் முகங்களுக்காக வாக்களித்து விடுவார்கள் என்றால், ராகுல்காந்தியை விட் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. மிகச்சிறப்பாக பேசியும் வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஏன் தோல்வியைத் தழுவி வருகிறது. கன்னையா குமாரின் மூலம் பீகாரில் கட்சியை வலுப்படுத்தலாம். அதேபோல, ஜிக்னேஷின் மூல்ம் குஜராத்தில் தலித் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். ஆனால், ஜிக்னேஷின் முகத்தை வைத்து, உ.பியில் வாக்கு பெற முடியாது. அதேநிலைதான் கன்னையா குமாரை வைத்துக்கொண்டு பிற மாநிலங்களிலும். இந்த உண்மையை காங்கிரஸ் கட்சி உணர்ந்தால் மட்டுமே பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கமுடியும்'' என்கிறார்கள் தேசிய அரசியலைக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-kanhaiya-kumar-and-jignesh-mevani-entry-in-congress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக