தன் படத்தின் மூலம் மீண்டுமொரு பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி. அவர் இயக்கியிருக்கும் 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகவும், போதை கலாசரத்தை தோலுரிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தத் திரைப்படம் சமீபத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா, 'இந்து மதம் இல்லையென்றால், தமிழ் எங்கே இருந்து வந்தது? இந்தப் படம் எந்த ஜாதி, மதத்திற்கு எதிராகவும் எடுக்கப்பட்டதல்ல' என்றார். ஒருகட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டென்ஷனான ஹெச்.ராஜா, சர்ச்சைக்குரிய விதத்தில் பத்திரிக்கையாளர்களை விமர்சித்தது கண்டனத்தையும் பெற்றிருக்கிறது. 'ருத்ர தாண்டவம்' படம் மேலாதிக்க மனோபாவத்துடன் படமாக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் வருகின்றன. இந்தச் சூழலில், 'ருத்ர தாண்டவம்' படத்தில் நடித்துள்ள விநியோகஸ்தர் ஜெயம் எஸ்.கே.கோபியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
’’ `ருத்ர தாண்டவம்' மூலமாக நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன?”
``பட்டியலின மக்கள் மதமாற்றம் செய்துகொண்டால், அவர்கள் பட்டியலின வகுப்பிற்குள் வரமாட்டார்கள். இது பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. இதை 'ருத்ர தாண்டவம்' படம் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இந்தப் படம் எந்த சமூகத்திற்கும், மதத்திற்கும் எதிராக படமாக்கப்படவில்லை. கட்டாய மதமாற்றம் தவறு என்பதைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறோம். யாரும் சொல்லத் துணியாத கருத்தை மோகன் ஜி தன் படங்கள் மூலமாக சொல்கிறார். அதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 45 லட்சம் ரூபாய் செலவில் அவர் இயக்கிய 'திரெளபதி' திரைப்படம், 4 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்தது. அதேபோல, 'ருத்ர தாண்டவம்' படமும் வசூல் குவிக்கும். ஒருபடம் வெற்றிக்கரமாக ஓடிவிட்டால், அதே கதைக்கருவை அடிப்படையாக வைத்து நிறைய படங்கள் உருவாகும். திரையுலகில் ஒரு புது ட்ரெண்டை மோகன் ஜி உருவாக்கியிருக்கிறார். அடுத்த பத்து வருடத்திற்கு இதுபோன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவதை யாராலும் தடுக்க முடியாது.
Also Read: சினிமா விமர்சனம்: திரெளபதி
போதைக் கலாசாரத்திற்கு எதிராகவும் இந்தப் படத்தில் காட்சிகள் உள்ளன. இந்த படத்தின் 'ஸ்பெஷல் ஷோ'வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை, ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர். முதல்வர் ஸ்டாலினுக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறோம். எங்கள் விருப்பத்தைக் கோரிக்கையாகவும் அவருக்கு அனுப்பியிருக்கிறோம்.”
``தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது, 'கட்டாய மதமாற்றம் எதிர்ப்பு' என்பது அவ்வளவு அத்தியாவசியமான பிரச்னையா?”
``நிச்சயமாக இது தேசிய அபாயம்தான். சுய விருப்பத்துடன் விருப்பப்பட்ட மதத்தைப் பின்பற்றுவதற்கு யாரும் தடை சொல்லவில்லை. ஆனால், ஒரு மதத்தை தூற்றி, மற்றொரு மதத்தை பின்பற்ற சொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் என்பவர், திருத்தணி, திருப்பதி கோவில்களை சாத்தான்கள் வாழும் அரண்கள் என்றும், இந்து கடவுள்களை சாத்தான்கள் என்று கடுமையாக விமர்சிக்கிறார். இப்படிப் பேசி கிறிஸ்தவ மதத்திற்கு ஆட்களை இழுக்கிறார். இதைத்தான் தவறென நாங்கள் 'ருத்ர தாண்டவம்' மூலமாகச் சுட்டிக் காட்டுகிறோம். இந்து கோவில்களில் மட்டும்தான் அரசியல் பேசப்படுவதில்லை, 'இன்னாருக்கு வாக்களியுங்கள்' என்று யாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதில்லை. கட்டாய மதமாற்றம் என்பதை நாம் எதிர்த்துத்தான் ஆக வேண்டும்.”
Also Read: நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!
`` 'ருத்ர தாண்டவம்' ஸ்பெஷல் ஷோவில் பத்திரிகையாளர்கள் குறித்து ஹெச்.ராஜா பேசிய கருத்து விமர்சனத்தை உருவாக்கியுள்ளதே?”
``எல்லா பத்திரிகையாளர்களையும் குறிப்பிட்டு அவர் அப்படிச் சொல்லவில்லை. எந்த நோக்கத்திற்காக ப்ரஸ் மீட் அழைக்கப்பட்டதோ, அதை தவிர்த்துவிட்டு தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட்டதால்தான், ஹெச்.ராஜா அப்படியொரு விமர்சனத்தை பத்திரிகையாளர்கள் மீது வைத்தார். ஆனாலும் அது தவறுதான். அதேசமயம், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை விமர்சித்தபோது அமைதியாக இருந்த ஊடகவியலாளர்கள் சிலர், ஹெச்.ராஜா மீது மட்டும் பாய்வது ஏன் எனத் தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளர் நினைத்தால், பலபேரின் வாழ்க்கையையே புரட்டிப் போட முடியும். 'ருத்ர தாண்டவம்' படத்தில் கூட அப்படியொரு காட்சி வருகிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டுமென்பதே என் விருப்பம்.”
source https://www.vikatan.com/news/politics/rudra-thandavam-movie-sparks-political-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக