“நீ இந்த கதையோட ஹீரோ... நான் தான் வில்லி இல்லையா?” எனக் கேட்ட ஏஞ்சலை மார்க்ஸ் ஏறிட்டுப் பார்த்தான்.
“நீ ரொம்ப நல்லவன்... நாங்க எல்லாம் கெட்டவங்க”
“ஏஞ்சல் எதுக்கும் நிஜத்தையும் சீரியலையும் போட்டு குழப்பிக்கிற?”
“இங்க பார் இது நம்ம சேனலோட கதைன்னு எல்லாருக்கும் தெரியும். நீ ரவிவர்மா... நான் மேகி... திவ்யா பேரு ஓவியா” என ஏஞ்சல் வரிசையாகச் சொல்ல அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மார்க்ஸ் தடுமாறினான்.
“இது எல்லாம் கூட புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒண்ணும் சின்ன குழந்தையில்லை”
“ஏஞ்சல் சத்தியமா சொல்றேன்... இந்த மொத்த ஸ்கிரிப்டும் பண்ணது பாண்டியன்தான்” என சமாதானப்படுத்தும் நோக்கில் சொன்னான் மார்க்ஸ்.
“அவன் உன்னோட கையாள்னு ஆபிஸ்ல எல்லாருக்கும் தெரியும்” என்றாள் ஏஞ்சல்.
“இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு அது தப்பா தான் தெரியும்... ஆனா, நிஜமாவே எதையும் மனசுல வச்சுக்கிட்டு நான் இந்த கதையை ரெடி பண்ணல… இப்ப பாக்குறப்ப நிறைய பேரோட ரிசம்பிளன்ஸ் இதுல இருக்குறது உண்மைதான்” என்றான் மார்க்ஸ்.
ஏஞ்சல் அவனைப் பார்த்தபடி இருந்தாள்.
“சில கேரக்டர்ஸ் நம்ம ஆளுங்களை மாதிரி இருக்கு ஆனா கதை சுத்தமா வேற” என்றான் மார்க்ஸ்.
ஏஞ்சல் அந்த பதிலில் சமாதானமாகவில்லை என்பது அவளது
முகத்தில் தெரிந்தது. “இப்ப என்ன பண்ணலாம் சொல்லு” என்றான் மார்க்ஸ்.
“என்னோட கேரக்டரை ஒழுங்கா மாத்து” என்றாள் ஏஞ்சல்.
“கதையில வர்ற உன் கேரக்டரை நல்லவளா மாத்தணுமா?”
“ஆமா” என்றாள் ஏஞ்சல்.
மார்க்ஸ் சிரித்தான்.
“எதுக்கு இப்ப சிரிக்கிற?”
“அது நீ இல்ல ஏஞ்சல்... அது கதையில வர்ற ஒரு கேரக்டர். அதை மாத்துறதுனால உன்ன எல்லாரும் நல்லவளா நினைப்பாங்கன்னு நீ நினைக்கிறதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றான் மார்க்ஸ்.
“ஒழுங்கா அந்த மேகி கேரக்டர பாசிட்டிவ்வா மாத்த முடியுமா... முடியாதா?”
மார்க்ஸ் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவளை பார்த்தான்.
“நீ என்ன எவ்வளவு மோசமா நினைக்கிறேன்றது அந்த கேரக்டரை பார்க்கும் போதே எனக்கு தெரியுது. மாத்த முடியாதுன்னு நீ நினைச்சா நானும் நிஜத்தில வில்லியாவே இருந்துட்டு போறேன்!”
“ஏஞ்சல்”
“நீ நல்லவனாவே இரு... நான் கெட்டவளாவே இருக்கிறேன்” என சொல்லிவிட்டு மார்க்ஸின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள் ஏஞ்சல்.
மார்க்ஸ் போனை எடுத்தான்.
“டேய் பாண்டியா எங்கடா இருக்க... கான்பரன்ஸ் ரூம்ல மீட் பண்ணலாம்… டீம் எல்லாம் வரச் சொல்லு” என கடுப்பாக சொன்னான் மார்க்ஸ்.
அனைவரும் கான்ஃபரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தார்கள்.
“ஏஞ்சலாவது வில்லி... என்னை முழு காமெடியனா ஆக்கிட்டான்பா கதையில” என்றார் நெல்லையப்பன்.
மார்க்ஸ் நிமிர்ந்து பார்த்தான்.
“என் பொண்டாட்டி தினம் சீரியலை பார்த்துட்டு நீ ஆபிஸ்ல இதைத்தான் பண்றியான்னு என்ன கொன்னு எடுக்குறாப்பா” என்றார் நெல்லையப்பன்.
“மாமா அடுத்த வார எபிசோட்ல உனக்கு ஆபிஸ்ல ஒரு லவ் வர்ற மாதிரி எல்லாம் சீன் பண்ணியிருக்கு” என்றான் பாண்டியன்.
“அடப்பாவி” என அதிர்ந்தார் நெல்லையப்பன்.
அனைவரும் சிரித்தார்கள். மார்க்ஸுக்கும் சிரிப்பு வந்தது.
“என் வாழ்க்கையை மொத்தமா முடிச்சி விட்டுடாத பாண்டியா” என்றார் நெல்லையப்பன்.
“என்ன பாண்டியா இதெல்லாம்?”
“தல... நம்ம ஆபிஸ்ல இருக்கிற 50 பேர் தவிர வேற யாருக்கும் இப்படி தோன்றதில்லை. ஆடியன்ஸ் எல்லாம் கதையை ரசிக்கிறாங்க. நம்ம ஆபிஸ் ஆளுங்கதான் இது நான் அது நீ-னு கம்பேர் பண்ணிக்கிறாங்க...மாமா கேரக்டர் எல்லாம் ஆடியன்ஸ் கிட்ட ரொம்ப பாப்புலர்” என்றான் பாண்டியன்.
“சரிடா... ஆனா நம்ம ஆளுங்களை சமாளிக்க முடியலையே” என்றான் மார்க்ஸ்.
“அலோக், ராய், பிரசாத்தான் இந்த கதையோட முக்கியமான வில்லன்கள்!” என்றார் நெல்லையப்பன்.
“ஆமாடா அவனுங்க வேற மேனன் சார் கிட்ட போய் சண்டை போட்டிருக்கானுங்க”
“சார் என்ன தல சொன்னாராம்?”
“அவரு என்ன சொல்ல போறாரு... குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்னு சொல்லி அவனுங்க போட்ட பாமை கேட்ச் பிடிச்சு அவனுங்களுக்கே திரும்பி போட்டிருப்பாரு... ஏன் மார்க்ஸ் அதான” என்றார் நெல்லையப்பன்.
“அப்படி தான் ஏதோ சொல்லியிருக்காரு... ரேட்டிங் வேற வந்துடுச்சா அதனால அவ்வளவு பேரும் வாய மூடிட்டாங்க... ஆனா நம்ம மேல செம கடுப்புல இருக்கானுங்க… சான்ஸ் கிடைக்கும் போது காட்டுவானுங்க ஜாக்கிரதை” என மார்க்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறை கதவை திறந்து கொண்டு மேனன் உள்ளே நுழைந்தார்.
அனைவரும் அவசரமாக எழுந்து நின்றனர்.
“உட்காருங்க... உட்காருங்க” என்றபடி மேனன் சேரில் அமர அனைவரும் அமர்ந்தார்கள்.
“குட் வொர்க் மார்க்ஸ்... யாருமே இந்த சீரியல் இந்த டைம் பேண்டுல இவ்வளவு ரேட்டிங் பண்ணும்னு எதிர்பார்க்கல” என்றார் மேனன்.
“பாண்டியன் தான் சார் ஸ்கிரிப்ட் பண்ணது” என்றான் மார்க்ஸ்
“வெல்டன் பாண்டியன்... குட் வொர்க்” என்றார் மேனன்.
பாண்டியன் கூச்சமும் பெருமையுமாக புன்னகைத்தான்.
“எங்க கதை எல்லாம் எடுத்து உள்ள விட்டுர்றான் சார்” என்றார் நெல்லையப்பன்.
அறையில் சிரிப்பொலி எழுந்தது.
“யார் கதையா இருந்தா என்ன ? ஹிட்டாகுதுல்ல அப்புறம் என்ன?” எனப் புன்னகையுடன் சொன்னார் மேனன்.
“ஆபிஸ்ல நிறைய பேர் கடுப்பா இருக்காங்க சார்... அவங்களுக்குதான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல சார்” என்றான் பாண்டியன்.
“அவங்களுக்கு என்ன தனியா சொல்றது? அதான் சீரியல் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கார்ட் போடுறமே... இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு... அதை ஒரு தடவை அவங்களை படிச்சுக்க சொல்ல வேண்டியது தான்” என சாதாரணமாகச் சொன்னார் மேனன்.
அனைவரது முகமும் ஆச்சர்யத்தில் மாறியது.
“சார் உங்களைக் கூட கலாய்ச்சிருக்கான் சார் பாண்டியன்” என்றார் நெல்லையப்பன்.
“எனக்கு அதுல சந்தோஷம்தான். பிரபலமான விஷயங்களைத்தான் ஸ்கூப் பண்ண முடியும்”
“சார் அப்ப பிரதர் ஸ்கிரிப்ட்” என பாண்டியன் இழுத்தான்.
“உங்களுக்கு எது சரின்னு தோணுதோ எது ஜனங்களுக்கு இண்ட்ரஸ்டிங்கா இருக்கோ அதை பண்ணுங்க. யாருக்கும் பயப்படாதீங்க… பார்த்துக்கலாம்” என்றார் மேனன்.
தலைவனது இயல்பு தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் வேலை செய்ய அனுமதிப்பதுதான். தான் சொன்னதை
செய்யும் அடிமைகளை வளர்ப்பது அல்ல. நல்ல தலைவர்கள் ஒரு போதும் தனக்கு கீழ் இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படுவதில்லை. அவர்களது
வளர்ச்சியை பார்த்து பயப்படுவதில்லை. நல்ல தலைவர்களின் அடையாளம் அவர்களது பேர் சொல்லும் பல நல்ல தலைவர்களை விட்டுச்செல்வது தான்.
காபி ஷாப் வாசலில் மார்க்ஸ் வண்டியை நிறுத்தினான். திவ்யா பைக்கில் இருந்து இறங்க மார்க்ஸ் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான்.
“திவ்யா நான் கார் வாங்கலாம்னு யோசிக்கிறேன்” என்றான் மார்க்ஸ்.
“என்ன திடீர்னு?”
“ரொம்ப நாள் பிளான் தான். நீ வந்ததுக்கப்புறம் அந்த எண்ணம் இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு”
“ஏன் அப்படி?” என திவ்யா புன்னகையுடன் கேட்டாள்.
“உன்ன இன்னும் கொஞ்சம் பத்திரமா கூட்டிட்டு போலாம்னுதான்”
“பார்றா” என சிரித்தாள் திவ்யா.
“ஆமா... திவ்யா நீ கூட இருக்குறப்ப கொஞ்சம் பொறுப்பு கூடுன மாதிரி ஃபீலாகுது” என்றான் மார்க்ஸ். “தம்பி எனக்கு பைக் ரைடு ரொம்ப பிடிக்கும் தெரியும்ல”
“பைக்லயும் போலாம்… ஆனா, பைக்ல கேரளா வரை போக முடியாதுல்ல”
ஆச்சரியமாக அவனை பார்த்த திவ்யா “கேரளாவா?” என்றாள்.
“ஆமா உன் அப்பா கிட்ட சொல்லியிருக்கேன் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை உன்ன கேரளா கூட்டிட்டு வரேன்னு”
திவ்யா வியப்பாக அவனைப் பார்த்தாள்.
“இதெல்லாம் எப்ப பேசின என் அப்பாகிட்ட?”
“அது தனியா எங்களுக்கு நடுவுல ஒரு ட்ராக் ஒடிக்கிட்டு தான் இருக்கு”
“ஒஹோ...” என்றாள் திவ்யா. அந்த ஓஹோவுக்குள் பின்னால் சந்தோஷம் ஒளிந்திருந்தது.
அப்பாவும் கணவனும் நண்பர்களாக இருந்துவிட்டால் அதை விட ஒரு பெண்ணுக்கு பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்.
அவர்கள் இருவரும் காபி ஷாப்புக்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த பாண்டியனும் மேகலாவும்
பதறிப்போய் எழுந்தார்கள்.
“யேய் பாண்டியா என்ன நடக்குது இங்க?” என்றான் மார்க்ஸ் உற்சாகமான குரலில்.
“இல்ல தல… சும்மா அப்படியே காபி!”
மார்க்ஸ் சிரிக்க மேகலாவும் பாண்டியனும் வெட்கத்தில் நெளிந்தார்கள்.
“எதுக்கு இப்ப அவங்களை எம்பரேஸ் பண்ற? வா... நம்ம வேற டேபிளுக்கு போகலாம்” என்றாள் திவ்யா.
“இவனுக்கு அந்த அளவுக்கெல்லாம் சீன் இல்ல... உட்காரு திவ்யா” என அவர்களுக்கு எதிரே சேரை இழுத்து போட்டு அமர்ந்தான் மார்க்ஸ் தயக்கமாக திவ்யாவும் அவனருகில் அமர்ந்தாள்.
“தல என்ன சாப்பிடுறீங்க?”
“ரெண்டு கேப்பசினோ... ஒரு பன்னீர் ரோல் சொல்லு” என்றான் மார்க்ஸ்.
“வாங்கிட்டு வந்துர்றேன் தல” என பாண்டியன் கூச்சம் அகலாதவனாய் அங்கிருந்து எழுந்து சென்றான்.
அப்போது தான் மேகலாவை உற்று கவனித்தான் மார்க்ஸ். மேகலா முற்றிலும் வேறு ஒருத்தியாக மாறிப் போயிருந்தாள். உடல் சற்று பருமனாகி இருந்தது. அதை மறைக்க அவள் அணிந்திருந்த உடை சற்றும் பொருத்தமில்லாமல் அவளை இன்னும் பருமனாக காட்டியது. கண்கள் வீங்கிப் போயிருந்தன. அதை மறைப்பதற்காக அவள் போட்டிருந்த கூடுதல் மேக்கப் அவளை வித்தியாசமாகக் காட்டியது.
“என்ன இப்படியிருக்க?” என கேட்டான் மார்க்ஸ்.
“என்னாச்சு சார்” என கேட்டாள் மேகலா.
“என்னாச்சா? நடிகை தான நீ... நடிக்கிறவங்க பாடி அண்ட் மைண்டை எப்பவும் கேர் எடுத்துக்கணும்னு தெரியாதா உனக்கு?” என அதட்டலாக கேட்டான்
மார்க்ஸ்.
“இல்ல சார் அந்த சூசைட் அட்டெம்ட்டுக்கு அப்புறமா பெருசா நடிக்க வாய்ப்பு எதுவும் வரல சார்” என்றாள் மேகலா.
“நீ சூசைட் பண்ற, இல்ல சந்தோஷமா இருக்க… அதைப் பத்தி எல்லாம் யாருக்கும் அக்கறையில்லை... நீ அழகா இருந்தா நடிக்க கூப்புடுவாங்க இல்லைனா கூப்பிட மாட்டாங்க”
“இப்ப எதுக்கு அவளை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற” எனக் கோபமாக கேட்டாள் திவ்யா.
“இல்ல திவ்யா ஆக்டிங் இவளோட பேஷன்... ஒரு சாதாரண ஆளா வந்து கஷ்டப்பட்டு ஜெயிச்சு… இன்னைக்கு எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு
உட்கார்ந்திருக்கா... எனக்கு அவ்வளவு கோபம் வருது இவள பார்த்தா” என்றான் மார்க்ஸ்
மேகலா மௌனமாக இருந்தாள்.
“வாய திறந்து ஏதாவது சொல்லு”
“இல்ல சார்... ஆக்ட் பண்ணது போதும். பேசாம கல்யாணம் பண்ணிகிட்டு செட்டிலாகலான்னு யோசிக்கிறேன் சார்” என தலை குனிந்தபடி சொன்னாள் மேகலா.
“ஆக்டிங்கை க்விட் பண்ண போறியா? கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்க கூடாதுன்னு அவன் சொன்னானா?” என கோபமாக கேட்டான் மார்க்ஸ்.
“இல்ல சார்... அவர் அப்படி எல்லாம் சொல்லல.. அவங்க வீட்டுல அவர் எங்க கல்யாணத்த பத்தி பேசுறப்ப நடிகைன்னா அவங்க யோசிக்கத்தான செய்வாங்க”
‘ஒண்ணு விட்டேன்னா தெரியும்... நடிகைன்னு தெரிஞ்சு தான காதலிச்சான் கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்டான். காதலிக்க மட்டும் நடிகை வேணும். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்க கூடாதுன்னா என்ன அர்த்தம்?” என கோபமாக மார்க்ஸ் கேட்டான் அவன் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்.
“மார்க்ஸ்... கொஞ்சம் மெதுவா” என்றாள் திவ்யா.
அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
காபியுடன் வந்த பாண்டியன் ஏதோ நடந்திருக்கிறது என்பதை யூகித்தவனாக தயக்கமாக அமர்ந்தான்.
“என்னடா இதெல்லாம்?”
“என்ன தல?”
“அவள நடிக்க வேணாம்னு சொன்னியா?” எனக் கோபமாக கேட்டான் மார்க்ஸ்.
“சத்தியமா இல்ல தல... நீங்க வேணா அவ கிட்டயே கேட்டுப்பாருங்க” என பதற்றமாகச் சொன்னான் பாண்டியன்.
“அவ இப்படி இருந்தா எப்படிடா நடிக்க வாய்ப்பு கிடைக்கும்”
“இல்ல தல மேகலா தான் கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கலைன்னு சொல்லிச்சு” என தயக்கமாகச் சொன்னான் பாண்டியன்.
“அவ அப்படி சொன்னா உடனே நீ சரின்னு சொல்லுவியா? அவளோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதாடா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“இல்ல தல அது வந்து” என பாண்டியன் பேச முடியாமல் தடுமாறினான்.
“அவளை நீ நடிக்க கூடாதுன்னு சொல்லல... ஆனா அவ நடிக்க முடியாத ஒரு நிலைமைக்கு போறப்ப நீ அதை தடுக்கவும் இல்லை… என்ன ஒரு அயோக்கியதனம்”
பாண்டியன் மெளனமாகயிருந்தான்.
“அவளோட சந்தோஷம் ஆக்டிங்ல இருக்குடா... அத பிடுங்கி எறிஞ்சிட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறதுல என்னடா இருக்கு? அவ கனவைத் தொலைச்சிட்டு உன் கூட ஒரு வாழ்க்கை வாழ்றது தற்கொலையே
பண்ணிக்கலாம்.”
மேகலாவின் கண்கள் கலங்குகின்றன.
“அவ உன் கூட கடைசி வரைக்கும் அவளா இருக்க முடியனும்.
அதுக்கு பேர் கல்யாணம்... இல்லேன்னா அது தண்டனை.. புரியுதா?” பாண்டியன் தலை குனிந்தபடி அமைதியாயிருந்தான்.
“அவ நடிக்கலைன்னு சொன்னப்ப நீ கோபப்பட்டிருந்தா நீ அவளை நிஜமா நேசிக்கிறேன்னு அர்ததம். அவ அப்படி சொன்னப்ப நீ அமைதியா இருந்திருக்கே ஏன்னா அத தான் அவ செய்யனும்னு நீ எதிர்பார்த்திருக்க” என்றான் மார்க்ஸ்.
“ஸாரி தல” என கண்கலங்க சொன்னான் பாண்டியன்.
“மேகலான்றது வெறும் உடம்பு மட்டும் இல்லடா... அவளோட மனசு அதுக்குள்ள இருக்கிற ஆசை, கனவு எல்லாம் சேர்ந்ததுதான். அவ அதை எல்லாம் தூக்கி போடுறேன்னு சொல்றது உன் மேல இருக்கிற காதல்ல... அதை பத்திரமா காப்பாத்துறது தான் நீ அவ மேல வச்சிருக்கிற காதல். அவ உன்ன எவ்வளவு தூரம் நேசிக்கிறேன்னு சொல்லிட்டா… இப்ப உன் டர்ன். நீ ப்ரூவ் பண்ணு. நீ அவளை எவ்வளவு தூரம் லவ் பண்றேன்னு” பாண்டியன் தலையாட்டினான்.
கண்கள் கலங்க மேகலா மார்க்ஸை பார்த்தாள். அவளது கண்ணீர் அவனுக்கு நன்றி சொன்னது.
“வா திவ்யா போலாம்” என மார்க்ஸ் எழுந்து வெளியே வந்தான்.
திவ்யா அவன் பின்னால் ஒட்டமும் நடையுமாக ஓடி வந்தாள்.
மார்க்ஸ் தனது பைக் அருகே வந்து நின்றான்.
ஓடி வந்த திவ்யா அவன் முன்னால் வந்து நின்றாள். மார்க்ஸ் அவளைப் பார்த்தான். அவன் எதிர்பாராத வண்ணம் திவ்யா
சட்டென அவனை அணைத்துக் கொண்டாள். மார்க்ஸும் அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பு எதற்கென அவனுக்கும் புரிந்தது. அவன் அந்த அணைப்பில் நெகிழ்ந்தது அவளுக்கும் புரிந்தது. அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவர்கள் பேசிக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.
ப்ரிவியூ அறையில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் இரண்டு புதிய சீரியலுக்கான திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் ஏஞ்சல்.
மேனன், தாட்சா, திவ்யா, மார்க்ஸ் என அனைத்து புரோகிராமிங் ஆட்களும் கூடியிருந்தார்கள்.
“என்ன கதை திவ்யா?” என கிசுகிசுப்பாக கேட்டான் மார்க்ஸ்.
“அது ஒரு மோசமான கதை” என்றாள் திவ்யா.
“மோசமான கதையா? நீ தான புரோகிராமிங் ஹெட்... அப்புறம் எப்படி மோசம்னு தெரிஞ்சும் அப்ரூவ் பண்ண?” என வியப்பாகக் கேட்டான் மார்க்ஸ்.
“இந்த ரெண்டு சீரியலை என்ன நம்பி விடுங்கன்னு நான் ரேட்டிங் எடுத்திட்டு வரேன்னு ஏஞ்சல் சொல்லிட்டா. என்னால நோ சொல்ல முடியல”
“சரி கதை என்னன்னு ஒரு லைன்ல சொல்லு”
“பாரு உனக்கே புரியும்” என்றாள் திவ்யா.
இரண்டு சீரியல்களின் முதல் எபிசோடுகள் திரையிடப்பட்டன.
ஒன்று தாலி கட்டிய கணவனின் குடும்பத்தினர் அன்பை சம்பாதிப்பதற்காக கலெக்டர் ஒருத்தி வேலைக்காரியாக அந்த வீட்டில் வாழும் கதை.
மற்றொன்று முட்டாள் பெண்ணொருத்தியை படித்த கணவன் மோசமாக நடத்த பொறுமையாக இருந்து கணவன் மேல் தான் கொண்ட காதலை நிரூபிக்கும் மனைவி ஒருத்தியின் கதை.
திரையிடல் முடிந்து அனைவரும் வெளியே வந்தனர்.
“என்ன மார்க்ஸ் எப்படி இருக்கு?” என கேட்டார் தாட்சா.
“படு கேவலமா இருக்கு... இவ்வளவு நாள் நம்ம சேனல் சம்பாதிச்ச பேரையெல்லாம் குழி தோண்டி புதைக்கிற மாதிரி இருக்கு தாட்சா” என்றான் மார்க்ஸ்.
அப்படி ஒரு ரியாக்சனை அங்கிருந்த யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏஞ்சல் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் சொன்னாள். “இப்படி ஒரு ரியாக்ஷன் மார்க்ஸ் கிட்ட இருந்து வந்தா இந்த சீரியல் ஹிட்டுன்னு யோசிச்சேன். அவன் அதே மாதிரி ரியாக்ட் பண்ணிட்டான்” என்றாள் ஏஞ்சல்.
“ஏஞ்சல் என்ன சீரியல் இது… கலெக்டர் பொண்ணு எதுக்காக மாமியார் வீட்டுல சாணி அள்ளணும். இன்னொரு சீரியல்ல அந்த ஹஸ்பெண்ட் ராஸ்கல் அவன் பொண்டாட்டிய அவ்வளவு கேவலமா அவமானப்படுத்துறான்… அவ என்னடான்னா அப்பவும் புருஷன் நல்லவன்றா. ரொம்ப பின்னாடி நம்மள தள்ளுற மாதிரியான கதையா இருக்கு ரெண்டும்” என ஆதங்கமாகச் சொன்னான் மார்க்ஸ்.
“உனக்கு லேடிஸ் சென்ட்டிமென்ட் புரியாது ஏன்னா நீ ஒரு ஆம்பள” என்றாள் ஏஞ்சல்.
“பெண்களை அவமானப்படுத்துறது தான் பொண்ணுகளுக்கு பிடிக்கும்னு நினைக்கிறியா?”
“இது வொர்க்காகும் மார்க்ஸ்” என்றாள் ஏஞ்சல்.
“நம்ம சேனலுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு... இந்த சீரியல் அதைப் போட்டு தள்ளிடும். நம்ம இமேஜே காலியாயிடும்” என்றான் மார்க்ஸ்.
“இங்க பாரு. நாம இதுவரைக்கும் பண்ண சீரியல் எல்லாம் வித்தியாசமா இருக்கிறது உண்மைதான்” என்றாள் ஏஞ்சல்.
“அதனால தான் நம்ம 350GRP-ல இருக்கோம் ஏஞ்சல்”
“அதைத்தான் நானும் சொல்றேன். வித்தியாசமா பண்றதால தான் நம்ம 350GRP-ல இருக்கோம். நம்மளும் மார்ஸ் டிவி மாதிரி மாஸ் சீரியல் பண்ணா தான் ஐநூறு அறுநூறு GRPபோக முடியும்”
“இருக்கிற 350-ம் புட்டுக்க போகுது” என கோபமாகச் சொன்னான் மார்க்ஸ்.
“போகாது... நிச்சயமா இது ஜெயிக்கும்” என சவால் விடும் தொனியில் சொன்னாள் ஏஞ்சல்.
“தாட்சா ப்ளீஸ் தாட்சா இப்படி ஒரு சீரியலை அலவ் பண்ணாதீங்க” என்றான் மார்க்ஸ்.
“மார்க்ஸ்... ஏஞ்சல் தான் ஃபிக்ஷன் ஹெட்... அவ ஏதோ ஒண்ணு முயற்சி பண்ணி பார்க்கனும்னு நினைக்கிறா.. அவளுக்கு அந்த வாய்ப்ப கொடுக்கிறதுதான் நியாயம்னு நான் நினைக்கிறேன்” என்றாள் தாட்சா.
மார்க்ஸ் என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றான்.
“வர வாரம் டெலிகாஸ்ட். அடுத்த வாரம் ரேட்டிங் வந்திரும். அதுக்கப்புறம் நாம பேசலாம்” என்றாள் ஏஞ்சல்.
“ஓகே.. பாக்கலாம் டிபிக்கல் டிராமாவா இருக்குற மார்க்ஸோட பாஷையில சொன்னா ரொம்ப பெண்களை கீழ இறக்கிற மாதிரி இருக்கிற இந்த சீரியலை மக்கள் எப்படி ரிசீவ் பண்றாங்கன்னு பார்த்துட்டு முடிவு பண்ணலாம்” என்றாள் தாட்சா.
ஏஞ்சலும் திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
நல்லது கெட்டது என்று ஒன்று தொலைக்காட்சிக்கு கிடையாது. வெறும் வெற்றி தோல்வி மட்டும்தான். இருவரது மனதும் அடுத்த வார ரேட்டிங்கை நோக்கி அப்போதே பயணிக்கத் தொடங்கியது.
stay tuned... 'இடியட் பாக்ஸ்' தொடர் இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியாகும்.
source https://www.vikatan.com/literature/television/idiot-box-77-why-marx-becomes-angry-with-mekala-and-angels-confidence-in-new-serials
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக