Ad

புதன், 29 செப்டம்பர், 2021

`கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்க முடியாது!’ - கைவிரித்த மகாராஷ்டிரா

மத்திய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 கொடுக்கும்படி மாநில அரசுகளிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிதியை மாநில அரசுகளே கொடுக்க வேண்டும் என்றும், மாநில பேரிடர் கால நிதியிலிருந்து கொடுக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1,38,962 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதோடு அதிகமான கொரோனா இறப்புகள் அரசு இணையத்தில் பதிவு செய்யாமல் இருப்பதால் அவற்றையும் பதிவு செய்யும்போது சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு தலா ரூ.50,000 வீதம் 700 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தற்போதுள்ள நிதி நிலையில் இந்த நிதியைக் கொடுக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. `இது தொடர்பாக முறைப்படி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்றும், `மத்திய அரசே இந்த நிதியையும் கொடுக்க வேண்டும்’ என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தவ்தாக்கரே

மாநிலத்தின் வருவாய் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், ஜி.எஸ்.டி வரி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துவிட்டதாகவும், இது தவிர முத்திரை தீர்வை, வீடு பதிவுக் கட்டணம் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயும் வெகுவாகச் சரிந்துவிட்டதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Also Read: மும்பை: கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறி நாய்க்கடி தடுப்பூசி! - செவிலியர், மருத்துவர் சஸ்பெண்ட்

மத்திய அரசு ஜி.எஸ்.டி இழப்பீடாக மகாராஷ்டிரா அரசுக்கு 30,000 கோடி கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதையும் மாநில அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பட்ஜெட் வருவாயில் 1,00,144 கோடி மட்டுமே வசூலாகியிருப்பதாவும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 27 சதவிகிதம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.3,68,986 கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. வருவாய் பற்றாக்குறை காரணமாகவும், நிதிநிலை மோசமாக இருப்பதாலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை கொடுக்க முடியாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் சொந்தங்களை இழந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/india/cannot-pay-rs-50000-to-family-of-corona-victims-maharashtra-govt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக