Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

உள்ளாட்சித் தேர்தல்: `கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுகவினர்!’ -எடப்பாடி பழனிசாமி தாக்கு

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலின் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து, சின்னங்களும் ஒதுக்கப்பட்டு, பிரசாரக்களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அரசியல் கட்சியினர், தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் முனைப்புக் காட்டத் துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் நேற்று (27.09.2021) விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக, ஆட்சி பொறுப்பேற்று 130 நாட்களுக்கு மேலாகிறது. இந்த நாட்களில் 202 அறிவிப்புகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கவேண்டும்?

சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிசாமி

தேர்தலின்போது 505 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, கூடுதலாக 20 என மொத்தம் 525 அறிவிப்புகள் திமுகவால் அறிவிக்கப்பட்டது. அதில் இப்போது 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். 3, 4 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இவை வெறும் சாதாரண அறிவிப்புகள். இவற்றைத்தான் முதல்வர் ஸ்டாலின் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இப்போது, இந்த ஆட்சியில் சட்ட - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் உச்சத்திற்கு போய் கொண்டுள்ளது. ரெளடிகளை கைது செய்வதாக டிஜிபி சொல்கிறார். இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்க..? அம்மா ஆட்சி சட்டப்படி இயங்கிய காரணத்தால் தான், இந்தியாவிலேயே சட்ட - ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் என்ற விருது பெற்றோம். ஆனால் இன்று, சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது.

நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் சன்ன ரகத்திற்கு 30 ரூபாயும், பொது ரகத்திற்கு 50 ரூபாயும் அறிவித்துள்ளார். அதேபோல தான் கரும்புக்கும்... எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்கள் என இதன் மூலம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும்... பொய்யான அறிவிப்புகள், வாக்குறுதிகளை தருவார்கள். தேர்தல் முடிந்தபின் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால், மக்களின் எண்ணங்களை புரிந்து சேவை செய்த அரசுதான் அம்மாவின் அரசு.

Also Read: உள்ளாட்சி உய்யலாலா!

மிகவும் பின்தங்கிய இந்த விழுப்புரம் பகுதிக்கு மாணவர்கள் நலன் கருதி பல்கலைக்கழகம் வேண்டும் என்று என்னிடத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தார் சி.வி.சண்முகம். அதன்படி இங்கு அம்மா பெயரில் பல்கலைக்கழகமும் கொண்டு வந்தோம்.

எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகம் இயங்கும் நிலையில் இருக்கும்போது திமுக ஆட்சிக்கு வந்தது. ஒரு நல்ல அரசு என்றால்... மக்களுக்காக கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு முற்றிலும் மாறான ஒரு செயலை செய்துள்ளது. இன்று உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொன்முடி. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவர்களது மாவட்ட மக்கள் நலனுக்காக திட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்குள்ள உயர்கல்வித்துறை அமைச்சரோ... இந்த பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்துள்ளார். இத்தகு பெருமை பொன்முடி அவர்களையே சாரும்.

இந்த விழுப்புரம் மாவட்ட மக்கள் மீதான அவரது அக்கறையை இதன்மூலமாக எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், சட்டக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்றவற்றை இந்த மாவட்டத்தில் ஏற்படுத்தி தந்தது அம்மா அரசுதான். 2006 - 2011 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று திமுகவினர் அறிவித்தார்கள். அதன்படியே தான் எங்கள் ஆட்சியின் போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால், இன்று அவதூறான தகவல்களை மக்களிடம் பரப்பி கொண்டுள்ளனர் திமுகவினர்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு

5 சவரனுக்குள்ளாக கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடகு வைத்த நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார் ஸ்டாலின். ஆனால் தள்ளுபடி செய்யவில்லை. இப்படித்தான் என் மக்களை ஏமாற்றுகின்றனர் திமுகவினர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார் ஸ்டாலின். இதுவரை தரவில்லை. கேட்டால் மௌனம் சாதிக்கிறார். திமுக-வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய சரித்திரமே கிடையாது. இப்போதும் நிறைவேற்ற மாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி-ஸ்டாலின்

அதே போல மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி என்றார். ஆனால் இதுவரை அதைப்பற்றி வாயை கூட திறக்கவில்லை. இவர்கள் முதியோர்களையும் விட்டுவைக்கவில்லை. முதியோர் உதவித்தொகையை உயர்த்தி தருவதாக கூறியும்... இதுவரை உறுதி தரவில்லை. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் ஏமாற்றிய கட்சி திமுக ஒன்றுதான். இன்று மக்களை தேடி மருத்துவம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அம்மா மினி கிளினிக், நடமாடும் மருத்துவம் கொண்டு வந்தது அம்மா அரசுதான். நற்பெயரை பெறுவதற்கு இன்று திட்டத்தின் பெயரை மாற்றி சொல்கிறார். நாங்க ஏற்கனவே கொண்டு வந்த டைட்டில் பார்க், உணவு பூங்கா போன்ற பல திட்டங்களை எல்லாம் இவங்க கொண்டு வந்ததாக சொல்லிக்கிறாங்க. இந்த திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

எல்லா துறையை விடவும் உள்ளாட்சித்துறை மிகவும் சிறப்பானது. அடிப்படைத் தேவைகளை மக்கள் நேரடியாக பெற்று பயன்பெறுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நம் கழகத் தோழர்கள் வெற்றி பெறவேண்டும். மக்களுக்கு சேவை செய்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடிக்கவேண்டும். திமுக காரர்களுக்கு தேர்தலில் என்னென்ன பித்தலாட்டம், தில்லுமுல்லு பண்ணலாம் என நன்றாக தெரியும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திய அரசு அம்மா அரசுதான். வெற்றி பெற்றவர்களை நேர்மையாக அறிவித்தோம். ஆனால், இன்று நேரடியாக களத்தில் இறங்க முடியாமல் வேட்புமனுக்களை நிராகரிப்பு செய்றாங்க.

Also Read: தேர்தல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர்!

தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் கவனமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். தேர்தல் நேரத்தில் சற்று அசந்தாலும் கள்ள ஓட்டு போட்டுவிடுவார்கள். கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுகவினர். அவர்களிடம் நாணயத்தை, ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-attacked-dmk-at-the-aiadmk-consultative-meeting-on-the-local-body-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக