Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கையை மீறிச் சென்று கொண்டிருக்கும் E-Waste பிரச்னை... எப்படிக் கையாள்கிறது ஐரோப்பிய ஒன்றியம்?

கடந்த சில நாள்களுக்கு முன்பு, இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களுக்கு Type-c சார்ஜிங் கேபிள்களை மட்டுமே வழங்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். ஒவ்வொரு வருடமும் மின்னணுக் கழிவுகளின் (E- Waste) எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதனைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கிறது.

மின்னணுக் கழிவுகளைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பல திட்டங்களையும், சட்டங்களையும் அமல்படுத்த முயன்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்த முடிவையும் எடுத்துக் கொள்ளலாம். கடந்த 2020-ம் ஆண்டே Right to Repair, Circular Economy Action Plan (CEAP) எனப் பல திட்டங்களுடன் மின்னணுக் கழிவுகளைக் குறைப்பதற்கான ப்ளூபிரிண்டை உருவாக்கியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

மின்னணுக் கழிவு

எவையெல்லாம் மின்னணுக் கழிவுகள்?

மின்சாரம் கொண்டு பயன்படுத்தப்படும் சாதனங்களான டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் துவங்கி மொபைல்போன், லேப்டாப், நமது வாட்ச் வரை அனைத்தையும் குறிப்பிட்ட காலம்வரைதான் நம்மால் பயன்படுத்த முடியும். அதன் ஆயுட்காலம் முடிந்த பின்னர் அவை மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன. மின்னணுக் கழிவுகளை அதன் ஆயுட்காலம் முடிந்த பின்னர் சரியான முறையில் மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும். ஆனால், குறைந்த அளவிலான மின்னணுக் கழிவுகளே சரியான முறையில் கையாளப்படுகின்றன. உலகில் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளில் 10 சதவிகிதம் மட்டுமே சரியான முறையில் கையாளப்பட்டு மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 90 சதவிகித மின்னணுக் கழிவுகள் நிலத்திலோ அல்லது நீரிலோ கொட்டப்பட்டு நிலம், நீர் மற்றும் காற்று மாசடைவதில் பங்கெடுத்துக் கொள்கின்றன.

Also Read: அனைத்து போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர்... ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை ஆப்பிள் எதிர்ப்பது ஏன்?

உலகம் முழுவதும் மின்னணு கழிவுகள் என்பது வருடா வருடம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ITU (International Telecommunication Union), UNU (United Nations university), UNITAR (United Nations Institute for Training and Research) மற்றும் ISWA (International Solid Waste Association) ஆகிய அமைப்புகள் இணைந்து மின்னணு கழிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகின்றன.

2020-ம் ஆண்டு இந்த அமைப்புகள் இணைந்து வெளியிட்ட Global E-Waste Monitor 2020 அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன தகவல்கள் கொஞ்சம் அச்சமூட்டுகிறது. 2010-ம் ஆண்டு 33.8 மில்லியன் மெட்ரிக் டன் அளவு மின்னணு கழிவுகளை உற்பத்தி செய்திருக்கிறோம். 2014-ம் ஆண்டு இதன் அளவு 44.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்திருக்கிறது. இதுவே 2019-ம் ஆண்டு 53.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது. 2030-ஆம் ஆண்டில் 74.7 மில்லியன் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்வோம் என எச்சரித்திருக்கிறது இந்த ஆய்வறிக்கை.

E-Waste

இந்தியா எந்த நிலையில் இருக்கிறது?

இந்தியாவில் ஒரு நபருக்கு 5.8 கிலோ வீதம் மின்னணு சாதனங்கள் சந்தையில் இருக்கின்றன. வருடத்திற்கு ஒரு நபருக்கு 2.4 கிலோ வீதம் மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த மின்னணுக் கழிவுகளில் 10 சதவிகிதம் கூட முறையான அமைப்பு அல்லது நிறுவனங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்பதுதான் கவலைக்குரிய செய்தி. இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மேலாண்மை செய்வது தொடர்பான புதிய விதிமுறைகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ல் முதல் முறையாக அறிவித்தது. பின்னர் 2016 மற்றும் 2018 அந்த விதிமுறைகளில் பல மாற்றங்களையும், திருத்தங்களையும், புதிய விதிமுறைகளையும் கொண்டு வந்தது. ஒரு மின்னணுக் கழிவு என்பது, பிளாஸ்டிக் மற்றும் உலோகங்கள் மட்டுமல்லாது, மனித உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆர்ஸெனிக், காட்மியம், க்ரோமியம், லெஃட் மற்றும் மெர்குரி போன்ற தனிமங்களையும் கொண்டிருக்கும். அவற்றை முறையாகப் பிரித்தெடுப்பதற்கும் முறையாகக் கையாள்வதற்கும் பல்வேறு விதிமுறைகளை அரசு வழங்கியிருக்கிறது.

மேற்கூறிய தனிமங்கள் இருப்பதனால் மின்னணுக் கழிவுகளைக் கையாள்பவர்கள் பாதுகாப்பு உடைகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்துதான் அவற்றைக் கையாள வேண்டும். உலோகங்கள் மற்றும் தனிமங்களைப் பிரித்தெடுத்து அதனைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதுபோன்று பல விதிமுறைகளை வகுத்திருக்கிறது அரசு. மின்னணுக் கழிவுகள் மேலாண்மையை எளிமையாக்கும் பொருட்டு, ஒரு மின்னணு சாதனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம், அதன் தயாரிப்புகள் பயன்பாடற்றுப் போகும்போது அதனைப் பயனர்களிடம் இருந்து பெற்று முறையான மின்னணு மறுசுழற்சி செய்யவோ அல்லது மேலாண்மை செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைக்கவோ வேண்டும் என்ற விதிமுறையை 2016-ம் ஆண்டு கொண்டு வந்தது சுற்றுச்சூழல் அமைச்சகம். ஆனால், இந்தச் செயல்முறை சரிவரக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறிதான். 10 சதவிகிதத்திற்கும் குறைவான அளவே இந்த முறையில் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி அல்லது மேலாண்மை செய்யப்படுகின்றன. மீதம் உள்ள 90 சதவிகித கழிவுகள் முறைசாரா தொழிலாளர்கள் மூலம், மேற்கூறிய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல்தான் மேலாண்மை செய்யப்படுகின்றன.

முறைசாரா தொழிலாளர்கள் மின்னணுக் கழிவுகள் இருக்கும் உலோகங்களையும் தனிமங்களையும் எந்தவித பாதுகாப்பும் இன்றி பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் உடல்நலப் பாதிப்புகளுக்கும் பல தொழிலாளர்கள் ஆளாக நேரிடுகிறது. பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மட்டுமின்றி முறையாக மின்னணுக் கழிவுகளைக் கையாளாமல் போவதால் சுற்றுச்சூழலும் மிகவும் பாதிக்கப்படுவதாக Global E-Waste Monitor ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவித பாதுகாப்பு உபகரனங்களும் இன்றி மின்னணுக் கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்

ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்கிறது?

குறைந்தபட்சமாக மால்டாவில் 20.8 சதவிகிதமும், அதிகபட்சமாக குரோஷியாவில் 81.3 சதவிகிதமும் மின்னணுக் கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மறுசுழற்சி, மேலாண்மை என்பதோடு மட்டும் இதனை நிறுத்தாமல், அதன் மூலகாரணமாக இருக்கும் தயாரிப்பையும் கட்டுப்படுத்த முனைந்திருக்கிறது என்பதுதான் வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம். மின்னணு சாதனக் கழிவுகளைத் தாண்டி அதோடு தொடர்புடைய தேவையற்ற பொருள்கள் நிறையவே கழிவுகளாகச் சேர்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் சார்ஜர்.

மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய மொபைலின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அதற்கான சார்ஜரும் தூக்கியெறியப்படுகிறது. சார்ஜர் பயன்படுத்தும் நிலையில் இருந்தாலும் கூட மொபைலுடன் புதிய சார்ஜர் வருவதால் பழைய சார்ஜர் மின்னணுக் கழிவாக வீட்டிலேயே தேங்கிவிடுகிறது. இதனை மாற்றவே, அனைத்து மொபைல்களுக்கும் ஒரே வகையான சார்ஜரைக் கொடுப்பதோடு, புதிய மொபைல்களை விற்கும்போது சார்ஜரை சேர்த்து விற்கக் கூடாது என்ற முடிவையும் சேர்த்து அறிவித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கடந்தாண்டு Circular Economy Action Plan (CEAP) என்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதன்படி, எந்தவொரு பொருளாக இருந்தாலும், அவை நீண்ட காலம் உழைக்கக்கூடிய வகையிலேயே தயாரிக்கப்பட வேண்டும். ஒரு வேளை மின்னணு சாதனங்கள் பழுதானால் அவை மீண்டும் பழுது நீக்கிப் பயன்படுத்தும் வகையிலேயே தயாரிக்கப்பட வேண்டும். அடிப்படையான பழுது நீக்குவதற்குத் தேவையான உபகரணங்கள், பழுது நீக்குவதற்குத் தேவையான கையேடுகள் ஆகியவை பயனர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற பல அம்சங்களைக் கொண்டு CEAP-ஐ வடிவமைத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். இன்னும் வரும் காலத்தில் மின்னணுக் கழிவுகளை மேலும் குறைப்பதற்காகவும் மறுசுழற்சி செய்வதற்காகவும் பல திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

முறைசாரா மின்னணுக் கழிவு மேலாண்மைத் தொழிலாளர்கள்

இந்தியாவும் மின்னணுக் கழிவுகளும்:

அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள், மின்னணுக் கழிவுகளை தங்கள் நாடுகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக வளரும் நாடுகளுக்குத் தங்கள் நாட்டு மின்னணுக் கழிவுகளை ஏற்றுமதி செய்கின்றன. இப்படி வளர்ந்த நாடுகளில் இருந்து மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆம், இந்தியா, நம் நாட்டில் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளோடு சேர்த்து மற்ற நாடுகளின் மின்னணுக் கழிவுகளையும் சுமந்து கொண்டிருக்கிறது. இதனைப் பற்றிக் கீழே இருக்கும் கட்டுரையில் விரிவாகப் படிக்கலாம்.

Also Read: இந்தியாவை மின்னணுக் குப்பைக்கிடங்காக மாற்றும் சீனா, அமெரிக்கா! என்ன தீர்வு?

ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் மின்னணுக் கழிவுகளுக்கு எதிரான சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.


source https://www.vikatan.com/social-affairs/environment/growing-e-waste-problem-how-the-european-union-is-tackling-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக