'பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.'
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஈசன், மனிதர்கள் மட்டுமில்லாது மரம் செடி கொடி யாவிலும் நிறைந்து இந்த பிரபஞ்சத்தை உய்விக்கிறான் என்கின்றன சைவ சித்தாந்த நூல்கள். மால் அயன் இந்திரன் மட்டுமல்ல, ஈ எறும்பு சிலந்தி உள்ளிட்ட சிறிய ஜீவன்களும் ஈசனை வழிபட்டு உயர் நிலையை எட்டி உள்ளன என்பதற்கு அடையாளமாகத் திகழும் திருக்கோயில்களில் திருவெறும்பியூர் முக்கிய திருத்தலம் எனலாம். திருச்சிக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு! ஜீவராசிகளின் பெரிதான யானை ஈசனை வழிபட்ட திருவானைக்காவும் இங்கேதான் உண்டு! மிகச் சிறியதான எறும்பு வழிபட்ட திருவெறும்பூரும் இங்குதான் உள்ளது.
மணிக்கூடம், ரத்தினக்கூடம் திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரம்மபுரம், லட்சுமிபுரம், மதுவனம், குமாரபுரம், ரதிபுரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது இவ்வூர். இங்கு சுமார் 250 அடி உயரமுள்ள குன்றின் மீது எறும்பீசர் கோயில் உள்ளது. 125 படிக்கட்டுகள் ஏறி ஆலயம் செல்ல, கிழக்கு நுழைவு வாசலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர். கொடிமரம், பலிபீடம், நந்திமண்டபம் தாண்டி கருவறைக்கு முன் முக மண்டபமும், அதையொட்டி திருச்சுற்றும் உள்ளன. திருச்சுற்றில் முருகன், விநாயகர், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சப்த கன்னியர், ஆடவல்லான், சூரியன் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். கருவறையின் வெளிப்புறச் சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் எழுந்தருளி உள்ளனர்.
Also Read: திருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்!
புராண பிரசித்தியும் வரலாற்றுப் புகழும் கொண்ட இந்த கோயில் செங்கல் தளியாக இருந்து 952-ல் கண்டராதித்த சோழர் ஆட்சிக்காலத்தில் கற்றளியாக மாறியது என்கிறது வரலாறு. ஈசனின் கருவறையைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவை சோழர்களின் பெருமையைச் சொல்கின்றன என்றும் கூறப்படுகிறது. பரகேசரிவர்மன், ராஜகேசரிவர்மன், மூன்றாம் ராஜராஜன், சுந்தரபாண்டியன் என பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது எனப்படுகிறது. கி.பி. 1752-ல் ஆங்கிலேய-பிரஞ்சுப் போரின் போது வீரர்கள் தங்கிய படைவீடாக இக்கோயில் பயன்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.
எறும்புகள் வழிபட்ட திருத்தலமே திருவெறும்பியூர் என்றாகி இன்று திருவெறும்பூர், திருவரம்பூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆலய ஈசன் மணி கூடாசலபதி, திருவெறும்பியூர் உடைய நாயனார், எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர், மதுவனேஸ்வரர், மாணிக்க நாதர், மணிகூடாசலதேஸ்வரர் திருவெறும்பியூர் ஆள்வார், திருமலைமேல் மகாதேவர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
இந்திர லோகத்தை இழந்த தேவர்கள் அசுரன் தாருகனுக்குப் பயந்து எறும்பு உருவம் கொண்டு, இங்கு வந்து ஈசனை வழிபட்டார்களாம். தேவர்களின் தலைவனான இந்திரன் இங்கு தினமும் ஆயிரம் கரு நெய்தல் மலர்களால் ஈசனைப் பூசித்து வந்தான் என்கிறது தலவரலாறு. சகல தேவர்களும் எறும்பு வடிவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து வழிபட முடியாமல் தவித்தனர். இதனால் மனம் கனிந்த ஈசன் சற்றே தலை சாய்த்து அவர்கள் வழிபட வகை செய்தார்.
சுயம்பு மூர்த்தியாக அருளும் ஈசனின் திருமேனி மத்தியில் ஒரு பிளவு உள்ளது. இதனால் இந்த லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல உள்ளது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை ஈசன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு 'சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. இன்றும் தினமும் ஈசனுக்கு பூஜை நடக்கும்போது எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை ஈசனே எறும்பு வடிவில் வருவதாகச் சிலிர்ப்போடு சொல்கிறார்கள் திருச்சி மக்கள்.
எறும்புகளுக்காக ஈசன் தலை வணங்கி பூஜைகளை ஏற்றுக் கொண்டான் என்பதில் இருந்து, 'யார் ஒருவர் ஈசனிடம் தலை வணங்கி தன்னை ஒப்புவித்து வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு ஈசனும் அன்பு செய்வான்' என்றே பொருள். இங்குள்ள மூலவர் மண் புற்றாய் இருப்பதால், புற்று லிங்கம் மீது பாணம் சாத்தப்பட்டு, பாணத்தின் மீதே அபிஷேகம் நடைபெறுகிறது.
ஈசனின் மனம் கவர்ந்த நாயகியாக எழுந்தருளி இருக்கும் அம்பிகை சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி, ரத்தினம்மாள், மதுவனவிஸ்வதி, நறுமணக் குழலி என்ற திருநாமங்களோடு தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பதாலும் அழகில் நிகரற்றவள் என்பதாலும் இவளுக்கு தினமும் விதவிதமாக அலங்காரம் செய்கின்றனர்.
Also Read: திருச்சி - ஊறும் வரலாறு 11: குதிரை ஏறிவந்த தமிழ் - வீரமாமுனிவர்!
அகத்திய முனிவர் முருகப்பெருமானிடம் ஞான உபதேசம் பெற்ற தலம் இது என்கிறார்கள். இந்த கோயிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்களும் உள்ளன. இந்திரன், அகத்தியர், நைமிச முனிவர்கள் போன்றோர் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் 2 பதிகங்கள் பாடி இந்த ஈசனைத் துதித்துள்ளார்.
பிரார்த்தனை சிறப்பு: மன்மதனின் மனைவி ரதி, தனக்கு உண்டான கர்வம் நீங்க இங்கு வந்து ஈசனை வழிபட்டுச் சென்றாளாம். இங்குள்ள பிராகாரத்தில் சொர்ணகால பைரவர் சந்நிதியும் அதன் எதிரே கஜலட்சுமி சந்நிதியும் உள்ளன. ஒரே சமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
எறும்புகளுக்கு மனம் இரங்கி அருள் செய்த எறும்பீச பெருமான், இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் சகலருக்கும் வேண்டியதைக் கொடுப்பான் என்கிறார்கள். விரும்பிய வேலை வாய்ப்பைத் தரும் பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. குறிப்பாக அரசு வேலைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்கள் ஏராளம். வேண்டுதல் நிறைவேறி விரும்பிய வேலை பெற்றவர்கள் இங்குள்ள ஈசனுக்கு பாலபிஷேகம் செய்வது வழக்கம். இங்கு வந்து வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும் என்கிறார்கள். தேவர்களின் பாவங்களை நீக்கிய தலம் என்பதால் இங்கு வந்து விளக்கிட்டு வணங்க ஏழேழ் தலைமுறைகளில் செய்த பாவங்களும் நீங்கி, நலம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.
அமைவிடம்: திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் திருவெறும்பூர் தலம் உள்ளது. காலை 6.30 - மதியம் 12, மாலை 4.30 - இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
source https://www.vikatan.com/spiritual/temples/trichy-temples-14-trichy-thiruverumbur-lord-siva-temple-history
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக