Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

IPL : ஜேசன் ராயால் உயிர்பிழைத்த ஹைதராபாத்... வார்னர் வீழ்ந்த கதையும், ராஜஸ்தான் விழுந்த தருணமும்!

கடந்த ஐந்தாண்டுகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தால், புறந்தள்ள முடியாத ஒரு பெயர் டேவிட் வார்னர். ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக 500 ரன்களுக்குமேல் எடுத்து (அதில் மூன்று முறை ஆரஞ்சு கேப் வின்னர்) சாதித்தவர். 2016-ம் ஆண்டு அந்த அணியை ஐபிஎல் சாம்பியனாக்கியவர். இந்தாண்டு சரியாக விளையாடவில்லை என முதலில் கேப்டன்சியிலிருந்து விலக்கப்பட்டவர், பின்பு அணியிலிருந்து தூக்கப்பட்டவர். தற்போது மைதானத்துக்குக்கூட வராமல், ஹோட்டல் அறையில் அமர்ந்துதான் போட்டியைக் கண்டிருக்கிறார். வார்னரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட படமும் இதைத்தான் உறுதி செய்கிறது.

david warner

சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டிரெவர் பேய்லிஸ்ஸும், ''எப்படியும் ஃபைனல் செல்ல முடியாது என்றாகிவிட்டது. அதுதான் மூத்த வீரர்களூக்குப் பதிலாக இளைய வீரர்களை அழைத்து வந்திருக்கிறோம். அவர்களுக்கு மைதான அனுபவத்தைக் கொடுக்கவிருக்கிறோம். நாங்கள் ஒரு சீனியர் வீரரை மட்டும் விட்டுவிட்டு வரவில்லை" என்றார். ஆம், கேதார் ஜாதவ் , சபாஷ் நதீம் போன்றவர்களுக்கும் இதுதான் நிலைமை. கேதார் ஜாதவை எதன் அடிப்படையில் அணியில் சேர்க்கிறார்கள் என ஷான் பொல்லாக் விமர்சித்த ஒரு நாளில் இப்படியானதொரு முடிவை எடுத்திருக்கிறது சன் ரைசர்ஸ். ஐபிஎல் அணிகள் அளவுக்கு தேச அணிகள்கூட கறாராக இருப்பதில்லை என்பதே உண்மை. சரி, இந்த தடாலடி மாற்றம், அணிக்கு உதவியதா என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வார்னர், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், கலீல் அகமதுக்குப் பதிலாக ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா, சித்தார்த் கௌல், பிரியம் கார்க் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். ராஜஸ்தான் அணியிலும் மூன்று மாற்றங்கள். எவ்லின் லூயிஸின் விக்கெட்டை வீழ்த்தி விக்கெட் மெய்டனுடன் ஆரம்பித்து வைத்தார் புவி. சஞ்சு சாம்சனுடன், ஜெய்ஸ்வால் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராயல்ஸ் அணி கேப்டன் சிறப்பானவொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கடைசி 17 பந்துகளில் ராஜஸ்தான் அணியால் ஒரு பவுண்டரியைக்கூட அடிக்க முடியவில்லை. ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்களோடு ராஜஸ்தான் முடித்துக்கொண்டது.

IPL

ஐபிஎல்-ல் இதுவரையில் பெரிதாக சாதிக்காத ஜேசன் ராய் களமிறங்கினார். முதல் மூன்று ஓவர்களில், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். சாஹா கூட பவுண்டரி, சிக்ஸர் என அடித்தாலும், ராய் தன் நேரத்துக்காகக் காத்திருந்தார். பவுண்டரிக்கான வாய்ப்புகள் இருந்தபோது, வெறுமனே டிஃபெண்ட் மட்டுமே செய்துகொண்டிருந்தார். ரஹ்மான் பந்தில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில், ஒரு ஸ்கூப் அடித்து முதல் பவுண்டரியை பதிவு செய்தார். அடுத்து பந்து எக்குத்தப்பாக பவுன்ஸாக, பைஸில் நான்கு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார். பாயின்ட்டுக்கும், ஷார்ட் தேர்ட் மேனுக்கும் இடையே ஒரு பவுண்டரி; ஃபைன் லெக் திசையில் ஒன்று; மிட்விக்கெட்டில் ஒன்று என சன்ரைசர்ஸ் இந்த சீசனில் தொடர்ந்து மிஸ் செய்தவொரு விஷயத்தை பூர்த்தி செய்தார் ஜேசன் ராய்.

இதே சீசனில், ராஜஸ்தானுக்கு எதிரான முந்தையை போட்டியிலும், வார்னர் களமிறக்கப்படவில்லை. ஆனால், அந்தப் போட்டியில் அப்படியானதொரு மாற்றம் நிகழவில்லை. தற்போது அதை நிகழ்த்திக்காட்டினார் ஜேசன் ராய். பவர் பிளேவுக்குள்ளாகவே சாஹா ஸ்டம்ப்பிங் முறையில் வெளியேறினார். ஆனால், தன் முதல் பந்தை சந்தித்த கேப்டன் கேன் வில்லியம்சனும், ஜேசனுடன் இணைந்து அடித்த ஆட ஆரம்பித்தார். எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், தனியானதொரு தன்னம்பிக்கைப் பிறக்கும். அப்படியானதொரு சூழலில் தான் சன்ரைசர்ஸ் நேற்று இருந்தது. பவர்ப்ளே இறுதியில் 63 ரன்கள் எடுத்து சேஸிங்கை ஈஸியாக்கியது சன்ரைசர்ஸ்.

ரன்ரேட்டை ஒன்பதுக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டு, அதே சமயத்தில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தனர் ராயும், வில்லியம்சனும். மஹிபால் லோம்ரர் பந்தில் லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் வில்லியம்சன். அடுத்த ராகுல் திவேதியா ஓவரில் ருத்ரதாண்டவமாடினார் ஜேசன் ராய். டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு இமாலய சிக்ஸ் அடித்தார் ராய். ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி அடித்து 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவுட்சைடு ஆஃபாக போடப்பட்ட அடுத்த பந்தையும், பவுண்டரிக்கு விளாசினார். திவேதியா வீசிய ஓவரில் மட்டும் 21 ரன்கள். சக்காரியா பந்தில் ராய் அவுட்டானாலும், தேவைப்படும் ரன்ரேட் என்பதை ஆறுக்கு கொண்டுவந்ததில் ராயின் பங்கு அளப்பரியது.

IPL

கடைசி 12 பந்துகளில் ஆறு ரன்கள் தேவை என்கிற நிலையில் கடைசி பந்து வரை ஆட்டத்தை இழுக்காமல், கீப் இட் சிம்பிள் என அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார் வில்லியம்சன். வில்லியம்சன் அந்த பவுண்டரியுடன், அரைசதத்தையும், சன்ரைசர்ஸுக்கு இரண்டாவது வெற்றியையும் பெற்றுத் தந்திருந்தார். வியாழன் அன்று டேபிள் டாப்பர்ஸான சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கவிருக்கிறது சன் ரைசர்ஸ்.

ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேசன் ராய் , இந்த சீசனில் இனி வார்னர் பிளேயிங் லெவனுக்குள் வருவது கடினம் என்பதை மட்டும் உறுதிசெய்திருக்கிறார்.

IPL

எந்த எந்த அணிகளின் ப்ளேஆஃப் கனவுகளில் சன் ரைசர்ஸ் மண்ணள்ளிப் போட காத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://sports.vikatan.com/ipl/samsons-heroics-goes-in-vain-after-a-surprise-knock-by-roy-williamson-duo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக