Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

`பிரசவம் பார்க்கிற எங்களுக்கே மகப்பேறு விடுப்பு இல்லை!' - விரக்தியில் அரசு பெண் மருத்துவர்கள்

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (DME) கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் (DMS) கீழ், மாவட்டம், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பெண் மருத்துவர்களுக்கு பிரசவகால விடுப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Doctor

இதுபற்றி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம்.

``எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துவிட்டு முதுநிலை படிப்புக்குள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர், அரசு மருத்துவராகப் பணியாற்றியபடியே முதுநிலை படிப்புக்கு வருபவர்கள்; இவர்களை சர்வீஸ் போஸ்ட் கிராஜுவேட் (Service PG) என்பார்கள்.

அடுத்ததாக அரசு கல்லூரியில் படித்துவிட்டு அங்கு பணியாற்றாதவர்கள் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு, முதுநிலை படிப்புக்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்கள், இவர்களை நான்சர்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ் (non-service postgraduates) என்பார்கள்.

Hospital (Representational Image)

Also Read: தயாரிக்கப்படாத பாம்புக்கடி மருந்து; ₹16.77 கோடியை வீணாக்கிய அதிமுக அரசு!

இவர்களில் நான்சர்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடித்த பிறகு, இரண்டு ஆண்டுக்காலம் அரசு மருத்துவமனைகளில் சம்பளத்துடன் சேவையாற்ற வேண்டும் என்பது விதி. அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளாதவர்கள் பிணைத்தொகை செலுத்திவிட்டுச் செல்லலாம் என்பதும் விதி. பிணைத்தொகை என்பது பல லட்ச ரூபாய் என்பதால் பெரும்பாலும் அனைத்து மருத்துவர்களுமே இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டுத்தான் வெளியே செல்வார்கள். இதுபோன்று பணியாற்றும் பெண் மருத்துவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவர்களுக்கான சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பை 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் அரசு மருத்துவர்களான எங்களுக்கு அந்தச் சலுகை கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்தில் பல நூறு பேருக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எங்களுக்கே பிரசவகால விடுப்பு கிடைப்பதில்லை. மாறாக மருத்துவ விடுப்பு என்றுதான் விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால் `லாஸ் ஆஃப் பே' முறையில் சம்பளம் இல்லாமல்தான் பணியாற்றுகிறோம்.

இதுபோன்று விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை 30-40 பேர் என்ற குறைவான அளவு என்பதால் எங்களின் கோரிக்கையும் யாருடைய காதுகளிலும் விழவில்லை. அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியிடங்களுக்கான தேர்வும் 2016-ம் ஆண்டிலிருந்து நடைபெறவில்லை" என்று தெரிவித்தனர்.

Pregnancy (Representational Image)

Also Read: மகப்பேறுக்கு தயாரான கர்ப்பிணி ஊழியர்; குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் தந்த அரசு அலுவலக ஊழியர்கள்!

இந்த விவகாரத்தின் உண்மை நிலவரம் என்ன என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும் இணை பேராசிரியருமான ராமலிங்கத்திடம் பேசினோம்.

``கோப்புகள் தேங்கியிருப்பதுதான் இந்த விஷயத்தில் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. மருத்துவத் துறையில் பதவி உயர்வு, இடமாற்றம், விடுப்பு என எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான கோப்புகள் நிர்வாகத்துறையிடம் நீண்ட காலமாக தேங்கியே கிடக்கின்றன. அது ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு நகர்வதற்கே பெரும் போராட்டமாக இருக்கும்.

தாங்கள் விரும்பிய ஊரில், மருத்துவமனையில் பணி செய்வதால் அல்லது விரும்பிய இடத்துக்கு பணம் கொடுத்து போஸ்டிங் வாங்கியிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் இரண்டு ஆண்டுக்கால ஒப்பந்தம் முடிந்த பிறகும் அரசு மருத்துவமனை பணியில் தொடர்வார்கள். மருத்துவத் துறையும் அந்த மருத்துவர்களை ஒப்பந்தம் முடித்துப் போகும்படி கட்டாயப்படுத்துவதுமில்லை, அவர்களை பணி நிரந்தம் செய்வதும் இல்லை. அப்படி பணியைத் தொடர்வதால் அவர்கள் தற்காலிக மருத்துவராகவே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ராமலிங்கம்

இவர்களுக்கு நிரந்த மருத்துவர்களைப் போன்றே ஊதியம், சலுகைகள் அனைத்தும் கொடுக்கப்படும். ஆனால் நிரந்தர மருத்துவர்களுக்கு உண்டான விடுப்பு மட்டும் நிலுவையில் இருக்கும். இந்த விஷயத்திலும்கூட கோப்புகள் நிலுவை என்பது பெரும் பங்கு வகிக்கிறது

உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் முதுநிலை படிப்பை முடித்தவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்துவதற்கான சிறப்பு தகுதி பெறும் தேர்வு (Special Qualifying Exam) 2016-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை.

Exam (Representaional Image)

Also Read: அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு - நடைமுறை குழப்பத்தால் ஆண்களுக்கு பாதிப்பா?

எங்கள் கோரிக்கை என்னவென்றால் ஒப்பந்த காலம் முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நான்சர்வீஸ் போஸ்ட்கிராஜுவேட் மருத்துவர்களை பணியிலிருந்து விடுவித்துவிட வேண்டும். சிறப்புத் தகுதி பெறும் தேர்வு நடத்தி அரசு மருத்துவமனைகளிலுள்ள காலியிடங்களுக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பதே. அப்போதுதான் இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்பட்டு சமூக நீதி பாதுகாக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/non-service-pg-govt-doctors-suffers-due-to-lack-of-maternity-leave

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக