Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

தேனி: ஆக்கிரமிப்பு நிலத்துக்கு அடிதடி! - நாட்டு வெடிகுண்டு வீசியதாக நாடகமாடியவர் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலகோம்பையைச் சேர்ந்தவர் சூரியன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துவருகிறது. ஏற்கெனவே இரு தரப்பினர் மீது ராஜதானி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாலகோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட கொழுஞ்சிபட்டி மயானத்துக்கு அருகேயுள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சூரியன் என்பவர் ஆட்டுக்கொட்டகை அமைத்திருக்கிறார். இந்த இடத்துக்கு ஒருவருக்கு ஒருவர் சொந்தம் கொண்டாடியதிலும் இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு இருந்திருக்கிறது. இந்தநிலையில் சூரியன் அமைத்திருந்த ஆட்டுக்கொட்டகையை மாணிக்கத்தின் மகன்கள் முத்துபாண்டி, சின்னசாமி ஆகியோர் சேர்ந்து அடித்து நொறுக்கிவிட்டனர். இதுகுறித்து சூரியன் போலீஸாரிடம் புகார் அளிக்கும்போது,`` எனது ஆட்டுக்கொட்டகையை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, நாட்டு வெடிகுண்டுகள் வீசிச் சென்றுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

நாட்டு வெடிகுண்டுகள்

Also Read: கத்தி, அரிவாளுடன் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த இளைஞர்; கைது செய்த போலீஸார்!

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது கொட்டகை சூறையாடப்பட்ட பகுதியில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. அது குறித்து சூரியனிடம் கடுமையாக விசாரித்தபோது, காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் வாங்கி வைத்திருந்ததாகவும், மாணிக்கம் தரப்பினர்மீது கேஸ் ஸ்ட்ராங் ஆவதற்காகத்தான் என்னுடையை வெடிகுண்டுகளை முத்துபாண்டி, சின்னசாமி ஆகியோர் வீசிச் சென்றதாகவும் பொய் கூறினேன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜதானி போலீஸார் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி மணலில் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துள்ளனர்.

மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய சூரியன், முத்துபாண்டி ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சின்னச்சாமியைத் தேடிவருகின்றனர்.

போலீஸார்

இதுகுறித்து ராஜதானி போலீஸாரிடம் விசாரித்தோம், ``இடப்பிரச்னை காரணமாக இரு தரப்புக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுவருகிறது. இவர்கள்மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு இடத்துக்கு அடிதடி நடத்தியதில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில்தான் நாட்டு வெடிகுண்டு நாடகம் அரங்கேறியுள்ளது. சூரியன், அவரின் தம்பி துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற்றுள்ளனர். இதை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/man-arrest-after-complaint-as-country-bomb-thrown-in-his-land

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக