மார்க்கெட்டிங் – இன்றைய கால்கட்டத்தின் மிகப்பெரிய பிசினஸ். சொல்லப்போனால் எந்தத் துறையையும் இயங்கவைப்பது இதுதான். சிறு தொழிலிலிருந்து பில்லியன்கள் புரளும் தொழில்கள்வரை அனைத்தும் இன்று இதை நம்பியே இயங்கிக்கொண்டிருக்கின்றன. நம் தரம் பேசட்டும் என்று நினைத்து அதைப் புறக்கணிப்பவர்கள், ஆரம்ப நிலையிலேயே தேங்கிவிடுகிறார்கள். கார்ப்பரேட் மயமான இந்த உலகில் மார்க்கெட்டிங் இல்லாமல் எந்தத் தொழிலும் செழிப்பதில்லை. எந்தப் பொருளும் விற்பனையாவதில்லை. இப்போது என்று இல்லை. ஆண்டாண்டுகளாக இந்த மார்க்கெடிங் துறைதான் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது.
1947-ம் ஆண்டு இறந்த ஹென்றி ஃபோர்ட் கூறிய வார்த்தைகள் இவை. மார்க்கெட்டிங் அப்போதிருந்தே ஆட்சி புரியத் தொடங்கிவிட்டது! மிகப்பெரிய முதலீடு செய்யும் நிறுவனங்கள் தங்கள் பொருள் சந்தையை அடைந்ததுமே நல்ல ரிசல்டைக் கொடுத்துவிடும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்தப் பொருள் launch ஆவதற்கு முன்பே பல கோடிகள் கொட்டி விளம்பரம் செய்வார்கள். நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் செய்வது அதில் ஓர் அங்கம். ஆனால், எல்லா பொருள்களுக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அந்தப் பொருள் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தாகவேண்டுமே! இல்லையெனில் எப்பேர்ப்பட்ட மார்கெடிங் நுட்பமாக இருந்தாலும் தோற்றே போகும்.
2008. கிரிக்கெட் இந்தியாவை மையமாக வைத்து இயங்கத் தொடங்கிய தருணம். ஈடு இணையற்ற நம் மக்கள் தொகை, இந்தியாவை மாபெரும் சந்தையாக மாற்ற, அந்தச் சந்தைக்கு ஏற்ற ஒரு பொருளை இயக்க ஆயத்தமானது BCCI. டி-20 கிரிக்கெட்டின் எழுச்சி, கபில்தேவின் முன்னெடுப்பான ICL இரண்டையும் தழுவி IPL எனும் பொருளை உருவாக்கியது. அந்தப் பொருளை விற்பனை செய்ய இந்தியாவின் முக்கியப் புள்ளிகள் உள்ளே இழுக்கப்படுகிறார்கள். ஷாரூக் கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நட்சத்திரங்கள் ஒருபக்கம், அம்பானி, மல்லையா போன்ற பிசினஸ் புள்ளிகள் ஒருபக்கம். கில்கிறிஸ்ட், முரளிதரன், அக்தர், கிப்ஸ் போன்ற உலக நட்சத்திரங்கள் ஒருபக்கம். கவனம் ஈர்க்கத் தொடங்கியது IPL.
ஆனால், அது மட்டும் போதுமானதாக இருக்குமா? ஷாரூக் விளம்பரத்தூதராக நடித்த பல பொருள்கள் மார்க்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியிருக்கின்றனவே! அந்தப் பொருள் எப்படியானது என்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். கிளப் விளையாட்டுப் போட்டிக்குப் பழக்கம் இல்லாத அந்த வாடிக்கையாளர்களை உடனடியாக ஈர்க்கவேண்டியது மிகவும் முக்கியம். நல்ல படம் எடுத்துவிட்டு, 20-வது நாள் தியேட்டரில் கூட்டம் வரும் எனக் காத்திருக்கும் இயக்குநரைப்போல் காத்திருக்க முடியாது. இங்கு கொட்டப்பட்டிருப்பது பலநூறு கோடிகள். எல்லோரும் வியாபாரிகள். உடனடியான ரிசல்ட் கிடைக்கவில்லையெனில் அனைத்து ஏரியாவிலும் அடி வாங்க நேரிடும். ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற நெருக்கடியை நிச்சயம் லலித் மோடியின் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள்.
13 வருடங்கள் நகர்ந்துவிட்டன. இன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக நிற்கிறது IPL. உலகக் கோப்பையை விட முக்கியமான தொடராகக் கருதப்படுகிறது. வியாபார ரீதியில் அதுதான் உண்மையும் கூட. ISL, ப்ரோ கபடி என புதிய பொருள்கள் சந்தைக்குள் நுழைவதற்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது ஐபிஎல். இதுவும் கிரிக்கெட்தான். ஆனால், கிரிக்கெட்டுக்கான வாடிக்கையாளர்களை விட IPL கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படியொரு பிசினஸ் செய்திருக்கிறது IPL. ஆம், ரசிகர்களின்… சாரி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறது. இல்லையெனில் 13 ஆண்டுகள் இப்படி கோலோச்ச முடியாதே!
100 கோடி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய IPL தொடருக்குத் தேவைப்பட்டது என்னவோ வெறும் ஒன்றரை மணி நேரம்தான். எப்படி இருக்கும், என்ன மாதிரியான அனுபவம் தரும் என்று தெரியாமல் இருந்த அனைவருக்கும், ‘இனி எதிர்காலத்தில் இந்தத் தொடர் கொடுக்கப்போவது இதுதான். இப்படியான அதிர்ச்சியும், ஆச்சர்யமும், உங்களை நீங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அனுபவமும் நொடிக்கு நொடி கிடைத்துக்கொண்டே இருக்கும்’ என்ற ஸ்டேட்மென்டை அன்று ஏற்படுத்தியது IPL. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஏற்படுத்தினார் Brendon McCullum!
Also Read: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சூப்பர் சண்டே... இதயத்துடிப்பை எகிற வைத்த த்ரில்லரில் நடந்தது என்ன? | IPL 2021
It’s all about the first impression என்பார்கள். ஷாரூக் கான், பிரீத்தி ஜிந்தா போன்றவர்களால் அதைக் கொடுத்திருக்க முடியாது. கிரிக்கெட் வாடிக்கையாளர்கள், ‘இது வேறு மாதிரி ஆட்டம்’ என்று புரிந்துகொண்டதும், கிரிக்கெட்டே பார்க்காதவர்களும் ‘இது என்னடா புது ஆட்டமா இருக்கே’ என சோனியின் முன் அமர்ந்ததும் McCullum ஆடிய அந்த 73 பால் இன்னிங்ஸால்தான்.
எந்த ஒரு நிறுவனமும் யோசிக்கும் விஷயம், தாம் எப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். புதிதாக ஒரு பொருளை மார்க்கெட்டுக்குள் இறக்கும்போது, பழைய வாடிக்கையாளர்களை மட்டும் இலக்காகக் கொண்டிருந்தால் அதனால் நீடிக்க முடியாது. புதிய வாடிக்கையாளர்களை இழுக்க, புதிதான விஷயங்கள் அதில் இருக்கவேண்டும். கிரிக்கெட்டின் வாடிக்கையாளர்கள் மட்டும் IPL தொடரின் இலக்காக இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகள் நீடித்திருக்க முடியுமா?
“No class, no flair” என்று குறை சொல்வார்கள். இப்போதே டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட் என்று புலம்புகிறார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அதனால், புதிய வாடிக்கையாளர்களை இழுக்கவேண்டும். கவர் டிரைவ் பற்றியும், hand eye coordination பற்றியும் கவலைப்படாதவர்களை இதைப் பார்க்கச் செய்யவேண்டும். ஊரில் களத்து மேட்டில் அமர்ந்து இளவட்டப் பையன்கள் ஆடுவதைப் பார்த்தவர்களை, எனக்குத் தேவை என்டெர்டெய்ன்மென்ட் என்று சொல்லும் சினிமா ரசிகர்களை, தன் அண்ணனுக்கும், தம்பிக்கும் பந்துவீசிய சகோதரிகளை ஈர்க்க வேண்டும். அதற்குக் கொடுக்கவேண்டியது – entertainment. A brutal entertainment. கண்மூடித்தனமான என்டெர்டெய்ன்மென்ட் ஏற்படுத்திக்கொடுத்தார் McCullum.
10 பௌண்டரிகள், 13 சிக்ஸர்கள். முன்னணி இந்திய வீரர்கள் பிரவீன் குமார், ஜாகீர் கான் இருவர் பந்துவீச்சும் எடுபடவில்லை. ஜாம்பவான் காலிஸின் பந்துவீச்சையும் கிழித்துத் தொங்கவிடுகிறார். யாரென்று தெரியாத நாஃப்கி, ஸ்பின்னர் சுனில் ஜோஷி ஆகியோரின் பௌலிங்கும் பஞ்சு பஞ்சாய்ப் பறக்கிறது. அதுவரை கிரிக்கெட் உலகம் பார்த்திடாத ஒரு அடி. எப்படிப் போட்டாலும் வானத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றன பந்துகள். லைன், லென்த், ஸ்விங், மூவ்மென்ட் எல்லாம் அர்த்தமற்றுப் போகின்றன. டிரைவ், ஃபிளிக் போன்றவையுமே! இசைக்கு மொழியில்லை என்பதுபோல், சிக்ஸருக்கும் மொழி இல்லை. அங்கு கிரிக்கெட் மொழி தேவையில்லை. எல்லோருக்கும் புரியும். எல்லோருக்கும் பிடிக்கும். KKR அணிக்கு McCullum ஆடிய ஆட்டம் மேற்கூறிய அனைவருக்கும் பிடிந்திருந்தது. IPL அவர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
Also Read: ஹர்சலின் ஹாட்ரிக், ஃபார்முக்குத் திரும்பிய ஈ சாலா பாய்ஸ்... பல்தான்ஸின் படுதோல்விக்கு என்ன காரணம்?
இன்றுவரை IPL தொடரின் புளூ பிரின்ட் அதுதான். கிறிஸ் கெய்ல், பொல்லார்ட், டி வில்லியர்ஸ், பட்லர், ரஸல் என எல்லோரும் அதே புளூ பிரின்டைக் கையில் எடுத்தவர்கள்தான். அதை அவரவர் பாணியில் செய்திருப்பார்கள். IPL என்றால் நினைவுக்கு வருவதும் இவர்கள்தான். சச்சின், கோலி எல்லாம் எத்தனை ரன்கள் எடுத்தாலும் இவர்களுக்குப் பிறகுதான். நேற்று வரை கெய்லும், இன்று ரஸலும் தொடர்வது மெக்கல்லம் ஆடிய ஆட்டத்தின் நீட்சிதான். அதுதான் இந்தத் தொடரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
ஒன்றரை தசாப்தமாக ஆட்சி புரியும் ஒரு தொடருக்கு வெறும் ஒன்றரை மணி நேரத்தில் கியாரன்டி கொடுத்தவர் மெக்கல்லம். ஷாரூக், பிரீத்தி ஜிந்தா, இங்கே விஜய், நயன்தாரா போன்றவர்கள் கொடுத்த மார்க்கெட்டிங்கை விட மெக்கல்லம் கொடுத்தது வேற லெவல் மார்கெட்டிங்.
பாலிவுட் கால்பதிக்காத நாடுகளிலும் IPL காலூன்றக் காரணம் அந்த இன்னிங்ஸ். அடுத்த ஆண்டே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கேயும் நல்ல வரவேற்பை IPL பெற்றது சாதாரண விஷயமா என்ன?! அப்படியொரு விளம்பரம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். அதற்கான கியாரன்டியும் கொடுத்திருக்கிறார். வெறும் ஒன்றரை மணி நேரத்தில்.
IPL தொடரின் முதல் ஜாம்பவான் அவர்தான். அதன் முதல் முகமும் அவர்தான்! Happy Birthday Baz!
source https://sports.vikatan.com/ipl/brendon-mccullum-is-the-biggest-advertisement-ipl-has-ever-made
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக