Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

`முதுகுடி மக்களின் தோழர்’ வி.பி. குணசேகரன் | இவர்கள் - பகுதி 2

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்

பெருநகர பாலங்களைக் கூரைகளாகவும், செப்பனிடப்பட்ட பூங்காக்களில் மனித மூட்டைகள் போலும், உணர்வுகள் மரத்துப்போன அயர்ச்சியில் உறங்கும் மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? கிடைத்ததைக் கொண்டு பசியாறியும், உறைவிடமென ஏதுமில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களில் பலரது வாஞ்சை, திக்குத் தெரியாமற்போன தமது வாழ்நிலங்களுக்கு என்றாவது திரும்பிவிட மாட்டோமா என்பதே. கண்களில் ஒளியும் நம்பிக்கையும் குன்றி அச்சிறு குழிகளில் ஏக்கத்தை இட்டு நிரப்பி வாழ்கின்றனர். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பிழைப்பிற்காக நகர்ந்து கொண்டேயிருக்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் நம் கண் முன்னாலேயே தங்களது அடையாளத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உயிருக்கும் உடைமைக்கும் உடற்நலனிற்கும் அடிப்படை உத்தரவாதமில்லாமல் சாமானியனின் வாழ்வுகூட வாய்க்கப் பெறாத இவர்களில் பெரும்பாலானோர் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த பழங்குடி மக்கள். வர்த்தகத்தையும் வியாபார இலக்குகளையும் நோக்கி நகர்ந்துசெல்லும் அரசாங்கங்கள் இயற்கையின் அடிமடியியைச் சுரண்டி பழங்குடி மக்களின் நிலங்களைச் சூறையாடி அவர்களது வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தியூர் பகுதியின் தாமரைக்கரையில் நண்பர்கள் ஸ்ரீயும் ப்ரேமும் ஒரு நிகழ்விற்கு என்னை அழைத்திருந்தார்கள். கடும் நோய்மையில் உழன்று கொண்டிருந்த நாட்கள். தயக்கத்தோடு துவங்கிய அந்தப் பயணம் தோழர் வி.பி.குணசேகரனையும் தோழர் அன்புராஜையும் சந்தித்ததால் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாய் மாறியது. பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான சமூக அறிவியல் பள்ளி ஒன்றை தோழர் குணசேகரன் நடத்தி வருகிறார். காடும் மலைகளும் பழங்குடி மக்களும் எனக்குப் பழகியவையே என்றாலும் வீரப்பன் தேடுதல் வேட்டை என்னும் பெயரில் தமிழக கர்நாடக அதிரடிப் படையினர் நிகழ்த்திய தேடுதல் நடைமுறைகளால் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்கொண்டு அவ்வன்முறையின் வடுக்களை இன்னும் தங்கள் முதுகில் சுமந்துகொண்டிருக்கும் மக்களோடு நெருங்கி உரையாட முடிந்தது. அது வாழ்க்கைக்கான சிறந்த படிப்பினைகளைத் தந்தது எனலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்த தோழர் வி பி குணசேகரனின் குடும்பம் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களைச் சார்ந்தது. அவரது தந்தை இரண்டுமுறை அவ்வூரின் பஞ்சாயத்து சேர்மனாக இருந்தவர், தீவிர காங்கிரஸ் சார்புள்ளவர். பொறியியல் பட்டப்படிப்பை முடித்த குணசேகரனுக்கு நாசிக்கில் ஒரு நிறுவனத்தில் நல்ல பணி அமைந்தது. வேலை வாய்ப்பின்மையின் கோரப்பிடியில் நாடே தத்தளித்துக் கொண்டிருந்த அக்காலத்தில் அந்த வேலையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு வருட காலம் அங்கு வேலை செய்கிறார். வாழ்வுக்கு வருவாய் கிடைத்த போதிலும் மனம் எப்போதும் தனது சொந்த மக்களையும் அவர்களின் முன்னேற்றம் குறித்தும் சிந்தித்தபடியிருந்ததால் ஒரு வருட காலத்திற்குப்பின் வேலையை உதறிவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.

வி.பி. குணசேகரன்

ஊரில் தம் நிலத்தில் விவசாய வேலைகளைக் கவனிக்கத் துவங்கியபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப்பெறுகிறது. அது தனது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமென்பதை அவரே அவ்வப்போது இதனைக் குறிப்பிடுவதுண்டு. இந்த உலகை உழைப்பவர்களின் கண்களின் வழியாய்ப் பார்க்க வேண்டுமென இடதுசாரி இயக்கம் வழிகாட்டுகிறது. வாழ்வின் பெரும் பகுதியை விவசாயக் கூலிகளாகக் கழித்து தங்களுக்கென எதையும் சேமித்துக் கொள்ளாத எளிய மனிதர்களின் துயரம் அவரை சிந்திக்க வைக்கிறது. அச்சமயத்தில் பவானிக்கு அருகிலேயே தனியார் நிறுவனத்தில் புதிய பணி கிடைத்துவிடுகிறது. அங்கு உழைப்பவர்களின் மீது நிகழும் சுரண்டல்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் போராடவும் பழக்கியிருந்த கம்யூனிசம் அந்த இடம் தனக்கானதில்லை என்கிற புரிதலை அவருக்குக் கொடுக்க அந்த வேலையை விட்டுவிடுகிறார். "மக்களிடம் செல்லுங்கள், அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்னும் தோழர் மாவோவின் வார்த்தைகளின்படி மனிதர்களை புத்தகங்களாகப் படிக்கத் துங்கினார். குணசேகரன் தோழர் குணசேகரனாக மாற்றம் பெறத் துவங்கியது இங்குதான்.

Also Read: இந்தியாவில் வாழும் ஆப்ரிக்க பழங்குடி இனத்தின் வரலாறும் இன்றைய துயரங்களும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகத் தன்னை இணைத்துக் கொண்டவர் செல்வாக்கான பொருளாதாரப் பின்னணியில் வளர்கிறவர்களுக்கு இயல்பாக இருக்கும் எந்த போலி பகட்டும் தன்னை அண்டாதபடி எளிய வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மார்க்சையும் ஏங்கல்சையும் எத்தனை ஆழமாக உள்வாங்கியிருந்தாரோ அதேயளவிற்கு காந்தியடிகளையும் ஆழ்ந்து கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நூல்கள் எப்படி வாழவேண்டுமென்பதை மட்டுமல்ல, எதற்காக வாழ வேண்டுமென்கிற புரிதலையும் ஒருவருக்கு உருவாக்கும். கனவுகளையும் லட்சியங்களையும் விதைப்பதோடில்லாமல் அதைச் செயல்படுத்துவதற்கான பாதையையும் வலிமையையும் உருவாக்குவது புத்தகங்கள்தான்.

தோழர் வி.பி.ஜி ஒரு நிகழ்வில் பேசும்போது, ‘ஆதிக்க சாதியில் பிறந்த தனக்குள் இத்தனை காலத்திற்குப் பின்னும் அந்த சாதிய அடையாளங்கள் ஒளிந்திருக்கின்றன, மரணிப்பதற்கு முன் என்னுள் எஞ்சியிருக்கும் அக்கீழ்மையை அழித்துவிட வேண்டுமென்று" தீர்க்கமாகக் கூறி தனது உரையைத் தொடர்கிறார். முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பழங்குடி மக்களின் நலன்களுக்காக இயங்கி வரும் ஒருவர் இத்தனை வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமானது. பல நூறு வருடங்களாய் இந்த சமூகத்தின் மனதில் ஆழமாய் விதைக்கப்பட்டுவிட்ட சாதியிலிருந்து ஒருவன் அத்தனை எளிதில் முற்றாகத் துண்டித்துக்கொள்ள முடிவதில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம். "தலித் அல்லாத சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாக வேண்டியதுதான் இந்தக் காலத்திற்கான தேவை" என தோழர் தொல். திருமாவளவன் குறிப்பிடுவதன் முக்கியத்துவத்தை இங்கு நாம் கவனிக்கவேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபிறகுதான் தனக்கு சமூகம் குறித்தான படிப்பினைகள் கிடைத்ததாய் குறிப்பிடுபவர், நமது கல்வித்திட்டம் சமூகத்தைக் குறித்த எந்தப் பாடங்களையும் நமக்கு எடுப்பதில்லை என்பதை அவ்வப்போது சுட்டிக் காட்டுவதுண்டு.

சமூக அடுக்கில் தலித் மக்களும் பழங்குடிகளும் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்? இந்தப் பிரிவினை எவ்வாறு உருவானது என்பதைக் குறித்து பாடத்திட்டம் இருந்திருக்க வேண்டுமல்லவா? வாழ்க்கைக்கான எந்த அடிப்படை அறிவையும் புகட்டாத நமது கல்வி அமைப்பு நம்மை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தான் வாழும் சமூகத்தையும் இயற்கையையும் புரிந்து கொளவதற்கான அறிவைப் பெறாத ஒருவன் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனால் என்ன பயன்? சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தாத அறிவு ஒரு வகையில் மனித குலத்தின் வீழ்ச்சிக்கான செயல்பாடுதான். ஆயுதங்களை உருவாக்குவதை விடவும், வின்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதை விடவும் முக்கியமானது மண்ணும் மலையும் முக்கியமென்பதை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கத் துவங்குவது. இயற்கையை பேராசைக் கொண்டு அழிக்க முடிந்த விஞ்ஞானத்தால் அதன் சிறு பகுதியைக்கூட உருவாக்க முடியாது என்பது திண்ணம்.

வி.பி. குணசேகரன்

பர்கூர் பகுதி பழங்குடி மக்களுக்காக பணி செய்யும் பாதிரியார் ஒருமுறை கட்சி வழக்கறிஞர் மோகனை சந்திக்க வருகிறார். பழங்குடி மக்களின் மீது போடப்படும் ஏராளமான வழக்குகளுக்கு பெரும்பாலும் நியாயம் கிடைப்பதில்லை. பல சமயங்களில் அவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் கிடைப்பதில்லை என்பதுதான் அன்றைய யதார்த்தம். வழக்கறிஞர் மோகன் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களைச் சந்திக்கச் செல்லும்போது தோழர் வி.பி.ஜியும் அவரோடு செல்கிறார். வறிய நிலையில் ஊட்டச் சத்து குறைந்து ஆரோக்கியமற்று அம்மக்கள் நலிந்து போனவர்களாயிருக்கு என்ன காரணம்? என்ற கேள்வி அவர் மனதில் சாட்டையடியாக விழுந்தது. பழங்குடி மக்களின் கண்களிலும் முகங்களிலும் நிரந்தர அச்சம் பூண்டிருந்தது. அவர்கள் இழந்தவற்றையெல்லாம் அவர் கண்முன் கொணர்ந்து நிறுத்தியது. நிலம், உடைமை, உணவு உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டதால் உண்டான அச்சம் அது என்பது அவருக்குப் புரிந்திட நெடுநேரமாகவில்லை.

Also Read: மலேசியா: ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்? - குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் பழங்குடி இளைஞர்

இந்திய வனங்களை சூறையாடுவதற்கான விதைகளை விதைத்தது ஆங்கிலேயர்கள்தான். நிலத்தைப் பங்கிட்டு சொந்தம் கொண்டாடும் சுயநலமற்றிருந்த பழங்குடி மக்களிடமிருந்து பல்லாயிரம் ஏக்கரளவில் நிலங்களை அபகரித்து தேயிலை எஸ்டேட்டுகளையும் ரப்பர் எஸ்டேட்டுகளையும் உருவாக்கினார்கள். நிலமிழந்த பழங்குடிகள் அந்த எஸ்டேட்டுகளில் கூலிகளாக மாறத் துவங்கினார்கள். வேட்டையாடுதலை விருப்பமான பொழுதுபோக்காக வைத்திருந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்றியது நகைமுரண். இந்தியக் காடுகளில் அவர்களில் வேட்டையாடி அழித்த புலிகளும் யானைகளும் ஏராளம். அவர்கள் உருவாக்கியச் சட்டம் வனத்தில் நலனுக்கானதல்ல, வியாபாரிகளின் நலனுக்கானது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வனச்சட்டங்களை சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அரசுகள் இன்னும் கடுமையாக்க பழங்குடிகள் காட்டில் தங்களுக்கிருந்த மொத்த உரிமைகளையும் இழந்தார்கள்.

கோப்புப் படம்

வீரப்பன் கடத்தல்காரனாவதற்கான காரணங்கள் குறித்து உரையாடுகையில் சில நெஞ்சிலறையும் உண்மைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்ட ஏராளமான குடும்பங்களில் வீரப்பனின் குடும்பமும் ஒன்று. கர்நாடக எல்லை கிராமத்தில் எளிமையாய் வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்களிடமிருந்து வனபாதுகாப்புச் சட்டம் வேட்டையாடும் உரிமைகளைப் பறித்துவிடவே அவர்களது வாழ்வு கேள்விக்குறியானதன் துவக்கம் தான் வீரப்பன் என்னும் கடத்தல்காரன் உருவாக அடிப்படையான காரணம். முதலாளிகளே கிளர்ச்சியாளர்களை உருவாக்குகிறார்கள்.

வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை என அரசாங்கத்தின் அத்தனை துறைகளாலும் துன்புறுத்தப்பட்டு சிதைக்கப்பட்ட பழங்குடி மக்களில் சிலர் காட்டிற்குள்ளிருக்கும் வீரப்பன் குழுவினர் தங்களுக்கு அரிசி பருப்பு போன்றவைகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்வதில் கிடைக்கும் சின்னதொரு வருமானம் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையாய் இருந்தது. பசியும் வறுமையும் சரி தவறுகளையோ நியாயங்களையோ அறிவதில்லை. இப்படி வீரப்பன் குழுவினருக்குப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இரு மாநில அதிரடிப் படையினரும் மிகக் கடுமையாகத் துன்புறுத்தினார்கள். விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு ஒருபோதும் வீடு திரும்பாத பழங்குடியினர் அனேகம்.

வி.பி. குணசேகரன் செய்த முதல் பணி இரு மாநில அரசுகளுக்கும் மனித உரிமைகள் கழகத்திற்கும் பழங்குடிகள் துன்புறுத்தப்படுவதைப் பற்றி நீண்ட கடிதங்கள் எழுதி தெரியப்படுத்தியதுடன் இந்த மக்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதுதான். இவரது கோரிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் கழகம் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. இந்தக் கமிஷன் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே கர்நாடக காவல்துறை இந்த விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டுமென கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதியும் விசாரணைக்குழுவிற்கு தடை விதித்தார். இந்தச் சூழலில்தான் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன் அவரை விடுவிக்க வேண்டுமென்றால் முதல் நிபந்தனையாக கர்நாடக நீதிமன்றம் விசாரணைக் கமிஷனுக்கு விதித்த தடையை அகற்ற வேண்டுமென நிபந்தனை விதித்தார். வேறுவழியில்லாமல் நீதிமன்றம் தடையை விலக்கிக் கொள்ள அதன்பிறகு ஓராண்டு காலம் விசாரணைக் கமிஷன் தனது விசாரணையைத் தொடர்ந்தது.

Also Read: வீரப்பன் கதை இருக்கட்டும்... தேடுதல் வேட்டையில் சிதைந்து போன மக்களின் கதை தெரியுமா?!

ப்யூப்பிள்ஸ் வாட்ச், மக்கள் உரிமைக் கழகம் உட்பட இன்னும் சில அமைப்புத் தோழர்களுடன் இணைந்து குழுவாக வேலை செய்யத் துவங்கினார் தோழர். வி.பி.ஜி. விசாரணைக் கமிஷனின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெளியிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடத் துவங்கினார் தோழர் விபிஜி. அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் டி.ராஜாவின் உதவியோடு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாகச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தெரியப்படுத்தினார்கள். பிரதமரை மட்டுமில்லாமல் உள்துறை அமைச்சர், மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் எல்லோரையும் சந்தித்து முறையிட்டு வந்தபின்னும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கவில்லை. மூன்று மாதங்களுக்குப்பின் மீண்டும் டெல்லியில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களோடு போராடினார். அதன்பிறகுதான் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இரு மாநில அதிரடிப்படையினரின் அத்துமீறல்களையும் அவ்வறிக்கை தோலுரித்துக் காட்டியது. மக்கள் படுகொலை செய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, மனநோயாளிகளாக்கப்பட்டது, இதோடில்லாமல் அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் வயர்களை வைத்து ஷாக் கொடுத்தது என நாகரிகச் சமூகம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத வன்முறைகள் அவை. பழங்குடி மக்களின் பெருந்துயரை அந்த அறிக்கைதான் உலகிற்கு தெரியவைத்தது. அந்த அறிக்கை வெளியான பின்னரே பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அவரால் பெற்றுத்தர முடிந்தது.

உலகம் முழுவதிலும் இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்து வருவதை அன்றாட நிகழ்வுகளாகக் காண்கிறோம். பெரும் புயல்கள், காட்டுத் தீ, எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி என வஞ்சிக்கப்பட்ட இயற்கை இப்போது மனிதர்களை அவர்கள் விதைத்த வினைகளை அறுவடை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. இயற்கையின் சமநிலை முற்றாக சீர்குலைந்து போனதற்கு மனிதர்களின் பேராசை மட்டுமே காரணம். உலகம் முழுக்கவே மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதை வளர்ந்த பேரரசுகள் தொடர்ந்து செய்து வருவதைப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் பெர்கின்ஸ் தனது பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் விளக்குகிறார்.

‘எங்கள் கண்டத்தின் வளம்தான் எங்களின் சாபமென’ இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் சொல்வதுண்டு. உண்மையில் இந்தக் கருத்து இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும்.

காடும் மலையுமே தன் வாழ்க்கையென முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக இயற்கையைப் பாதுகாக்கவும் பழங்குடி மக்களின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வி.பி.ஜிக்கு பக்கபலமாக ஏராளமானவர்கள் இருந்தாலும் அவரது மனைவி தோழர் சத்தியவானி பெரும் பலம். இதனை வி.பி.ஜியே அவ்வப்போது சொல்வதுண்டு. ஆரோக்கியமான உலகை உருவாக்க விரும்புகிறவன் நம்பிக்கையான விதைகளை விதைக்க வேண்டியது அவசியம். வி.பி.ஜி. தனக்குப் பின்னால் தனது பணிகளைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள ஏராளமான ஆற்றல்மிக்கத் தோழர்களை உருவாக்கியிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஆசியர்களில் ஒருவரென தோழர் குணசேகரனைக் குறித்து சொல்வதுண்டு. வீரப்பனைக் குறித்துப் பேசும்போது வி.பி.ஜி இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார். வீரப்பன் இருந்த காலகட்டம் வரையிலும் கர்நாடக அரசு காவிரியில் சரியானபடி நீரைப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தது. வீரப்பன் முப்பது வருடங்களுக்கும் மேலாக காடுகளுக்குள்ளேயே வாழ்ந்ததால் வெவ்வேறு பழங்குடி சமூகத்தோடு இருந்து அவர்களின் மருத்துவ அறிவை கற்றிருக்கிறார். வீரப்பனை போராளியாகவோ குற்றவாளியாகவோ இல்லாமல் சந்தர்ப்ப சூழலால் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்த ஒரு சராசரி மனிதனாகப் பார்க்கும் பக்குவம் அவருக்கு இருக்கிறது.

வி.பி. குணசேகரன்

நமது அரசும் அதிகார வர்க்கமும் மக்களுக்காக வேலை செய்வதை விடுத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாட்களாக மாறும் அவலத்தை கண்கூடாகக் காண்கிறோம். ’கார்ப்ரேட்டுகளுக்கு எதிராகப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாதென’ நிதியமைச்சர் பாராளுமன்றத்திலேயே அறிவிக்கிறார். இந்திய தேசத்தின் அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இவர்கள் இயற்கையையும் இந்த மக்களையும் குறித்து சிந்திப்பார்களென நம்புவது எத்தனை முட்டாள்தனம்? நம்நாட்டில் தொழில்நுட்ப வசதிகளும், வாழ்க்கை மாற்றங்களும் சமவெளிவாசிகளுக்கானவையாய் மட்டுமே இருந்துகொண்டிருக்கின்றன. பழங்குடி மனிதர்கள் தங்கள் குரலை இந்த உலகிற்கு எடுத்துச் செல்ல முடியாதவர்களாகத்தான் இன்னுமிருக்கிறார்கள்.

இயற்கையை வியப்பதோ, கொண்டாடுவதோ, அது குறித்து புளங்காகிதம் கொள்வதோ இப்போதையே தேவையல்ல, அதைப் புரிந்துகொள்ள வேண்டும். பல்லாயிரம் வருடங்களாய் காடுகளையும் மலைகளையும் பாதுகாத்து வந்தது பழங்குடி மக்கள்தான். காடுகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பழங்குடிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். வனங்களில் அவர்களுக்கிருந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும். இந்தப் போராட்டங்கள் எப்படி ஒருநாளில் முடிவடையப் போவதில்லையோ அதுபோல் ஒரு தனிமனிதனால் செய்து முடிக்கக் கூடியதுமல்ல. தோழர் வி.பி.குணசேகரனைப்போல் இன்னும் ஏராளமானவர்கள் கைகோர்க்க வேண்டும். நமது புலன்களால் இந்த உலகைத் தெரிந்து கொள்ளலாம், ஆனால் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாமும் இயற்கையின் கூறுகள்தான் என்ற புரிதல் துவங்க வேண்டும். நாம் அங்கமாகத் திகழும் இயற்கையை சிதைப்பதென்பது நம்மை நாமே சிதைத்துக் கொள்வதற்கொப்பானதுதான். ஒரு ஆப்பிரிக்க பழமொழி நினைவிற்கு வருகிறது.

”இயற்கைக்கு மனிதன் கேடு விளைவித்தால் ஒருநாள் இயற்கையும் அவனுக்கு அதை தவறாமல் நிகழ்த்திக் காட்டும். இயற்கையை ஆள நினைப்பவன் மூடன்.”

Also Read: `பேரிடர் துயரங்களை ரத்தமும் சதையுமாகப் பார்த்துவிட்டால் அகங்காரம் சுக்குநூறாகும்!’ - ஆன்மன் | இவர்கள் -பகுதி 1



source https://www.vikatan.com/social-affairs/politics/special-story-about-social-activists-vbgunasekaran-ivargal-part-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக