Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

பெரியபாளையம்: பாதையை ஆக்கிரமித்து வேலி! - தலைமைக் காவலர் மீது காவல்நிலையத்தில் புகார்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும், காவலர் என்பதால் ஆக்கிரமிப்பு குறித்துக் கேட்க வருபவர்களை மிரட்டல் தொனியில் எச்சரிப்பதாகவும் அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வள்ளலார் நகர்ப் பகுதி மக்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, "பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகர்ப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் திருவாலங்காடு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் பல வருட காலமாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலி அமைத்து ஆக்கிரமித்துக் கொண்டார். அதனால், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. ஆக்கிரமிப்பு குறித்து காவலர் ரமேஷிடம் கேட்ட போது, `அப்படி தான் வேலி போடுவேன். இது என்னுடைய நிலம்' என்று அடாவடியாக கூறுகிறார். இது பற்றி ஏற்கெனவே, ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தோம். அவர் காவலர் ரமேஷிடம் நேரில் பேசி, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொடுத்தார்.

ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் பாதை

ஆனால், அடுத்த சில நாள்களிலேயே ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்காமல் காவலர் ரமேஷ் மீண்டும் வேலி அமைத்து, தற்போது கற்கள் பதித்து கட்டுமான பணிகளுக்கு பொது இடத்தை தயார்ப் படுத்தி வருகிறார். காவலர் என்பதால் அவரை அணுகிப் பேச அச்சமாக இருக்கிறது. எனவே, சட்டவிரோதமாக பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் திருவாலங்காடு தலைமைக் காவலர் ரமேஷ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

வள்ளலார் நகர் மக்களின் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட பெரியபாளையம் போலீஸார், புகார் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி, "பொது பாதையை ஆக்கிரமித்து தலைமைக் காவலர் ரமேஷ் வேலி அமைத்து விட்டதாக விட்டதாக ஏற்கெனவே ஒருமுறை பகுதி மக்கள் என்னிடம் புகார் அளித்திருந்தனர். அப்போது, நானே நேரில் சென்று காவலரிடம் பேசி ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வலியுறுத்தினேன். அந்த நேரத்தில், வேலிகளை அகற்றி நிலத்தை ஒப்படைத்தார். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் வேலி அமைத்து அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார்.

ரமேஷின் இந்த ஆக்கிரமிப்பால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவி என்ற முறையில் பலமுறை கேட்டும் காவலர் தரப்பில் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், தற்போது வேலி அமைத்தது மட்டுமல்லாமல், கற்கள் பதித்து வருவதாகப் பகுதி மக்கள் என்னிடம் மீண்டும் புகார் அளித்தனர். காவலர் ரமேஷ் ஏற்கெனவே அவருடைய வீட்டின் அருகே உள்ள 5 சென்ட் பொது இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார். அதைக் கூட பகுதி மக்கள் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை. ஆனால், தற்போது பொது பாதையை ஆக்கிரமித்திருக்கிறார். அதனால், அவர் மீது பெரியபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு ஆலோசனை வாங்கியிருந்தேன். அதன் படி, அவர்களும் புகார் அளித்திருக்கிறார்கள்" என்றார்.

வள்ளலார் பகுதி மக்கள்

புகார் தொடர்பாக பெரியபாளையம் போலீஸாரிடம் கேட்ட போது, "பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் ரமேஷ் தற்போது ஊரில் இல்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் விளக்கமளிக்குமாறு கூறியிருக்கிறோம். பகுதி மக்கள் அந்த இடம் தொடர்பான ஆவணங்களின் நகல்களையும் புகார் மனுவுடன் இணைத்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/local-people-filed-a-complaint-against-a-policeman-who-encroached-public-land

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக