Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

சர்வைவர் - 15 | பார்வதிக்கு வாய்தான் பிரச்னை... பஞ்சாயத்தில் அர்ஜுனின் கேள்விகளும், எலிமினேஷனும்!

இம்னியூட்டி சேலன்ஜில் வேடர்கள் அணி தோற்று விட்டதால் இன்று ட்ரைபல் பஞ்சாயத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இதில் அதிகமான எதிர் வாக்குகளைப் பெறும் ஒரு நபர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இந்தச் சவாலுக்கு முன்பு வரை பார்வதிக்கு எதிராகவே காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. அணியில் இருந்த அனைவருமே அவரின் மீது கொலைவெறியில் இருந்தார்கள். ஆனால் இம்யூனிட்டி சவாலில் பார்வதி உண்மையாகவே சிறப்பாகப் பங்களித்தார். இறுதி வரை தாக்குப் பிடிக்க முயன்றார்.

எனவே பார்வதிக்கு சாதகமாக இப்போது தட்பவெட்பநிலை மாறியிருப்பதால் வேடர்கள் அணி முடிவெடுப்பதில் மாற்றுக் கருத்துகளும் குழப்பங்களும் நிலவியது. ரவிக்கு எதிராகவும் அபிப்ராயங்கள் வந்தன.

சர்வைவர் - 15

உண்மையில் இந்தச் சூழல் பார்வதிக்கு மிகவும் சாதகமான விஷயம். ஆனால் சிலர் பிரச்னையை சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு அலைவார்கள். பார்வதிக்கு அவரது வாயே பெரிய சத்ரு. பஞ்சாயத்தில் அவர் முதிர்ச்சியாகப் பேசியிருக்கலாம். அப்படிப் பேசியிருந்தால், ராம் vs காயத்ரி பஞ்சாயத்தில் ராமுக்கு எதிரான அலை சட்டென காயத்ரிக்கு எதிராக மாறியதைப் போன்று ஒரு அதிரடி திருப்பம் நிகழ்ந்திருக்கும். ஆனால்?

இந்த பதினைந்தாவது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘யாரை எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுப்பது?’ என்கிற விவாதம் வேடர்கள் அணியில் ரணகளமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. தன்னைத்தான் அனைவரும் டார்கெட் செய்வார்கள் என்று பார்வதிக்கு நன்றாகவே தெரியும். எனவே ஒவ்வொருவரையும் சந்தித்து கேன்வாஸ் செய்து கொண்டிருந்தார். ஆனால், “நான் உங்களை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலை” என்று மிக ஜாக்கிரதையாகவே தன் பேச்சை ஆரம்பித்தார்.

இம்யூனிட்டி சவாலில் பார்வதியின் பங்களிப்பு நன்றாக இருந்ததால், அவருக்கு ஆதரவாக நந்தா நின்றார். இது சற்று ஆச்சரியமான விஷயம். ஒருவேளை ஆண்களில் ஒருவர் வெளியேறினால் தன்னுடைய இடம் இன்னமும் ஸ்ட்ராங் ஆகும் என்பது அவர் கணக்காக இருக்கலாம்.
சர்வைவர் - 15

ஐஸ்வர்யாவும் பார்வதிக்கு ஆதரவாக இருந்தார். அது மட்டுமல்லாமல், “ரவிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. வயதானவர் வேறு. இந்த அணி தொலைதூரத்துக்கு பயணிக்க வேண்டும்” என்று ஐஸ்வர்யா யோசிப்பது மிகவும் தர்க்கபூர்வமானது. இதில் சென்ட்டிமென்ட் எல்லாம் பார்க்கத் தேவையில்லை.

லட்சுமிபிரியா எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கிறார். பார்வதி தன்னிடம் பேசும் போது ‘’இன்னமும் நான் முடிவு பண்ணலை. ஆனா நீயும் லிஸ்டில் இருக்கே” என்று மையமாகவே பேசினார். (நீங்க அரசியலுக்கு வரலாம் LP!).

அம்ஜத்துக்கு ரவியை வெளியேற்றுவதில் சம்மதமில்லை. பார்வதிதான் அவருடைய மெயின் டார்கெட். “சவாலில் பங்கேற்பது மட்டும்தான் முக்கியமா? அதையும் தாண்டி அணி ஒற்றுமை, நட்பு, இணக்கம் என்று பல விஷயங்கள் இருக்கின்றன” என்று அவர் கேட்பதும் நியாயமான விஷயமாகவே தோன்றுகிறது.

எலிமினேஷனில் தன்னுடைய பெயர் அடிபடுவதில் ரவிக்கு உள்ளூற வருத்தம் இருக்கலாம். என்றாலும், ‘’ஒருவேளை நான் வெளியேறினாலும் ஒன்றும் பிரச்னையில்லை” என்று ஸ்போர்ட்டிவ்வாக அவர் எடுத்துக் கொண்டது நல்ல விஷயம். ரவிக்கு எதிரான வாக்கை அளிக்க பார்வதியும் முடிவு செய்திருக்கிறார். பார்வதியின் இந்த முடிவில் ஆச்சரியமில்லை.

சர்வைவர் - 15

“பக்கெட் நீர் எடுத்து வரும் அணியில் நான் இருந்திருந்தால் ஒருவேளை வேகம் அதிகமாக இருந்திருக்கலாம்” என்று ஐஸ்வர்யா சொல்வது சரியானது. இது பற்றி நேற்றைய நாளின் கட்டுரையிலேயே பார்த்தோம். தன்னுடைய பங்களிப்பை ரவி பெஸ்ட் ஆக தந்திருந்தாலும் அவரது வயது காரணமாக வேகம் மட்டுப்பட்டது. ஒருவேளை ரவி, நீர்த்தொட்டியில் படுத்திருந்து ஐஸ்வர்யா வெளியில் இருந்திருந்தால் முடிவு மாறியிருக்கக்கூடும்.

இந்த விஷயத்தையே பார்வதி வேறு மாதிரி அணுகுகிறார். “அணியின் வெளியே சென்று விடுகிறேன்” என்று நான் முன்வந்தேன். ஆனால் அது மற்றவர்களால் ஏற்கப்படவில்லை. மாறாக ‘‘உடல் எடை குறைவாக உள்ளவர்கள்தான் வேண்டும் என்கிற காரணத்தைச் சொல்லி என்னை நீர்த்தொட்டியில் படுக்க வைத்து லட்சுமிபிரியாவை வெளியே அனுப்பினார்கள்” என்று குறை கூறினார் பார்வதி. இது ஸ்போர்டிவ்வான கருத்து இல்லை. இதற்குப் பெயர் எஸ்கேப்பிஸம். தான் மட்டும் எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் நினைப்பது முறையல்ல.

ட்ரைபல் பஞ்சாயத்து. இதை பலமுறை சொல்ல வேண்டியிருக்கிறது. சர்வைவர் டீமில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்ப விஷயங்கள் மிக அருமையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு இந்தப் பஞ்சாயத்தின் செட்டிங், லைட்டிங், பிராப்பர்டீஸ், ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று பல விஷயங்கள் சிறப்பாக இருக்கின்றன.
சர்வைவர் - 15

“வாங்க...” என்று அனைவரையும் பஞ்சாயத்துக்கு வரவேற்றார் அர்ஜுன். இம்யூனிட்டி சவாலில் தோற்றது பற்றி விவாதம் தொடங்கியது. “தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் ரவிக்கு ஆதரவாக வாக்குகள் அதிகம் இருந்தாலும் பிறகு அம்ஜத் தலைவர் ஆனாரே” என்று அர்ஜூன் பஞ்சாயத்தை துவக்கி வைத்த கேள்விக்கு பார்வதி மிகத் திறமையாக பதில் சொன்னார். அப்படியே சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால், அர்ஜூன் அடுத்து போட்டு வாங்கிய ஒரு கேள்வியில் பார்வதி சரியாக சிக்கினார். இதற்கு அளித்த பதில்தான் பார்வதிக்கு சாதகமாக இருந்த சிறு அலையைக் கூட முற்றிலுமாக மாற்றியமைத்தது. இந்தப் பதிலை பார்வதி சொல்லாமல் இருந்திருந்தால் பஞ்சாயத்து முடிவு ஒருவேளை மாறியிருக்கக்கூடும். அந்தக் கேள்வி என்ன?

“ஒருவேளை நீங்க தலைவராக இருந்திருந்தா அணி ஜெயிச்சிருக்குமா?” என்று அர்ஜூன் கேட்க “நான் தலைவரா இருந்திருந்தா இங்க வந்திருக்க வேண்டிய நிலைமை இருந்திருக்காது” என்று தன்னுடைய பிரத்யேக குணாதிசயத்தின்படி பார்வதி பதில் சொன்னது ஒட்டுமொத்த அணிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைவரின் முகங்களும் மாறின. பார்வதியின் இந்த அபிப்ராயம் அம்ஜத்தின் தலைமை மீது நேரடியாக தொடுக்கப்படும் பலமான அம்பு.

சர்வைவர் - 15

பார்வதியின் இந்தக் கருத்தால் அதிகம் ஆத்திரமடைந்தவர் ரவி. எனவே தன்னுடைய கண்டனத்தை வெளிப்படையாக பதிவு செய்தார். “ஒரு குடும்பம் மாதிரி நாங்க பழகிட்டு இருக்கோம். பார்வதி அப்படிச் சொன்னது சரியல்ல. அப்ப அம்ஜத் லீடர்ஷிப் சரியில்லைன்னு சொல்றாங்களா?” என்று ரவி சொன்னதைக் கேட்டு பார்வதியின் முகமும் மாறியது.

“இம்யூனிட்டி சவாலில் தோற்றதால்தான் நாங்கள் இங்கே வர வேண்டிய நிலைமை. அதில் பார்வதிக்கான கிரெடிட்டை நான் தந்திருக்கிறேன். போட்டி வேறு. அணி ஒற்றுமை வேறு” என்பது போல் அம்ஜத்தின் விளக்கம் அமைந்திருந்தது.

சர்வைவர் - 15

சூழல் தனக்கு எதிராக செல்வதால் “நான் அப்படிச் சொல்லலை. நான் தலைவரா இருந்திருந்தா எல்லோருக்கும் ஸ்பேஸ் கொடுத்திருப்பேன். அணியில் இணக்கமான சூழல் வரும்படி செய்திருப்பேன்” என்று சமாளிக்க முயன்றார் பார்வதி. இது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம் என்பது அவருக்கே நன்கு தெரியும்.

‘‘வேடர்கள் அணியில் நந்தா மற்றும் லட்சுமிபிரியாவின் முடிவுகள்தான் நிறைய ஆதிக்கம் செலுத்துகின்றனவா?’’ என்கிற கேள்வியைக் கேட்டு மறுபடியும் கசமுசா தூண்டுதலை ஏற்படுத்த முயன்றார் அர்ஜூன். இதில் மறுபடியும் சிக்கிக் கொண்டார் பார்வதி. “ஆமாம்... அணியில் பாரபட்சம் இருந்தது. என்னை பெரும்பாலும் ஒதுக்கி வைத்தார்கள்” என்று அவர் தன் வழக்கமான அனத்தலைச் சொல்ல “போன வாரத்துல என்ன சொன்னீங்க... எங்க அணி ஒத்துமையா இருக்கு. ஒண்ணும் பிரச்னையில்லைன்னு சொன்னீங்க... இப்ப மாத்தி சொல்றீங்களே?” என்று பார்வதியை சரியாக மடக்கினார் அர்ஜூன். (அது போன வாரம்… நான் சொல்றது இந்த வாரம்!)

“அணியில் பார்வதி ஒதுக்கப்படுகிறாரா?” என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார் அர்ஜுன். இதில் பார்வதிக்கு எதிராகவே கருத்துக்கள் வந்து விழுந்தன. சூழல் தனக்கு எதிராக பயணிக்கவே “ஒருவேளை நான் தந்த first impression அவங்க மனதில் பதிஞ்சிருக்கலாம்” என்று ரிவர்ஸ் கியர் போட முயன்றார் பார்வதி. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. “முதல் அபிப்ராயமெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்போ இத்தனை நாள் ஓடிப் போச்சு. இப்பவும் அவங்க அபிப்ராயம் மாறலைன்னா அது யாரு தப்பு?” என்பதே அர்ஜூன் சுற்றி சுற்றி கேட்க வந்த கேள்வி.

ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த அணி மீது குற்றம் சொல்லி விட்டு ‘தான் மட்டுமே சரி’ என்று வாதிட்டால் தவறு அவர் மீது இருக்கவே சாத்தியம் அதிகம். இதுதான் பார்வதி மேட்டரில் உள்ள ஆதாரமான லாஜிக்.
சர்வைவர் - 15

அர்ஜூன் கிடுக்கிப்பிடி போட்டதும் ‘’என்னால இதை விவரிக்க முடியலை” என்று பின்வாங்கினார் பார்வதி. “ஒருவேளை உங்களால அவங்களை நெருங்க முடியலையா?” என்று கேட்கப்பட்டதற்கு “அதற்காக நிறைய முயற்சிகள் செஞ்சேன்” என்ற பார்வதி “சமீப காலத்தில் இத்தனை நல்லவளா நான் இருந்ததில்லை” என்று சொன்னதுதான் மகத்தான காமெடி.

“ஐஸ்வர்யா... நீங்க சொல்லுங்க?” என்று அவரின் பக்கம் வண்டியை திருப்பினார் அர்ஜுன். உண்மையில் பார்வதிக்கு ஆதரவாக வாக்களிக்கும் எண்ணத்தில்தான் வந்திருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் ‘நான் தலைவரா இருந்திருந்தா” என்று பார்வதி சொன்னது ஐஸ்வர்யாவைப் பாதித்தது. எனவே தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

“ரெண்டு பேருக்கும் ஒரே வயசு... ஒரே எனர்ஜி... ஸோ ரெண்டு பேரும் ஃபிரெண்டா இருக்க முடியும்னு முதல்ல நம்பினேன். ஆனா இரண்டு பேர் சிந்தனையும் வேற வேற திசையில் இருக்கிறதை பிறகுதான் புரிஞ்சுக்கிட்டேன். பார்வதி பிரச்னையை உருவாக்கிட்டே இருக்காங்க. இயல்பா ஆரம்பிக்கும் ஒரு உரையாடலை கொஞ்ச நேரத்துலயே விவாதமா மாத்திடுறாங்க” என்று சரமாரியான புகார்களை முன்வைத்தார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 15

சமையல் தொடர்பாக நிகழ்ந்த இன்னொரு பிரச்னையை சொல்ல ஆரம்பித்த ஐஸ்வர்யா, அதை விவரிக்க முடியாமல் பந்தை அம்ஜத்திடம் தள்ளினார். “இந்த அணில ஆண் – பெண் பேதம் இருக்குறதா பார்வதி நம்பறாங்க சார்... அப்படி நிச்சயம் கிடையாது. சமைக்கறது யாருன்னு பார்த்தீங்கன்னா நந்தாதான்” என்று அம்ஜத் இந்த விவகாரத்தை தெளிவாக எடுத்துச் சொன்னார்.

“பார்வதி கற்பனை செய்யற மாதிரி ஆண் – பெண் பாரபட்சமெல்லாம் எங்க அணில இல்லை” என்று லட்சுமிபிரியாவும் இதை வழிமொழிந்தார். பார்வதி இதற்கும் ஏதோ விளக்கம் சொல்ல முயல, அர்ஜூனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது போல. “சரி… வோட்டிங் போயிடலாம்” என்று பஞ்சாயத்தை முடித்தார்.

சிலருக்கு சமூகவலைத்தளங்களின் உள்ளே நுழைந்தவுடன் செயற்கையான அறச்சீற்றம் பொங்கி விடும். எல்லாவற்றுக்கும் அரசியல்ச ரித்தன்மையோடு ஆவேசமாக பேச ஆரம்பிப்பார்கள். ஆனால், பல சமயங்களில் இது செயற்கையாக அமைந்து பல்லிளிக்கும். யூ-டியூப் பிரபலமான பார்வதியும் கேமராவின் முன்னால் இதே மாதிரி தன்னை ‘தீவிர பெண்ணிய போராளி’யாக காட்டிக் கொள்ள முயன்று தோற்றுப் போனாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சர்வைவர் - 15
வாக்களிப்பு தொடங்கியது. இதில் யார் யாருக்கு வாக்களித்தார் என்பது தொடக்கத்தில் காட்டப்படவில்லை. என்றாலும் வந்த முடிவைப் பார்த்த போது இதற்கு விளக்கமே தேவைப்படவில்லை. மொத்தமுள்ள ஏழு நபர்களில் ஆறு வாக்குகள் பார்வதிக்கு எதிராக விழுந்தன. ஒரு வாக்கு ரவிக்கு எதிராக விழுந்திருந்தது. அது பார்வதியால் இடப்பட்டிருக்கும் என்பது வெளிப்படை.

‘Hidden immunity Idol’ என்றொரு விஷயம் இருக்கிறது. இது தீவில் சுற்றும் போது எங்காவது காணக் கிடைக்கும். இதை கண்டெடுப்பவர் ஒருவேளை எலிமினேட் ஆபத்தை எதிர்கொண்டால் கூட தப்பித்து விடலாம். “யாராவது வைத்திருக்கிறீர்களா?” என்று அர்ஜூன் கேட்ட போது சபையில் மெளனமே நிலவியது. ஆக, யாருக்கும் அது கிடைக்கவில்லை.

பெரும்பான்மையான வாக்குகள் பார்வதிக்கு எதிராக விழுந்ததால் அவர் வெளியேற்றப்படுவது உறுதியாகிவிட்டது. என்றாலும் ஒரு கடைசி சான்ஸ். காற்சிலம்பை உடைத்துப் பார்க்கும் சடங்கு. ஆனால் இதிலும் அதிர்ஷ்டம் பார்வதியை கை விட்டுவிட்டது. வெள்ளை முத்துக்கள் வந்ததால் அவரின் எலிமினேஷன் உறுதியானது.

சர்வைவர் - 15

“என்னை ஏன் தள்ளி வைச்சீங்க... நான் வெளிப்படையா பேசினதுதான் காரணமா... என் பேச்சை முடக்க நினைச்சீங்களா?’’ என்றெல்லாம் தான் இதுவரை புலம்பிக் கொண்டிருந்ததை ஒரு பெரிய கடிதமாக எழுதி வைத்துவிட்டு கிளம்பினார் பார்வதி.

Also Read: சர்வைவர் தமிழ் - 14 | பார்வதியின் வெற்றிகரமான தோல்வி… வேடர்களை வீழ்த்திய காடர்களின் சாகசம்!

பார்வதியின் ஃபேர்வெல் பேச்சு நன்றாக இருந்தது. இதே முதிர்ச்சியை அவர் பெரும்பாலான நேரத்தில் கடைப்பிடித்திருக்கலாம். “நான் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு விஷயத்தைக் கத்துக்கிட்டேன். யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி” என்று புன்னகையுடன் கையாட்டி விட்டு கிளம்பினார்.

“பார்வதியை நாமினேட் பண்ணதுக்கு காரணம் என்ன?” என்று வேடர்கள் அணியிடம் விசாரித்தார் அர்ஜூன். ஏற்கெனவே குறிப்பிட்டபடி பார்வதிக்குச் சாதகமாக வாக்களிக்க எண்ணியிருந்த ஐஸ்வர்யா, இங்கு அவர் கோக்குமாக்காக பேசியவுடன் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

சர்வைவர் - 15

“அவங்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கு. அதனாலதான் கலை நிகழ்ச்சியின் நாடகத்தில் பார்வதியை முன்னால் நிக்க வெச்சோம். ஆனா அந்தத் திறமையை அவங்க சரியான திசையில் பயன்படுத்தலை” என்று சரியான காரணத்தைச் சொன்னார் அம்ஜத்.

“இந்த வாரம் ஒழுங்காதான் இருந்தாங்க. எலிமினேஷன் டிஸ்கஷன்ல கூட நல்லாத்தான் பேசினாங்க... ஆனா பஞ்சாயத்துக்கு வந்தவுடனே டக்குனு மாத்தி பேசிட்டாங்க. இதுதான் அவங்க கிட்ட இருக்குற பிரச்னை” என்றார் ரவி. “எனக்கு அணியின் பலம்தான் முக்கியம். பலவீனமான நபர் வெளியேற்றப்படுவதைத்தான் அவசியமான விஷயமா பார்க்கறேன்” என்று ஒரு சரியான லீடரைப் போலவே பேசினார் லட்சுமிபிரியா.

சர்வைவர் - 15
ஆக... சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து பார்வதி எலிமினேட் ஆகிவிட்டார். என்றாலும் ‘மூன்றாம் உலகத்திற்கு’த்தான் அவர் அனுப்பப்படுவார். இனி, காயத்ரி மற்றும் இந்திரஜாவின் நிலையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

இனியாவது வேடர்கள் அணியில் அமைதி நிலவுமா?

பார்த்துடுவோம்.



source https://cinema.vikatan.com/television/survivor-tamil-vj-parvathy-faced-the-heat-and-got-eliminated

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக