1960,70-களில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் மீது, பண்ணையார்கள் நடத்திய சாணிப்பால்-சவுக்கடிக்கு எதிராக போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால் இன்று இதே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், அதிமுகர் பிரமுகர் மீது சாணிப்பாலை ஊற்றி அவமானப்படுத்தியதாகவும் இது மனித தன்மையற்ற அநாகரிக செயல் எனவும் அதிமுக-வினர் கொந்தளிக்கிறார்கள்.
என்ன நடந்தது?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார். அதிமுக வழக்கறிஞர் அணியின் திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் இவர், 2021- சட்டமன்ற தேர்தலில் அதிமுக. சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் மீது இதே பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தயாளன் உள்ளிட்ட 6 பேர் சாணத்தை கரைத்து ஊற்றியதாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றம் இழைத்தவர்கள் மீது காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதோடு, முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஆயத்தமானார்கள், இந்நிலையில்தான் தயாளனை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளார்கள்.
நம்மிடம் பேசிய அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ‘’எனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியில சொல்லவே வேதனையா இருக்கு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினராக இருக்குற தயாளன், இவரோட மனைவி, தம்பி உள்பட இவங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாருமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில இந்த பகுதியில முக்கியமான பொறுப்புல இருக்காங்க. அரசு புறம்போக்கு நிலத்துல சட்டவிரோதமாக போர்வெல் அமைச்சி, கடந்த பல வருசமா, தயாளன் குடும்பத்தினர், டேங்கர் லாரியில தண்ணிர் விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. இதனால், இந்த பகுதியில் நிலத்தடிநீர் குறைஞ்சிப் போனதால, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கல. ஊராட்சித்தலைவர், ஒன்றிக்குழு தலைவர் எல்லாருமே இந்திய கம்யூனிஸ்ட். இவங்க அதை கண்டிக்கவே இல்லை. மாவட்ட ஆட்சியர்கிட்ட புகார் தெரிவிச்சேன். அதிகாரிகள் ஆய்வு பண்ணி, தடை விதிச்சாங்க. அடுத்த சில நாள்கள் தண்ணீர் எடுக்காமல் இருந்த தயாளன், மறுபடியும் தண்ணீர் விற்பனைய ஆரம்பிச்சார்.
தண்ணீர் லாரியை மடக்கி, சட்டப்பூர்வ நடவடிக்கைகள்ல இறங்கினேன். இதனால் தயாளனுக்கு என் மேல் கோபம் அதிகமாயிடுச்சி, இந்த நிலையில் தான், காலையில நான் வயலுக்கு கார்ல போயிக்கிட்டு இந்தப்ப, தயாளன் குடும்பத்தினர் என்னை வழிமறிச்சாங்க, கார் கண்ணாடியை இறக்கினேன். பாத்திரத்துல கரைச்சி வச்சிருந்த சாணத்தை என் மேல ஊத்தினாங்க. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தவும் முயற்சி செஞ்சாங்க. உடனே நான் போக்குவரத்து உள்ள இடத்துக்கு காரை ஓட்டிக்கிட்டு போயி, நடு ரோட்டுல உட்கார்ந்து கூச்சல் எழுப்பினதுனால, கூட்டம் சேர்ந்துடுச்சி. உயிர் பிழைச்சேன். இந்த அவமானத்தை நினைச்சி, ஓவ்வொரு நிமிஷமும் புழுங்கிக்கிட்டு இருக்கேன்.
Also Read: `திமுக Vs இந்திய கம்யூனிஸ்ட்’ - இது திருவாரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி கலாட்டா
சாணியை கரைச்சி ஊத்துறதுங்கறது, மிகவும் இழிவான செயல். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவங்கவங்களே இப்படி அநாகரிகமாக நடந்துக்கிட்டது அதிர்ச்சியா இருக்கு. விவசாய தொழிலாளர்கள் மீது பண்ணையார்கள் சாணத்தை கரைச்சி ஊத்தி அவமானப்படுத்தியபோது, இது மனிததன்மையற்ற செயல்னு கம்யூனிஸ்டுங்க ,கொந்தளிச்சி போராட்டம் நடத்தினாங்க. ஆனால் இப்ப, இந்த அநாகரிக செயல்ல ஈடுபட்டவங்க மேல, அவங்க கட்சித்தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலை. காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க, இந்த பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்தான் இவங்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்காங்க. இந்த சம்பவத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடலை’’ என ஆதங்கப்பட்டார்.
தயாளன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவரது சார்பில் நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ரஜினி, ‘’தயாளன் சட்டவிரோதமாக போர்வெல் அமைச்சி தண்ணீர் விற்பனைச் செய்வதாக சொல்வது உண்மையல்ல. காண்ட்ராக்டர்கிட்ட வேலைப் பார்த்துக்கிட்டு இருக்கார். தயாளனின் தம்பி மனைவி குளிப்பதை, சுரேஷ்குமாரின் மகன் செல்போன்ல வீடியோ எடுத்ததுனால கோபமாகி கூச்சல் எழுப்பி கடுமையாக திட்டியிருக்கிறார், அந்த நேரத்தில் சுரேஷ்குமார், தயாளனின் வீட்டுக்குள் வந்து, தயாளனின் தம்பியை தாக்க முயற்சித்தார். கணவரை காப்பாற்ற, சுரேஷ்குமார் மீது உமா சாணத்தை ஊற்றியிருக்கிறார். இதில் தயாளனுக்கு சம்பந்தமில்லை’’என தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் இது தொடர்பாக பேசியபோது, ‘’தயாளனின் தூண்டுதலின் பேரில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சுரேஷ்குமாரின் மீது சாணத்தை ஊற்றியிருக்கிறார்கள். சம்பவ இடத்தில் தயாளனும் இருந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ளோம். சட்டப்படியான நடவடிக்கைகள் நேர்மையாக நடைபெற்று வருகிறது. தயாளனின் தம்பி மனைவி குளிப்பதை, சுரேஷ்குமாரின் மகன் வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டியதால், அவரது செல்ப்போனை ஆய்வு செய்தோம். அதுபோன்ற வீடியோக்கள் எதுவும் இல்லை. தண்ணீர் எடுக்கும் வீடியோதான் உள்ளது’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தயாளனுக்கு ஆதரவாக உள்ளதா ? இக்கட்சியின் வழக்கறிஞரும், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்க தலைவருமான அருள்செல்வன், ‘’இது மனிதகுலத்திற்கு எதிரான செயல். இந்த சம்பவத்தில் தயாளனுக்கு ஆதரவாக எங்கள் கட்சி செயல்படவில்லை. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நாங்களும் வலியுறுத்தியுள்ளோம். சட்டவிரோத செயல்களுக்கு எங்கள் கட்சி எப்போதுமே ஆதரவாக இருக்காது’’என்றார்.
இக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘’தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையை, அரசியல் பிரச்னையாக மாற்றுவது நியாயமல்ல. அதேசமயம், சாணியை கரைத்து ஊற்றுவதென்பது, அதை யார் செய்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது’’என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/communist-cadre-attacked-admk-cadre-with-cow-dung-police-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக