Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

Covid Questions: `லாங் கோவிட்' பாதிப்பிலிருந்தும் பாதுகாக்குமா கோவிட் தடுப்பூசி?

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு ஒருவேளை கோவிட் தொற்று ஏற்பட்டால் , குணமான பிறகு வருவதாகச் சொல்லப்படுகிற `லாங் கோவிட்' பாதிப்புகளிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்குமா?

- வாசுகி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கோவிட் தொற்று என்பதே நமக்கெல்லாம் கொஞ்சம் புதிய விஷயம்தான். தினம் தினம் அது குறித்த புதுப்புது தகவல்களைக் கேள்விப்படுகிறோம். கோவிட் தொற்று ஏற்பட்டால் அது உடனே சரியாகிவிடுமா, நீண்ட நாள் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது பலநாள் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்தது. எந்தத் தொற்றாக இருந்தாலும் அதன் பாதிப்பு சில நாள்களுக்கு நீடிக்கும், கோவிட் தொற்றும் அப்படித்தான் என்று சொல்லப்பட்டது. கோவிட் தொற்று ஏற்பட்டு குணமான சிலர், குணமான பிறகும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை சமூக ஊடகங்களில் பேச ஆரம்பித்த பிறகுதான், `லாங் கோவிட்' என்றொரு விஷயம் இருப்பதை மருத்துவ உலகமும் கவனிக்கத் தொடங்கியது. அதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. அறிகுறிகள் குறைந்தாலும் வைரஸ் உடலின் சில இடங்களில் இருக்கலாம், அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சைட்டோகைன் ஸ்ட்ராம் (cytokine storm) எனப்படும் அபரிமிதமான எதிர்ப்பு சக்தியின் காரணமாகவும் லாங் கோவிட் அறிகுறிகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமானவர்களை பாதிக்கும் `பிரெயின் ஃபாக்'; என்ன தீர்வு?

லாங் கோவிட் பாதிப்பில் உடலுறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. தூக்கமின்மை, மனது ஒரு மேகமூட்டத்துக்குள் இருப்பது போன்ற `பிரெயின் ஃபாக்' நிலை போன்றவை அதிகமாக இருக்கின்றன. தவிர உடல்வலி, இருமல், மூச்சுவாங்குதல் போன்றவையும் அதிகமிருக்கின்றன. கோவிட் பாதித்து குணமானவர்களிடமிருந்துதான் இந்தத் தகவல்கள் பெறப்படுகின்றன.

கோவிட் வைரஸோடு வாழப் பழகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. கோவிட் தொற்றி, தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் மற்றவர்களைவிட அதிகமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் தேவை ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள். சிலருக்கு ஏற்கெனவே இருக்கும் நீரிழிவு, இதயநோய்கள், சிறுநீரக நோய்களின் தீவிரம் அதிகமாவதும், இதுவரை இந்தப் பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு புதிதாகத் தெரிய வருவது, முடி உதிர்வது போன்ற பல விஷயங்களை லாங் கோவிட் கொடுப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கோவிட் பாதிப்பு வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்பட்டாலும், லாங் கோவிட் பாதிப்பானது இளவயதினரையே அதிகம் பாதிப்பதும் தெரிகிறது. பெண்களுக்கு பாதிப்பு சற்று அதிகம் என்றும் தெரிகிறது. கோவிட் பாதித்தவர்கள் சராசரியாக 4 முதல் 8 வாரங்களில் குணமாகிவிடுவார்கள். ஆனால் லாங் கோவிட் என்பது 12 வாரங்களுக்குப் பிறகும்கூட தொடர்கிறது.

COVID -19 OUT BREAK

Also Read: Covid Questions: ஒரே மாதிரியான அறிகுறிகள்; டெங்குவா, கொரோனாவா என எப்படித் தெரிந்துகொள்வது?

லாங் கோவிட் பாதிப்பிலிருந்து மீள என்ன செய்வது என மருத்துவ உலகம் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறது. கோவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்குக்கூட லாங் கோவிட் பாதிப்பு வருவது கண்டறியப்பட்டுள்ளது. லாங் கோவிட் பாதிப்பு வராமல் தடுக்க, கோவிட் வராமல் தடுப்பதுதான் முதல் வழி. எனவே மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி, கைகழுவுதல் போன்றவற்றை இனிமேலும் தொடர்ந்து பின்பற்றியே ஆக வேண்டும். இது தவிர இந்தப் பிரச்னைக்கு சில மருந்துகள் உதவுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. சமீபத்திய தரவுகளின் படி, கோவிட் வந்து குணமானவர்கள், மருத்துவரின் அறிவுரைப்படி தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் லாங் கோவிட் பாதிப்புகளின் தீவிரத்திலிருந்து ஓரளவு விடுபடுவதாகவும் தெரிய வந்திருக்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் தடுப்பூசி என்பது தொற்று வராமல் தடுப்பது, வந்தால் தொற்றின் தீவிரம் அதிகமாகாமல் தடுப்பது, லாங் கோவிட் பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைப்பது என பல வழிகளில் நமக்கான ஆயுதமாக இருக்கிறது."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-covid-vaccine-help-people-to-recover-from-long-covid-complications

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக