Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

இதெல்லாம் நீங்க கவனிச்சிருக்கீங்களா? - பேருந்து பயணக் கதைகள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு ஓட்டு வீடு.. சுற்றியும் வயல்கள்.. மாட்டுக் கொட்டாய்.. வைக்கோல் போர்.. பம்பு செட் ஒன்று கூடத் தெரிகிறதே..


இங்கே பார்த்தால் ஒரு குடிசை வீடு.. தலை நிமிர்ந்து நிற்கும் பனை மரங்கள்.


பெரிய பெரிய அய்யனார் சாமி சிலைகள்.. வழி நெடுக தென்னை மரங்கள்..


பேருந்தில் பயணித்துக் கொண்டே இப்படி வெளியில் பசுமைகளை பருகிவருவதில் எத்தனை ஆனந்தம்.


ஆனால் எல்லா பேருந்து பயணமும் இப்படி ரசிக்கும்படியாக அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை.


ஜன்னலோரம் உட்கார்ந்து பிடித்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டு மழையோ காற்றோ வருட வருட கரைவதில் தான் இஷ்டம்.


ஆனால் சில நேரங்களில் பேருந்தின் கூட்ட நெரிசலில் கால்கள் கூட கீழே பதியாமல் தள்ளாடி நிற்க வேண்டியிருக்கிறது. சில ஆண்களுக்கோ படியில் நின்று கொண்டாவது செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சில பெண்களுக்கோ அருவருக்கத்தக்க உரசல்களை தாண்டிச் செல்ல வேண்டியதாக உள்ளது.


பொது பேருந்தின் பயணம் என்றாலே பெரும்பாலும் இப்படித்தான் என்பார்கள்.


சில பயணங்கள் எப்பொழுது முடியுமோ என்று நினைக்க வைக்கும்.. சில பயணங்கள் வீடு வரப்போகிறதே இன்னும் நீளாதா என்று ஏங்க வைக்கும்.

சிலருக்கு பயணம் அலைபேசிக்குள் மூழ்கியே முடிந்து விடும். சிலருக்கோ அதில் கமழும் பாடல்களின் வரிகளில் மிதந்து கொண்டே செல்லும்.

பேருந்து சேவை

இப்படி ஜன்னல் காற்றும் இல்லாமல்.. நெரிசலும் இல்லாமல்.. அலைபேசியும் இல்லாமல்.. மனிதர்களை உணர்ந்து கொண்ட பயணங்கள் உண்டா!

அதிகாலையின் பயணம் ஒன்றில் எழுபதோ அதற்கும் மேலோ வயதுடைய பாட்டிகள் கையில் ஒரு காய்கறி மூட்டையும் தலையில் ஒரு பெரிய மூட்டையும் சுமந்து கொண்டு பேருந்தில் ஏறுவதை பார்த்திருக்கிறீர்களா! பார்க்கும் என் கண்களுக்கே அந்த காய்கறி மூட்டையின் கணம் வலிக்கும். எப்படிதான் இந்த வயதிலும் இப்படி உழைக்கிறார்களோ என்று பொறாமை கலந்த ஆச்சர்யம் மேல் எழும். ஆனால் அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் உழைக்க வேண்டும் என்ற வெறியோடு மட்டும் நின்று கொண்டிருப்பார்கள்.

காதலை உணர்ந்து இருக்கிறீர்களா.. பேருந்து நிறுத்தம் ஒன்றில் பேருந்து நின்றதும் கூட்டம் ஓடி வந்து பேருந்தை சூழ.. தன் மனைவி இந்த கூட்டத்தில் ஏறுவதுற்குள் இருக்கை இருக்குமோ.. இருக்காதோ.. என உணர்ந்த கணவன் எனக்கு முன் இருக்கையில் ஒரு இருக்கை வெற்றிடமாக இருந்தது அங்கே இருந்த பெண்ணிடம் "என் பொண்டாட்டி வருவாங்க.. ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் அந்த இடத்த பிடிங்களேன்.. ப்ளீஸ் பா.. ஏறிட்டாங்க ஒரு நிமிஷம் விட்றாதிங்க" கிட்டத்தட்ட கெஞ்சியே விட்டார். திரைப்படத்தில் எப்படி எல்லாமோ காதல் காட்சிகள் பார்த்தாலும் நேரில் இப்படிப்பட்ட அன்பை உணர்வது பூரிப்பு தான்.

இறப்புச் செய்தியை ஏந்திக் கொண்டு அவர்களைக் காண செல்பவர்களின் தவிப்பை பார்த்திருக்கிறீர்களா.. "என் மவ வீட்டு பேத்தி கயிறு போட்டுக்கிட்டா டா.. போன நாயித்து கிழமை தானா வந்துட்டு போன.. அப்பன் திட்டி புட்டான்னு இப்படி பன்னிகிட்டா.. அய்யோ ஊருக்கு விடாம ஒரு வாரம் வெச்சி அனுப்பிர்களாமே.. பிள்ளைய வீண் பண்ணிடாங்களே".. இது போன்ற தற்கொலைகள் எங்கோ நடப்பது போல் செய்திகளிலும் அலைபேசியிலும் கண்டதுண்டு இப்படிப்பட்ட கதறலை நேரில் காணும் பொழுது அங்கே இருந்தவர்களுக்குள்ளும் அந்த சோகம் பரவ அந்த பாட்டியைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள்.


ஒரு நாள் சமவயதுடைய பெண் ஒருத்தி என்னருகில் வந்து அமர்ந்தாள். அந்த பெண் பார்க்க சற்று குண்டாக இருந்தால் அவள் சரியாக தன் இருக்கையில் அமரவில்லை. இரண்டு நிமிடங்களுக்கு பின், "உங்களுக்கு கம்பர்ட் ஆ இருக்கா.. " என்றாள் அந்த பெண் தன் உடல்வாகை அந்த அளவிற்கு அசௌகர்யமாக நினைத்திருக்கிறாளா.. இல்லை இந்த சமூகம் அவளுக்குள் அப்படிப்பட்ட எண்ணங்களை ஊடுருவ செய்துள்ளதா! "ஒன்னும் பிரச்சனையில்லை நீங்க நல்லா உக்கார்ந்துகோங்க" இதை தவிர எனக்கு வேறெதுவும் அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.

பேருந்து பயணம்


சில அறிவுரைகள் கூட கிடைத்திருக்கின்றது தெரியுமா! மனதளவில் ஏதோ ஒரு குழப்பத்தோடு பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது யாரோ இருவர் பேருந்தில் பேசிக்கொள்ளும் செய்தி உங்கள் வாழக்கைக்கும் பொருந்தும். 'அட ச்சே இது கூட சரிதான' என்று உள்மனம் உணரும்.
அவ்வளவு தானா என்றால்..


வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களோ.. வெவ்வேறு நடிகர்களை விரும்புபவர்களோ நிகழ்த்தும் வாக்குவாதங்களால் ஏற்படும் குட்டிச் சண்டை.. பள்ளி சீருடையில் காதலர்களை காணும் பொழுது வரும் சிறு கோவம்.. நிறைமாத கர்ப்பிணி தனியாக பேருந்தில் ஏறுகையில் ஏன் தான் உடன் யாரும் வராமல் நெரிசலில் விடுகிறார்களோ என்ற தவிப்பு. இரண்டு நண்பர்கள் அவரவர் ஊர் பாட்சையில் பேசும்பொழுது பரவும் சுவாரஸ்யம் கலந்த நகைச்சுவை.


கிட்டத்தட்ட நவரசங்களையும் கடந்து வருகிறோம்!
முதன்முறையாக தனியாக பேருந்தில் செல்ல நேரிடும் பொழுது பயத்தோடு ஏறி "அண்ணா அந்த ஸ்டாப் வந்தா கொஞ்சம் சொல்லுங்க" இரண்டு முறைக்கு மேல் நடத்துனரிடம் கேட்கப் பக்கத்தில் இருப்பவர் "இன்னும் நாலு ஸ்டாப் இருக்குமா.." என்று சொல்ல "நானும் அங்க தான் இறங்கப் போறேன்.. வந்தா சொல்றேன் இருமா" என்று இன்னொருவர் சொல்ல.. அந்த இடத்தை சென்றடைந்ததும் ஏதோ வீரச் செயல் புரிந்தவிட்ட உணர்வு மேல் எழும். அன்றிலிருந்தே சமூகம் பேருந்தின் வழி நம் கைப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையின் பல பரிமாணங்களை உணர்த்த ஆரம்பிக்கின்றன. பயணம் முடிந்த பிறகும் கேட்கும் விசில் சத்தங்களும் சில்லறை சத்தங்களும் போல பல மறக்க முடியா நினைவுகள் பேருந்தை விட்டு இறங்கிய பிறகும் உடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-bus-travel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக