Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

AKS - 27 | மற்றவர்களின் அந்தரங்கத்தை பேசுவது நாகரிகமான சமூகத்தை உருவாக்குமா?

சிவாவைப் பார்த்துக்கொள்ள வரும் ஹோம் நர்ஸ் வந்ததிலிருந்து செல்போனில் பேசியபடியே இருக்கிறார். சிவாவை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு வெளியில் நின்று போன் பேசிக் கொண்டிருக்கிறார். சிவா கத்தி கூப்பிட்ட பிறகு உள்ளே சென்று அவனை அழைத்து வருகிறார். பிறகு சிவாவுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும்போது போனில் பேசிக்கொண்டு கவனிக்காமல் அவன் மேல் கொட்டி விடுகிறார். கோபத்தில் சிவா ஹோம் நர்ஸை அறைந்து விடுகிறான்.

சிவா கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். ஆனால் அவன் மீது தண்ணீரை கொட்டிய போது தன்னையும் மீறி அறைந்து விடுகிறான். காரணம் எதுவானாலும் ஒருவர் சக மனிதரை அடிப்பதை நியாயப்படுத்த முடியாது. சிவா நர்ஸை அடித்தது மிக தவறு. ஆனால் அதைவிட மோசமான விஷயம் நோயாளியை பார்த்துக் கொள்ள வந்த இடத்தில் வேலையில் துளியும் கவனமில்லாமல் தன்னுடைய சொந்த விஷயங்களை பார்த்துக் கொண்டு இருப்பது. அதுவும் நோயில் படுத்திருக்கும் ஒருவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று யோசிக்காமல் நோயாளியின் அருகில் உட்கார்ந்து செல்போன் பேசுவது மிகத் தவறானது.

AKS - 27 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா கூறியது போல இந்த கொரோனா சமயத்தில் எவ்வளவோ மருத்துவ பணியாளர்கள் தங்களது வேலையின் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இந்த ஹோம் நர்ஸை போன்ற பொறுப்பில்லாத, அதுவும் செவிலியர் வேலைக்கு துளியும் தகுதி இல்லாத குணத்துடன் நடந்து கொள்ளும் செவிலியர்களால் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

நர்ஸ் போகும்போது, தான் தெரியாமல் தண்ணீர் கொட்டி விட்டதாகவும், தன்னை அடித்ததற்காக ஏஜென்சியில் பதில் சொல்ல வேண்டும் என்றும் சொல்வது தான் ஹைலைட்! இதுபோல் வேலை செய்யாமல் இருந்துவிட்டு அல்லது வேலையில் தவறு செய்துவிட்டு தங்களது தவறை மறைத்து, பாதிக்கப்பட்டவர்களின் மேல் குற்றம் சொல்லி தங்களுக்கான சங்கம், அல்லது நிறுவனத்தை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்.

மேட்ரிமோனியல் அலுவலகத்தில் முதல் நாள் வேலைக்கு வருகிறாள் கவிதா. வாடிக்கையாளர் ஒருவர் இரண்டாம் திருமணத்திற்காக தங்கள் மகனுக்கு பெண் பார்க்கச் சொல்லி வந்திருக்கிறார்கள். அவர்களை ஏற்கனவே ஒரு யூடியூப் வீடியோவில் பார்த்திருப்பதாக சொல்லும் கவிதா, “முதல் மருமகளைக் கொடுமைப்படுத்தியது போதாது என்று இரண்டாவது திருமணம் செய்கிறீர்களா?” என்று பேசி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறாள். அதை பார்க்கும் ராஜேஷ் கவிதாவிடம் வாடிக்கையாளரிடம் எப்படி பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறான்.

AKS - 27 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதா அவர்களை நேரில் பார்த்துவிட்டு அவர்கள் பக்கம் நியாயம் இருப்பது போல் தெரியவில்லை என்கிறாள். கவிதா சொல்வதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வந்தால், யாரும் யார் மீது வேண்டுமானாலும் கொலைப்பழிக் கூட சுமத்தலாம். அதுபோக சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை யார் முதலில் வெளியிடுகிறார்களோ அவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள்.

காணொளி மற்றும் புகைப்படங்கள் போலியாக தயாரித்து ஒருவரின் மீது அவதூறு பரப்ப முடியும். இன்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கால்வாசி காணொளி மற்றும் புகைப்படங்கள் அவ்வாறு மற்றவர்களை பழிவாங்குவதற்காக உருவாக்கப்பட்ட போலியானவைகளும், அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களும் தான். என்னவென்று தெரியாமல் நமது கேளிக்கைக்காக அவற்றை பகிர்வதும் மற்றவர்களின் அந்தரங்கத்தை குறித்துப் பேசுவதும் நாகரிகமான சமூகத்தை உருவாக்காது. இது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

அதேபோல் பெண் எனும் காரணத்திற்காக மட்டும் பெண்கள் குற்றம் சாட்டியதும் வரதட்சணை பிரச்னையை நம்பி விடுவதும் தவறு. இன்று பல பெண்களும் அதை மிக தவறாக பயன்படுத்துகிறார்கள். ஏற்கெனவே ஒருவரை காதலித்து குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளும் பெண் ஒருவர் சில நாட்களிலேயே கணவனை விவாகரத்து செய்கிறார். விவாகரத்துக்கான காரணமாக மாப்பிள்ளை வரதட்சனை கேட்டதாகவும், அடித்ததாகவும் பொய் சொல்கிறார். இதனால் அந்தப் பையனுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் அப்பெண் விவாகரத்திற்கு பிறகு ஏற்கெனவே காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். எளிதாக ஒரு பொய்யை சொல்லி அவசரமாக விவாகரத்து வாங்கி அவள் தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொண்டாள். ஆனால் அவள் கூறிய பொய்யினால் எந்த தவறும் செய்யாத ஒருவர் தண்டனை அனுபவிக்கிறார்.

பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களை பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தவறாக பயன்படுத்துவதால் உண்மையாக நீதி கேட்கும் மற்ற பெண்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். சட்டம் எவ்வளவு ஆதாரங்களை திரட்டினாலும், நியாயப்படி நடந்து கொண்டாலும் மனிதர்கள் தங்களது மனதின் சாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்ளும் வரை குற்றங்கள் குறையாது.

AKS - 27 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதாவுக்கு தனிப்பட்ட முறையில் அந்த வாடிக்கையாளரை பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும். அல்லது அவர்களிடம் பொறுமையாக பதில் சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். தவறானவர்கள் என்கிற சந்தேகம் இருந்தால் அவர்களை உட்கார சொல்லிவிட்டு மேலதிகாரியிடம் அவர்களைப் பற்றிக் கூறி என்ன முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கலாம். சமூக வலைத்தளங்களில் பார்க்கும் விஷயங்கள், நம் அக்கம் பக்கத்தில் கேள்விப்படும் விஷயங்கள், நம்முடைய தனிப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு நாம் வேலை பார்க்கும் இடத்தில் வாடிக்கையாளர்களை அணுகக் கூடாது. தன்னிச்சையாக கவிதா அவர்களை அவமரியாதை செய்தது தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத்தின் ஊழியர் என்கிற முறையிலும் தவறு.

ஹோம் நர்ஸ் கிளம்பிச் சென்ற பிறகு சிவா தனது அறையில் கீழே விழுந்து விடுகிறான். சத்தம் கேட்டு அங்கே செல்லும் காயத்ரியை கண்டதும் சிவா வெளியே செல்லுமாறு கத்துகிறான். முதலில் பதற்றப்பட்டு அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள் காயத்ரி. அவன் அதை காதில் வாங்காமல் அவளை தன் கண்ணில் படாமல் வெளியேறுமாறு கூறுகிறான். காயத்ரி சட்டென்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கையை நீட்டி சிவாவை தன் கையை பிடித்து எழுந்திருக்குமாறு கூறுகிறாள். சிவா உண்மையில் காயத்ரியை பார்த்து சற்று மிரண்டுதான் போகிறான்.

AKS - 27 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி சிவாவை மிரட்டுவதும் சிவா அவளைக் கண்டு அதிர்ச்சியாகி, பேசாமல் அவள் சொல்வதை எல்லாம் செய்வதும் ரசசிக்கும்படி இருந்தது. சிவா ஏற்கெனவே சிறிது சிறிதாக மாறி வந்தது ஒரு காரணம். சிவாவை போன்றவர்கள் வேண்டுமென்று தனிமை விரும்பிகளாக இருப்பதில்லை. அவர்களது சூழ்நிலை மற்றும் மனிதர்களிடம் ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவங்களும் அவர்களை தனியாக இருக்கும்படி செய்கிறது. அவர்களை புரிந்துகொண்டு நடப்பவர்களை காணும்பொழுது தங்களையும் அறியாமல் இணக்கம் ஆவதுடன், அன்புடன் நடந்து கொள்கிறார்கள்.

வீட்டில் நடந்த எல்லாவற்றையும் காயத்ரி புனிதாவிடம் சொல்லும்போது புனிதா அவளை நம்பவில்லை. பிறகு வீட்டுக்கு கிளம்பும் புனிதாவிடம் சிவாவை பார்த்துக் கொள் என்று காயத்ரி சொல்லும்போது புனிதா அர்த்தத்துடன் சிரிக்கிறாள்.

தனக்கு மேட்ரிமோனியல் வேலை ஒத்துவராது என்று நினைக்கும் கவிதா அடுத்து என்ன முடிவு எடுப்பாள்? சிவா தொடர்ந்து தன்னை காயத்ரி பார்த்துக்கொள்ள சம்மதிப்பானா?

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinal-kaadhal-seiveer-digital-series-27-episode-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக