Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்காத லார்ஜ்கேப் பங்குகள்; என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா? - 25

நண்பர்கள், உறவினர்களுடன் ரிசார்ட் சென்றால், அங்குள்ள நீச்சல் குளத்தில் பலர் ஆனந்தமாக நீந்தி விளையாடுவதைப் பார்த்திருப்பீர்களே? நாமும் நீச்சல் தெரியாவிட்டாலும் நீச்சல் குளத்தில் இறங்கி ஆழமில்லாத பகுதியில் விளையாட முயல்கிறோம் அல்லவா? அப்புறம் படிப்படியாகக் கற்றுக் கொண்டு ஆழமான பகுதிகளுக்குச் செல்கிறோம். அது போல பங்குச் சந்தைக் கடலில் ஆழமில்லாத பகுதி உள்ளதா? கண்டிப்பாக உண்டு. அதுதான் லார்ஜ் கேப் பங்குகள்.

Bombay Stock Exchange (BSE) building in Mumbai

லார்ஜ் கேப் என்றால் என்ன?

ஒரு கம்பெனியின் பங்குகளை அவற்றின் விலையால் பெருக்கினால் வரும் தொகைதான் அந்தக் கம்பெனியின் மதிப்பு (கேபிடலைசேஷன்). அந்த மதிப்பு பிரகாரம் சந்தையில் உள்ள ஐயாயிரத்து சொச்ச கம்பெனிகளையும் லிஸ்ட் செய்தால் முதல் நூறு கம்பெனிகள் லார்ஜ் கேப் எனப்படும். (கேப் என்பது கேபிடலைசேஷன் என்பதன் சுருக்கம்). அடுத்து வரும் நூற்றைம்பது கம்பெனிகள் மிட் கேப் என்றும், மீதி இருப்பவை ஸ்மால் கேப் என்றும் அழைக்கப்படுகின்றன. லார்ஜ் கேப் பங்குகள் தங்கள் துறையில் மார்க்கெட் லீடராக விளங்குகின்றன. இவற்றின் பொதுவான அம்சங்கள்:

1. நல்ல பாரம்பர்யம்: வலுவான பொருளாதார அடித்தளமும், நீண்ட காலமாக வாடிக்கையாளர் நம்பிக்கையும் கொண்ட டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற குழுமங்களைச் சேர்ந்த கம்பெனிகள் லார்ஜ் கேப்பில் இருப்பதால் தரம் உறுதியாகிறது.

2. குறைந்த ரிஸ்க்: இந்தப் பங்குகள் நன்கு வேரூன்றி வளர்ந்த மரங்களைப் போன்றவை. ஆடிக் காற்றுக்கெல்லாம் அசைவதில்லை. சந்தை படு வீழ்ச்சி அடைந்து மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள் எல்லாம் இருபது, முப்பது சதவிகிதம் இறங்கினாலும், மிகக் குறைந்த இறக்கத்துடன் நிலைக்கும் அளவு பொருளாதார வலிமை கொண்டவை.

Stock Market (Representational Image)

Also Read: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் இந்த 2 விஷயங்களைத்தான் நல்லா கவனிக்கணும்! - 23

3. சுமாரான ரிட்டர்ன்: ரிஸ்க் குறைந்தால் ரிட்டர்னும் குறையும் அல்லவா? மேலும் இவை ஏற்கெனவே நன்கு வளர்ந்து முடிந்தவை என்பதால் அதிவேக வளர்ச்சி இருக்காது. ஐ.டி.சி போன்ற சில கம்பெனிகள் அவை தரும் டிவிடெண்டுக்காக விரும்பப்படுகின்றன.

4. அதிக விலை: தரம் உயர்ந்ததால் லார்ஜ் கேப் கம்பெனி பங்குகளின் விலையும் உயர்வாகத்தான் இருக்கிறது.

5. வெளிப்படைத் தன்மை: மிட் கேப், ஸ்மால் கேப்புகளுக்கு இல்லாத பல விதிமுறைகள் லார்ஜ் கேப் கம்பெனிகளுக்கு உண்டு. அவை தங்கள் செயல்பாடுகளை மக்கள் பார்வைக்கு வைத்தே தீர வேண்டும். இன்று புதிதாக சந்தைக்கு வந்த ஜொமேட்டோ கம்பெனி, வருடத்துக்கு ஒரு முறைதான் கணக்குக் காட்டுவேன் என்று தடாலடியாகத் தெரிவிக்கிறது. ஆனால் லார்ஜ் கேப் கம்பெனிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாது.

6. எளிதில் விற்கக்கூடியவை: சில தரம் குறைந்த பங்குகளை நாம் விற்க முயலும்போது வாங்குவதற்கு சந்தையில் ஆளே இருக்காது. லார்ஜ் கேப் பங்குகளுக்கு என்றுமே சந்தையில் வரவேற்புதான்.

லார்ஜ் கேப் பங்குகளில் உள்ள குறைகள்:

மேற்கண்ட நன்மைகளில் சில எதிர்மறையாகவும் செயலாற்றுகின்றன. சந்தை வேகமாக ஏறும்போது அதே வேகத்தில் இவை ஏறி லாபம் தருவதில்லை. மேலும், இந்தப் பங்குகளின் விலை அநேகமாக ஆயிரக்கணக்கில் இருப்பதால் சிறு முதலீட்டாளர்களால் வாங்க முடிவதில்லை. லார்ஜ் கேப் கம்பெனிகளின் எண்ணிக்கையும் குறைவுதான் என்பதால் எல்லாத் துறைகளிலும் அவை இருப்பதில்லை.

Stock Market (Representational Image)

Also Read: பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24

ஆனால், நம் பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோவில் கண்டிப்பாக லார்ஜ் கேப் கம்பெனி பங்குகளுக்கு இடமளிக்க வேண்டும். சந்தை வீழ்ச்சிகளின்போது நம் போர்ட்ஃபோலியோவும் ஆட்டம் காணாமல் இருப்பதற்கு இவற்றின் ஸ்திரத்தன்மை உதவும். சில சிறந்த லார்ஜ் கேப் கம்பெனிகள், வங்கிகள் தரும் வட்டி வருமானத்துக்கு ஈடாக டிவிடெண்ட் தருகின்றன. ஸ்திரத்தன்மைக்காக லார்ஜ் கேப் பங்குகளும், வளர்ச்சிக்காக மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளும் உள்ள ஒரு போர்ட்ஃபோலியோ சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து வளரும்.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.


source https://www.vikatan.com/business/finance/what-are-the-advantages-of-investing-in-large-cap-shares

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக