`ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில், பத்திரப்பதிவு சம்பந்தமாக வெளிப்படையான உத்தரவு இல்லாமல் பத்திரப்பதிவு செய்வதற்கு தேவையில்லாத காலதாமதத்தை சார் பதிவாளர் ஏற்படுத்துகிறார். எனவே, அவரைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த செய்யவிருப்பதாக’ ஆண்டிபட்டி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பெரிய பேனரும் வைத்தனர். இதனால் ஏற்கெனவே பத்திரப்பதிவுக்கு தயாராகிக்கொண்டிருந்தவர்களும், புதிததாக பத்திரப்பதிவுக்கு தயாரான மக்களும் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர்.
Also Read: புதுச்சேரி: `போலி பத்திரம் மூலம் நில அபகரிப்பு!’ - முன்னாள் முதல்வர் நாராயணசாமி `பகீர்’ தகவல்
ஆண்டிபட்டி பத்திர அலுவலகத்தில் ஏழு பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பத்திர எழுத்தர்கள் உள்ளனர். ஆனால் 25 பேர் பத்திர எழுத்தர்கள் எனக் கூறிக்கொண்டு இடைத்தரகர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். மேலும், சிறிய அளவிலான ரியல் எஸ்டேட் முதலாளிகளும் இவர்களுக்குத் துணையாக இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தநிலையில்தான் சார் பதிவாளருக்கு எதிராகப் பத்திர எழுத்தர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.
இது குறித்து ஆண்டிபட்டி சார் பதிவாளர் உக்கிரபாண்டியிடம் கேட்டோம். ``இங்குள்ள பத்திர எழுத்தர்கள் அன் அப்ரூவல் பிளாட்டுகளுக்கு பத்திரப்பதிவு செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். நல்ல முறையில் செய்து கொடுக்கும் பத்திரப்பதிவிலேயே பல சிக்கல் ஏற்படுகின்றன. இதனால் சட்டத்துக்கு உட்பட்டு மட்டுமே பதிவு செய்யப்படும் எனக் கூறி அன் அப்ரூவல் பிளாட்டுகளுக்கான பத்திரப்பதிவைத் தவிர்த்துவந்தேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள பத்திரப்பதிவு அமைச்சர் தளர்வு அளிப்பார் என ரியல் எஸ்டேட் முதலாளிகளும், பத்திரப்பதிவு எழுத்தர்களும் எதிர்பார்த்தனர்.
அது நடக்கவில்லை என்றதும், எனக்கு டார்ச்சர் கொடுத்து என்னை இங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். `எங்கள் நிலத்தை மூன்று சென்ட்டாகப் பதிந்தால் என்ன... ஐந்து சென்ட்டாக பதிந்தால் என்ன...’ எனப் பத்திர எழுத்தர்கள் கூறுகின்றனர். வரைமுறைப்படுத்தியுள்ள இடங்களை ஏன் பதியக் கூடாது என வாக்குவாதம் செய்தனர். திருமணம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி உடனடியாகப் பதியச் சொல்கின்றனர். என் பெயரைச் சொல்லி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு என்னைச் சிக்கவைக்கப் பார்க்கின்றனர்.
ஒரு நாளைக்கு 100 பத்திரங்கள்கூடப் பதிய தயாராக இருக்கின்றனர். பூங்கா, சாலை உள்ளிட்டவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்து கொடுத்தால்தான், உள்ளாட்சி நிர்வாகத்தால் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க முடியும். சட்டத்துக்குப் புறம்பாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வும் இல்லை” என்றார்.
வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக போஸ்டர் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி பத்திர எழுத்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) திருஞானத்திடம் பேசினோம். ``சார் பதிவாளருக்கும், பத்திர எழுத்தர்களும் சில சந்தேகங்கள் இருந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறேன். `உரிய ஆணவங்கள் இருந்தால் மட்டுமே, விதிகளுக்கு உட்பட்டுத்தான் பத்திரப்பதிவு செய்யப்படும்’ எனக் கூறினேன். அதைப் பத்திர எழுத்தர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனி வழக்கம்போல தடையின்றி பத்திரப்பதிவு நடைபெறும்” என்றார்.
Also Read: இனி இந்த மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்... ஆனால், கூடுதல் கட்டணம்!
பத்திர எழுத்தர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபோது, ``புதிதாக அமைந்துள்ள ஆட்சியில் பதிவுத்துறையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அது குறித்த புரிதலை ஏற்படுத்தக் கோரி அதிகாரிகளைக் கேட்டோம். ஆனால் விளக்கம் அளிக்கவில்லை. அவர்களை வரவழைப்பதற்காகவே வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தோம். அன் அப்ரூவல் பிளாட்டுகளுக்கு பத்திரப்பதிவு செய்ய கட்டாயப்படுத்துகிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டு. அதை மறுக்கிறோம்’ என்று முடித்துக்கொண்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/protest/bond-paper-writers-strike-in-theni-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக