Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஹர்சலின் ஹாட்ரிக், ஃபார்முக்குத் திரும்பிய ஈ சாலா பாய்ஸ்... பல்தான்ஸின் படுதோல்விக்கு என்ன காரணம்?

இரண்டாம் பாதி ஐபிஎல்-இல் இதுவரை வெற்றியே பெற்றிடாத மும்பை இந்தியன்ஸும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதிப்ன. இதில் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே டாஸை வென்று முதலில் பந்துவீச போவதாக அறிவித்தார். ஒரு வழியாக இந்தப் போட்டியின் ப்ளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். பெங்களூர் அணியை பொறுத்தவரைக்கும் வனிந்து ஹசரங்கா, டிம் டேவிட் போன்றோரை பென்ச்சில் வைத்துவிட்டு கைல் ஜேமிசனையும் டேன் க்றிஸ்டியனையும் ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார் கோலி.

ராகுல் சஹார்

சிஎஸ்கே-க்கு எதிரான கடந்த போட்டியில் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கியிருந்த கோலி, இந்தப் போட்டியில் ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சருடன் தொடங்கினார். கோலி அட்டகாசமாகத் தொடங்கியிருந்தாலும் படிக்கல் பும்ரா வீசிய அடுத்த ஓவரிலேயே டக் அவுட் ஆனார். நம்பர் 3 இல் ஸ்ரீகர் பரத் இறங்கினார்.

பெங்களூருவை பொறுத்தவரைக்கும் அந்த நம்பர் 3 இடம் என்பது வீணாக இருக்கிறது என்று தெரிந்தே வைத்திருக்கிறார்கள். முதல் பாதியில் 7 போட்டிகளில் 6 முறை நம்பர் 3 பேட்ஸ்மேனை மாற்றியிருந்தார்கள். இந்த முறைதான் அதிசயமாக ஸ்ரீகர் பரத்திற்கு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கோலி. அந்த நம்பிக்கைக்கு நேற்று ஸ்ரீகர் பரத் ஓரளவு நியாயம் செய்தார்.

கோலியும் ஸ்ரீகர் பரத்தும் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்களைச் சேர்த்திருந்தனர். பரத் 32 ரன்களில் ராகுல் சஹார் பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் ஆனார்.

சினம் கொண்ட சிங்கமான கோலியே ஒரு எண்டில் அமைதியாக நின்றபோது ராகுல் சஹாரும் பரத்தும் முறைத்து கொண்டதும் வெறித்தனமாகக் கூச்சலிட்டதும் இணையத்தில் வைரலானது. இருவருக்கும் என்ன முன் பகையோ?!
மேக்ஸ்வெல்

நம்பர் 4 இல் மேக்ஸ்வெல் வந்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியிருந்தவர் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் கதகளி ஆடியிருந்தார். ஸ்பின்னர்களை ரிவர்ஸ் ஹிட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களை க்ரீஸுக்குள் ஆழமாகச் சென்று மிட் விக்கெட்டிலும் பவுண்டரிகளாகச் சிதறவிட்டார். இடையில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டையும் ஆடியிருந்தார்.

ஒரு முனையில் இந்த அடிதடிகள் அரங்கேறி கொண்டிருக்க, இன்னொரு முனையில் கோலி அமைதியாக ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

பவர்ப்ளேயில் மட்டும் 31 ரன்களை அடித்திருந்த கோலி, அதன்பிறகு சந்தித்த 23 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மொத்த ஸ்ட்ரைக்ரேட் 121.43 மட்டுமே.
விராட் கோலி

நன்றாகத் தொடங்கிய இன்னிங்ஸை சுமாராக ஆடம் மில்னே பந்தில் அவுட்டாகி முடித்திருந்தார். இந்த சீசன் என்றில்லை கடைசி சீசனிலுமே இப்படி ரன்ரேட்டில் கோலி பெரும் பிரச்னையை சந்தித்திருக்கிறார். தொடக்கத்திலேயே வந்து டெத் ஓவர் வரை க்ரீஸில் நின்று 40 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பது அவ்வளவாக அணிக்கு உதவுவதில்லை. ஆனால், இரண்டு சீசன்களாக கோலி இப்படித்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். எப்போதும் 140 ஸ்ட்ரைக்ரேட்டிலேயே ஆட விரும்பும் கோலி இப்போதெல்லாம் 120 ஐ சுற்றி வட்டமடிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். அக்ரசிவ் கோலி எங்கே?

அரைசதம் கடந்து செட்டில் ஆகியிருந்த மேக்ஸ்வெல், அப்போதுதான் க்ரீஸுக்குள் வந்திருந்த டீ வில்லியர்ஸ் இருவரும் சேர்ந்து டெத் ஓவரை ஜமாய்க்க போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தன்னுடய க்ளாஸை பும்ரா நிரூபித்தார். இதனால் கடைசி 2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பெங்களூர் அணியின் ஸ்கோர் 165-6. மும்பைக்கு 166 டார்கெட்.

மும்பை அணியும் அதிரடியாகவே தொடங்கியது. பவர்ப்ளேயில் மட்டும் 56 ரன்களை அடித்கிருந்தார். ரோஹித் வெளுத்தெடுத்து கொண்டிருந்தார். ஜேமிசனின் ஓவரிலேயே தொடர்ந்து மூன்று பவுண்டரிக்களை அடித்தார். இந்தக் கூட்டணியே போட்டியை பெங்களூருவின் கையிலிருந்து பறித்துவிடும் எனத் தோன்றியது. அப்போதுதான் ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார் கோலி.

சஹால்
7-12 இந்த 6 ஓவர்களில் சஹால்-மேக்ஸ்வெல் கூட்டணி பந்து வீசியிருந்தது. இந்த 6 ஓவரில் 30 ரன்களை கொடுத்தவர்கள் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இடக்கை பேட்ஸ்மேனுக்கு லெக் ஸ்பின்னர் வீசக்கூடாதா? என்னய்யா மேட்ச் அப் இது என ஆதங்கத்தில் டீகாக் மற்றும் இஷன் கிஷன் என இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் சஹால். இந்த சீசனில் முதல் பாதி சஹாலுக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கவில்லை. கடினமான காலங்களை கடந்து வந்த சஹால் நேற்று 4 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறித்தனமாக ஃபார்முக்குத் திரும்பியிருந்தார்.

பார்ட் டைமராக 2 ஓவரை வீச வந்த மேக்ஸ்வெல் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார். முழுமையாக நான்கு ஓவர்களையும் வீசியவர் க்ரூணால் பாண்டியாவின் விக்கெட்டையும் வீழ்த்தி கொடுத்தார். இதன்பிறகே போட்டி பெங்களூர் பக்கம் திரும்பியது.

சஹால், மேக்ஸ்வெல் இருவரும் செய்ததே தரமான சம்பவம்தான். ஆனால், இவற்றை தாண்டி 'வேற மாரி' சம்பவம் ஒன்றை ஹர்ஷல் படேல் செய்தார்.

மேக்ஸ்வெல்
பொல்லார்ட் இருக்கிறார்... ஹர்திக் இருக்கிறார்... கடைசியில் அடித்து முடித்து கொடுக்க இவர்களே போதும் என நினைத்திருக்கலாம். ஆனால், 17வது ஓவரில் இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த வீழ்த்திய ஹர்ஷல் படேல் ராகுல் சஹாரின் விக்கெட்டையும் சேர்த்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார்.

மூன்றுமே மெதுவான பந்துகளாக யார்க்கர் லெந்திலும் லோ ஃபுல் டாஸாகவும் விழுந்தவை. மும்பைக்கு எதிராக மட்டும் கூடுதல் வெறித்தனத்தோடு ஹர்சல் படேல் பந்து வீசிக்கொண்டிருக்கிறார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சீசனை வெற்றிகரமாக தொடங்கியவர், நேற்று மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவ்வளவுதான். மேட்ச் மொத்தமாக பெங்களூருவின் கைகளுக்குள் வந்தது.

மும்பை 18.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு போட்டி மாற்றப்பட்டவுடனேயே மும்பை எப்படியும் ஹாட்ரிக் கோப்பையை அடித்துவிடும் என ரசிகர்கள் கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால், மும்பை இந்தியன்ஸோ ஹாட்ரிக் தோல்வியை ரசிகர்களுக்கு பரிசாக அளித்திருக்கிறது.

ஹர்ஷல் படேல்

கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களை அடித்து கொடுத்தார். பவர்ப்ளேயில் மட்டும் 56 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தோல்வியடைந்ததற்கு இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், க்ரூணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா என மும்பையின் மிடில் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி கொண்டிருப்பதே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் என்ன சோகம் என்றால் மும்பையின் மிடில் ஆர்டர்தான் உலகக்கோப்பையில் இந்தியாவின் மிடில் ஆர்டராகவும் இருக்கப்போகிறது.

சீக்கிரம் ஃபார்முக்கு வாங்க பல்தான்ஸ்!


source https://sports.vikatan.com/ipl/rcb-back-to-form-with-a-dominant-victory-against-mumbai-indians

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக