2020 ஐபிஎல் சீசனை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்தே மும்பை இந்தியன்ஸ் அணி வென்றிருந்தது. அதனால் இரண்டாம் பாதி ஐபிஎல் போட்டிகள் UAE-க்கு மாற்றப்பட்டவுடனேயே, இந்த முறையும் கோப்பை நமக்குதான் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், சுமாராக ஆடிக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி UAE க்கு சென்றவுடன்தான் ரொம்பவே சுமாராக ஆடத் தொடங்கியது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி. அதுவும் படுதோல்வி. இந்த சீசன் அவ்வளவுதான் என மும்பை ரசிகர்கள் மனம் வெதும்பி கொண்டிருந்த நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது. சேஸ் செய்த மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தவை என இரண்டு பெர்ஃபார்மென்ஸ்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரைக்கும் பொல்லார்ட் ஒரே ஓவரில் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் இருவரையும் வீழ்த்தியிருப்பார். பேட்டிங்கில் சவுரப் திவாரி நிலைத்து நின்று 45 ரன்களை எடுத்திருப்பார். இந்த இரண்டுமே மும்பைக்கு மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ்களாக அமைந்திருந்தது.
எல்லா போட்டியிலுமே பொல்லார்டை ரோஹித் பந்துவீச பயன்படுத்திக் கொண்டே இருக்கமாட்டார். பந்துவீசுகிற போட்டியிலும் 6-வது பௌலராக இருப்பதால் அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் பெரிதாக கிடைக்காது. ஆனால், ஒரு ஓவரை வீசினாலும் அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்துவிடுவார். நேற்று பஞ்சாபுக்கு எதிராகவும் அப்படியே செய்திருந்தார். வீசியது ஒரே ஒரு ஓவர்தான். ஆனால், பஞ்சாப் அணியின் மிக முக்கிய இரண்டு விக்கெட்டுகளை அந்த ஓவரிலேயே வீழ்த்திவிட்டார். ஹர்திக்கால் பந்துவீச முடியாத குறையை பொல்லார்ட் தீர்த்திருந்தார்.
முதல் 6 ஓவர்களில் பஞ்சாப் அணி 38 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. பும்ரா, போல்ட், நேதன் கூல்டர்நைல் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் மிகச்சிறப்பாக பந்து வீசிவிட்டு சென்றதே பவர்ப்ளேயில் பெரிதாக ரன்கள் வராததற்கு காரணமாக இருந்தது
மேலும், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் க்ரூணால் பாண்டியா மந்தீப் சிங்கின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இப்போது க்ரீஸில் கே.எல்.ராகுலும் கிறிஸ் கெயிலும் இருந்தார்கள். அந்த அணியை பொருத்தவரை இந்த கூட்டணிதான் அவர்களின் முதுகெலும்பு. இந்நிலையில்தான், பவர்ப்ளே முடிந்தவுடனேயே 7-வது ஓவரை ரோஹித் பொல்லார்டிடம் கொடுத்தார்.
மெயின் பௌலர்களை அட்டாக் செய்ய முடியாததால், ஆறாவது பௌலரான பொல்லார்டை அட்டாக் செய்யும் முனைப்போடு தயாரானது கெய்ல் - ராகுல் கூட்டணி. ஆனால், ஆறாவது பௌலர் என்றாலே அட்டாக் செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணமே அவர்களுக்கு வினையாக அமைந்துவிட்டது.
பவர்ப்ளேயில் ரன்கள் வரவில்லை. க்ரீஸில் கெய்ல் நிற்கிறார் என்றவுடனேயே நம்மை அட்டாக் செய்ய பார்ப்பார்கள் என்பதை பொல்லார்ட் கணித்திருப்பார்.
இந்த ஓவரில் ஒரு ஒயிடோடு மொத்தம் 7 பந்துகளை பொல்லார்ட் வீசியிருந்தார். 7 பந்துகளும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களே. ஏற்கனவே அட்டாக் மோடில் இருந்தவர்களை இது இன்னும் அடித்து ஆடத் தூண்டியது.
அந்த ஓவரின் இரண்டாவது ஷார்ட் பிட்ச் பந்தை கெய்ல் மடக்கி அடிக்க முயல அது சரியாக மிடில் ஆகாமல் லாங் ஆனில் பவுண்டரியில் கேட்ச் ஆனார். கெய்ல் 1 ரன்னில் அவுட். அவ்வளவுதான் இந்த ஓவர் அப்படியே முடிந்துவிடும் என நினைக்கையில், போனஸாக ராகுலின் விக்கெட்டும் வீழ்ந்தது. நான்காவது பந்தில் (அதுவும் ஷார்ட் பிட்ச்தான்) உடம்புக்குள் ஷார்ட்டாக வந்த பந்தை ஃபைன் லெக்கில் மடக்கி அடிக்க முற்பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் ராகுலும் கேட்ச் ஆனார். 21 ரன்னில் ராகுலும் அவுட். ஒரே ஓவரில் பஞ்சாபின் முதுகெலும்பை பொல்லார்ட் உடைத்து போட்டார்.
இந்த ஓவரின் 6 பந்துகளுமே ஷார்ட் பிட்ச் டெலிவரிக்கள் என்பதை தாண்டி கவனிக்க வேண்டியது பொல்லார்டின் வேகமே. ராகுலை பொல்லார்ட் வீழ்த்திய பந்தின் வேகம் 111 கி.மீ மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா பந்துகளும் இந்த 110 கி.மீ வேகத்தை சுற்றித்தான் இருக்கும். இதுதான் பொல்லார்டின் வழக்கமான ஸ்டைலும் கூட! க்ரூணால் பாண்ட்யாவே இந்த வேகத்துக்கு மேல் வீசுவார்.
இந்த தாழ் வேகத்தையும் ஷார்ட் பிட்ச்சையும் பொல்லார்ட் மிக்ஸ் செய்த பாணிதான் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தது. துபாய் மிகப்பெரிய மைதானம் என்பதால் அங்கே கெய்லால் கூட இந்த ஸ்லோயர் ஒன்களை வலு கொடுத்து பவுண்டரியை தாண்ட வைக்க முடியவில்லை. வழக்கமாக, வேக/மிதவேக பந்துவீச்சாளர்கள் ஃபைன் லெக் ஃபீல்டரை வட்டத்துக்குள் வைத்து ஷார்ட் பிட்ச்களை வீசவே மாட்டார்கள். வீசும் வேகத்திற்கு எட்ஜ் வாங்கினாலே பவுண்டரி போய்விடும் என்பதால் அப்படி. ஆனால், பொல்லார்ட் ராகுலுக்கு ஃபைன் லெக் ஃபீல்டரை வைத்துதான் ஷார்ட் டெலிவரியை வீசினார். (மிதவேகம் என சொன்னாலும் அவர் க்ருணாலின் வேகத்துடன் தானே போட்டி போடுகிறார்!) அதில்தான் ராகுல் அவுட்டும் ஆனார். கொஞ்சம் வேகமாக வீசியிருந்தால் நிச்சயமாக அந்த ஷார்ட் ஃபைன் லெக் ஃபீல்டரின் தலைக்கு மேல் பவுண்டரி சென்றிருக்கும்.
இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் டி20 போட்டியில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையும் பொல்லார்ட் எட்டினார்.
ஒரே ஓவரில்தான் செய்ய வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு சாந்தமாக பவுண்டரி லைனுக்கு ஃபீல்டிங் செய்ய சென்றுவிட்டார் பொல்லார்ட். மும்பை அணிக்கு 136 ரன்களே டார்கெட். பெரிய டார்கெட் இல்லைதான். ஆனால், மும்பையின் தற்போதைய பரிதாப நிலைக்கு முன்னால் அது கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது.
ரவிபிஷ்னோய் வீசிய 4-வது ஓவரில் ரோஹித்தும் சூரியகுமார் யாதவும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகியிருந்தனர். அங்கேயே மும்பை ரசிகர்கள் சோர்ந்துவிட்டனர்.5
இனி, பொல்லார்ட் மட்டும்தான் ஒரே நம்பிக்கை என நினைத்தனர். ஆனால், சவுரப் திவாரி சைலன்ட்டாக ஒரு தரமான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார்.
சவுரப் திவாரி என்றவுடனேயே வின்டேஜ் தோனியை போன்றே அவர் கொண்டிருந்த ஹேர்ஸ்டைல் தோனியை போன்ற பாடிலாங்குவேஜ்கள் என ஒரு இடக்கை தோனியை பார்த்ததை போலவே இருக்கும். ஆனால், தோனி கடைசி நின்று பல போட்டிகளில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். சவுரப் திவாரியோ கடைசி வரை நின்று பல ஆறுதல் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். 2010 ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடியிருந்த போதும், இறுதிப்போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கடைசி வரை நின்று பெங்களூர் அணிக்கு ஆறுதல் இன்னிங்ஸை ஆடிக்கொடுத்திருந்தார். மும்பைக்கும் கிடைக்கிற ஒன்றிரண்டு வாய்ப்புகளில் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார். அதனாலயே அவரை க்ரீஸில் பார்க்கும்போது மேட்ச் அவ்வளவுதான் முடியப்போகிறது என்றே தோன்றும். அதற்கு அவர் மேல் ஒரு குறையையும் சொல்ல முடியாது. தன்னால் முடிந்ததை செய்வார். சுற்றிமுற்றி எந்த சப்போர்ட்டும் கிடைக்காது.
நேற்று அப்படியில்லை. சவுரப் திவாரி ஆறுதல் இன்னிங்ஸையெல்லாம் ஆடவில்லை. மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடியிருந்தார். தன்னால் முடிந்ததை செய்தார். அவருக்கு சப்போர்ட்டாக டிகாக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர்.
16-2 என தடுமாறிக் கொண்டிருந்த போது சவுரப் திவாரி உள்ளே வந்தார். டார்கெட் 136. அதனால் ரன்ரேட் பெரிய பிரச்னையில்லை. விக்கெட்டுகளே இங்கே பிரச்னை. குறிப்பாக, மும்பையின் மிடில் ஆர்டர் கடந்த சீசனை போல் இல்லை. இந்த சீசனில் பஞ்சாப், சன்ரைசர்ஸ் இரண்டு அணிகளுக்கு பிறகு மிடில் ஆர்டரில் குறைவான ஆவரேஜை கொண்டிருக்கும் அணியாக மும்பை மாறியிருக்கிறது. சூரியகுமார் யாதவிடம் சீரான தன்மை இல்லை. இஷான் கிஷனுக்கு மொத்தமாக சொதப்பல். ஹர்திக் பாண்டியா ஃபார்மில் இல்லாமல் இருந்தார். இதுவே மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. RCB க்கு எதிரான கடந்த போட்டியில் பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் 56 ரன்களை எடுத்திருந்தனர். ஆனால், கடைசியில் 111-க்கு ஆல் அவுட் ஆகியிருந்தனர். அந்த 111 என்ற எண்ணே மும்பையின் மிடில் ஆர்டரின் நிலைமையை குறிக்கும் குறியீடு.
இப்படியான சூழலில்தான் நேற்று மிடில் ஆர்டரை சவுரப் திவாரி தூக்கி நிறுத்தியிருந்தார். டீகாக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 106 ஸ்ட்ரைக் ரேட் தான் வைத்திருக்கிறார். மேலும் இந்த சீசனில் மட்டும் 5 முறை ஸ்பின்னர்களுக்கு எதிராக அவுட் ஆகியிருக்கிறார். டிகாக் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் தடுமாறுவார் என்பதால் ஸ்பின்னர்களின் ஓவர்களை அதிகமாக சவுரப் திவாரியே எதிர்கொண்டிருந்தார். அனுபவமிக்க இந்திய வீரராக மிடில் ஓவர்களில் ஸ்பின்னை திறம்பட எதிர்கொண்டார். ஹர்ப்ரீத் ப்ரார், ரவி பிஷ்னோய் என மற்ற பேட்ஸ்மேன்களை திணறடித்தவர்களை அசால்ட்டாக முட்டி போட்டு லெக் சைடில் சிக்சராக்கியிருந்தார்.
தனக்கடுத்து அடித்து ஆட ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது எப்படி ஒரு ஆங்கர் இன்னிங்ஸை ஆடி அவர்களின் கையில் பேட்டனை மாற்றிவிட வேண்டும் என்பதை தெளிவாக சவுரப் திவாரி செய்து காட்டினார்.
37 பந்துகளில் 45 ரன்களை அடித்திருந்தார். இப்படி நின்று மிடில் ஓவரில் 37 பந்துகளை ஆடிக்கொடுக்க ஆளில்லாமல்தான் மும்பை அணி 111 ரன்னுக்கெல்லாம் ஆல் அவுட் ஆனது. அந்த குறையை இப்போது சவுரப் திவாரி போக்கியிருக்கிறார்.
சவுரப் திவாரியின் ஆட்டத்தால் கடைசியில் ஹர்திக்கும் பொல்லார்டும் மிடில் ஓவர்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய தேவையில்லாமல் தங்கள் வேலையை மட்டும் சரியாக செய்து போட்டியை வென்று கொடுத்தனர்.
பொல்லார்டின் அந்த ஒரு ஓவரும், சவுரப் திவாரியின் இந்த பொறுப்பான மிடில் ஓவர் ஆட்டமுமே மீண்டும் மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியிருக்கிறது!
source https://sports.vikatan.com/ipl/pollard-saurabh-tiwarys-standout-performance-helps-mumbai-indians-to-back-on-winning-track
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக