சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). விசைத்தறித் தொழிலாளி. கிருஷ்ணகிரி மாவட்டம், பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் இலக்கியா (26). மேடை நடனக் கலைஞர்களுக்கு மேக்கப் செய்யும் வேலையைச் செய்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அருகே நடைபெற்ற மேடை நடன நிகழ்ச்சி ஒன்றின்போது பாலமுருகனுக்கும் இலக்கியவுக்கும் இடையே நட்பு உண்டாகியிருக்கிறது. நாளடைவில் இது காதலாக மாற, இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஏழு மாதப் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்தநிலையில், மேடை நடனக்குழுவில் வேலை செய்த இலக்கியா, அந்த நட்பு வட்டத்திலிருந்த நண்பர்களுடன் இரவு பகல் பார்க்காமல் போனில் பேசி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கணவர் பாலமுருகன், ஒருகட்டத்தில் இலக்கியாவைக் கண்டிக்க, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து குழந்தையுடன் கிருஷ்ணகிரியிலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மேலும், தன்னுடைய சாதியைச் சொல்லி கொடுமைப்படுத்துவதாகக் கணவர் பாலமுருகன் மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன், ``வழக்கை வாபஸ் வாங்கி, எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தலாம்” எனப் பேசி மனைவியை ஊருக்கு வரவைத்து குடும்பம் நடத்திவந்திருக்கிறார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவு தாண்டியும் இலக்கியா செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த பாலமுருகன், 'இந்த நேரத்துல யார்கிட்ட போன்ல பேசிக்கிட்டு இருக்கே. எவ்ளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா!' எனக் கண்டித்தாராம். பதிலுக்கு இலக்கியாவும் எகிற, இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக ஆத்திரமடைந்த இலக்கியா , சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து பாலமுருகனின் மார்பில் குத்தியிருக்கிறார். மார்பிலிருந்து ரத்தம் வழிய அலறியபடியே அங்கிருந்த தப்பி ஓடிவந்த பாலமுருகனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
Also Read: புதுச்சேரி: `இந்தாங்க சார் கத்தி..!’ - சந்தேகத்தால் மனைவியைக் கொன்று சரணடைந்த கணவர்
இதையடுத்து கொலை மிரட்டல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இலக்கியா மீது எடப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், 'குடித்துவிட்டு கணவர் என்னைக் கொடுமைப்படுத்தினார்' என இலக்கியா புகார் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் பாலமுருகன் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு இலக்கியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர். தாயுடன்தான் குழந்தை இருக்க வேண்டுமென ஏழு மாதப் பெண் குழந்தையும், இலக்கியாவுடன் சேலம் சிறையில் இருக்கிறது. செல்போன் பேச்சு கணவன், மனைவிக்கு இடையே கத்திக்குத்து அளவுக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/wife-stabbed-his-husband-in-salem-in-family-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக