புத்த மதம் போதிக்கும் பல விஷயங்களில் பொன்னான நடுவழி மிகவும் பிரசித்தி பெற்றது. இருவித எல்லைகளுக்கும் போகாமல் நடுநிலையில் பிரயாணிப்பதையே பொன்னான நடுவழி என்கிறார்கள். அப்படி ஒரு நடுவழிதான் மிட்கேப் பங்குகள். சென்ற கட்டுரையில் பார்த்த லார்ஜ் கேப் பங்குகளின் இளைய சகோதரி.
நம் போர்ட்ஃபோலியோவில் ஒரு பல்வகைப்படுத்துதலை (Diversification) கொண்டு வர மிகவும் உதவுபவை இந்த மிட்கேப் பங்குகள். லார்ஜ் கேப் பங்குகளின் ஸ்திரத்தன்மையையும், ஸ்மால் கேப் பங்குகளின் துரித வளர்ச்சியையும் ஒருங்கே தரவல்ல இவற்றின் மற்ற அம்சங்களைப் பார்ப்போம்:
துரிதமாக வளரக்கூடிய சாத்தியக்கூறு:
ஒரு காளைச் சந்தை (Bull Market) நேர்ந்தாலோ, சந்தை விரிவடைந்தாலோ அதிக நன்மை பெறுவது மிட்கேப்ஸ். நாம் பார்க்க வளரும் தாவணிப் பெண் திடீரென புடவை கட்டி வந்து நின்று அசத்துவது போல் இந்த மிட்கேப்ஸும் எதிர்பாராமல் உற்பத்தி, வரவு, லாபம் என்று எல்லாவற்றிலும் வளர்ந்து லார்ஜ் கேப்பாக மாறிவிடும் சாத்தியக்கூறு உண்டு.
குறைந்த ரிஸ்க்:
ஸ்மால் கேப் பங்குகளைவிட இவற்றில் ரிஸ்க் குறைவு. திடீரென காளைச் சந்தை, கரடிச் சந்தையாக மாறும் நேரம் பல ஸ்மால் கேப் கம்பெனிகள் காணாமல் போகும். இவை போல் அல்லாமல் மிட் கேப் கம்பெனிகள் சிறிது தள்ளாடினாலும், நிலைக்கும்.
எளிதில் பணம் திரட்டும் தகுதி:
ஸ்மால் கம்பெனிகளுக்குக் கிடைப்பதைவிட எளிதாகக் கடனும் முதலீடும் மிட்கேப் கம்பெனிகளுக்கு கிடைப்பதால், அவற்றின் வளர்ச்சி வேகமாகிறது.
பன்முகத் தன்மை
பொதுவாக மிட்கேப் பங்குகள், லார்ஜ் கேப்பை ஒரு கரையாகவும், ஸ்மால் கேப்பை மறு கரையாகவும் கொண்டு விளங்கும். இவற்றில் சில லார்ஜ் கேப்பின் ஸ்திரத்தன்மையை அதிகம் கொண்டிருக்கும்; இன்னும் சில ஸ்மால் கேப்பின் சாயல் மாறாமல் அதீத வளர்ச்சி உள்ளனவாக இருக்கும்.
Also Read: பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24
எளிதில் விலை போகும்
சந்தை என்றுமே ஏற்ற இறக்கம் நிறைந்தது. ஒரு திடீர் வீழ்ச்சி வரும்போது ஸ்மால் கேப் பங்குகள் விலை போவது கடினம். ஆனால், மிட் கேப் பங்குகள் ஏற்கெனவே பலராலும் கவனிக்கப்பட்டவை என்பதால் எளிதில் விலை போகும்.
ஆனால், எல்லா மிட் கேப் பங்குகளும் சிறந்தவை என்று கூறிவிட முடியாது. இவற்றிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை.
* மிட்கேப் பங்குகள் `வேல்யூ ட்ராப்' என்ற திரிசங்கு நிலையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. சில மிட்கேப் கம்பெனிகள் ஸ்மால் கேப் என்ற நிலையில் இருந்து முன்னேறிவிட்டாலும், குறைந்த அளவு லாபம், பற்றாக்குறையான பண வரவு போன்ற பிரச்னைகளில் சிக்கித் தத்தளிக்கின்றன. இதே நிலைமை தொடரும் பட்சத்தில் சந்தையில் இருந்து இவை காணாமல் போகும் அபாயமும் உண்டு.
* சில மிட் கேப் கம்பெனிகள் அதிக லாபம் சம்பாதித்து மதிப்பு உயர்வும் அடைகின்றன. ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்தி முன்னேற்றக்கூடிய திறமையான மேனேஜர்களோ, நிறுவனக் கட்டமைப்போ லார்ஜ் கேப் கம்பெனிகள் அளவு இந்த மிட் கேப் கம்பெனிகளில் இருப்பது கடினம்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய சில மிட் கேப் கம்பெனிகள் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார அலை உயர்வால் தாமும் ஒரு திடீர் உயர்வை சந்திக்கின்றன. அந்தப் பொருளாதார அலை உயர்வு குறையும் தருணம், தங்கள் திடீர் உயர்வைத் தக்க வைத்துக்கொள்ளும் அளவு வலிமை இந்தக் கம்பெனிகளுக்கு இல்லாமல் போகலாம்.
Also Read: முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்காத லார்ஜ்கேப் பங்குகள்; என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா? - 25
ஆனாலும் நம் போர்ட்ஃபோலியோவில் மிட் கேப் கம்பெனிகளைச் சேர்க்க முக்கியமான காரணங்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாக லார்ஜ் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை விட மிட்கேப் பங்குகள் சிறப்பாக செயல்படுகின்றன. இவற்றில் உள்ள குறைந்த ரிஸ்க்கும், அதிக லாபமும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவை பற்றிய தகவல்களும் எளிதில் கிடைக்கின்றன. நம் போர்ட்ஃபோலியோவில் சில நல்ல மிட்கேப் பங்குகளை சேர்ப்பதன் மூலம் தரத்தையும் வளர்ச்சியையும் கூட்டலாம்.
- அடுத்து திங்கள் அன்று காலை 9 மணிக்கு சந்திக்கலாம்.
source https://www.vikatan.com/business/finance/things-you-should-know-before-investing-in-mid-cap-shares
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக