செம்பவளச்சூரியன் வேகமாக வான் மீதிருந்து இறங்கிக்கொண்டிருந்தான். ஒருவழியாகப் பனிக்காலத்தின் கடைசிக் குளிரும் விடைபெற்றுக்கொண்டிருந்தது.
பாலங்களாக இறுகிக்கிடந்த நதிநீர் இளகி ஓடிக்கொண்டிருக்க, அதன் இடையறாத சலசலப்புக்கு ஒப்பாகத் தலையாட்டிக்கொண்டிருந்தன புதிதாகப் பூக்கத் தொடங்கியிருந்த சேலா மலர்கள். மென் பூங்காற்று நதி தீரமெங்கும் தவழ்ந்துகொண்டிருந்தது.
கிழக்கே சிரி முகடும், வடக்கே காயா மலையும் வரப்புகட்டிய, செழிப்பு மிகுந்த பிரதேசமது. நிலமகளின் பல நூறு முலைகளாகத் துருத்தி நின்ற ஊசிமுனை மலைகள் யாவையும் பச்சையில் கச்சையுடுத்தியிருக்க, அங்கிருந்து சரிந்து விரிந்து பசுமை போர்த்திய இடைபோல் கிடந்த நிலவெளியெங்கிலும் வெண்பனியானது மென் துகில் மேலாடைபோல நெளிந்து, பறந்து வனப்பைக் காட்டியது.
வற்றாத நக்தோங் நதிதீரம் தந்த வனப்பு அது.
கொரிய தீபகற்பம்
தமிழ் நிலத்தைப்போலவே இங்கும் `சம்ஹான்’ என்ற மூவேந்தர் அரச மரபுகள் உண்டு. முன்பு இந்த தீபகற்பத்தில் கோஜோசியோன் (பழைய ஜோசியோன்), சின் என இரு அரசுகள் இருந்தன. அவற்றுக்குள் நடந்த தாயாதிச் சண்டைகளும் சீன ஹான் அரசின் படையெடுப்பும், அவற்றை உடைத்துப்போட்டன. இதனால் வடக்கே கோஜோசியோன் பகுதியிலிருந்த குலக்குடிகளை ஒன்றிணைத்து புதிய கோகுர்யோவும், தெற்கே இருந்த சின் அரசின் அடியொற்றி - மாஹான், பியோன்ஹான், சின்ஹான் (சம்ஹான், சம் - மூன்று) என்று மும்முடி அரசுகளும் இன்னும் சிற்றரசுகள் சிலவுமென முற்றிலும் புதிய ஆட்சி நிலைகள் உருவாகத் தொடங்கின.
மஞ்சள் கடலைப் பார்த்தபடி கிடக்கும் தென்மேற்கு நிலத்தில், ஐம்பத்தி நான்கு மாநிலங்கள்கொண்ட கூட்டமைப்பு அரசாக உருவானது - மும்முடி அரசுகளில் பழைமையானதும் பெரியதுமான மாஹான் அரசு. அதன் தலைநகர் போஜி (பிற்காலத்தில் பக்ஜே). அதுபோலவே கிழக்குக் கடலை ஒட்டிய கீழ்த்திக்கு நிலத்தைத் தனதாக்கி, பன்னிரண்டு மாநிலங்களைத் தன் கீழ் கொண்டுவந்து சாரோ (பிற்காலத்தில் ஷில்லா) நகரைத் தலைமையாகக்கொண்டு சின்ஹான் அரசு பிறந்தது. இரு நிலத்து வேந்தர்களுமே ஆதிகுடியான சின்வம்சத்தின் உண்மையான வழித்தோன்றல்கள் தாமே என்று சொல்லிக்கொண்டனர்.
இனி இவ்விரண்டு தேசங்களுக்கும் இடைப்பட்ட - தென்கொரியாவின் மிக நீண்ட நதியான நக்தோங் நதியினருகே, கடலுக்கு அண்மையில் அமைந்த நிலப்பரப்பு அதாவது, பியோன்ஹான் பகுதி மட்டும் தனித்த பேரரசாக இல்லாமல் சிறு குடியரசுகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்துகொண்டிருந்தது. அவற்றுள் ஒன்றுதான் குயா. குயாவின் கீழிருந்த ஒன்பது குடிகளின் தலைவர்களும் ஒன்றுகூடிய கூட்டமைப்பாகத்தான் குயாவின் ஆட்சி இதுவரை நடந்துவந்தது. அதற்கு `காலா’ என்று சொல்லப்பட்ட பொன்கயா (ஆதி கயா)தான் தலைநகர்.
அங்கேதான் கதை தொடர்கிறது.
அன்று வசந்தவிழா.
ஆரா புதிதாக வெளுத்த `ஹன்பொக்’ அங்கியின் சுருக்கங்களை நீவிவிட்டுக்கொண்டே எதிர்த் தெரு நோக்கி நடந்தாள். விழாக்காலமென்றால் பொங்சாவும் அவளுமாகத்தான் கடைவீதியை வேடிக்கை பார்ப்பது வழக்கம். அவள் முன்வீதிக்குச்செல்லு முன்னர் ஒற்றைச்சடை அசைந்தாட ஓடி வந்து இணைந்துகொண்டாள் பொங்சா. ஆராவால் அப்படியெல்லாம் ஓட முடியாது. அப்படி ஓட வேண்டுமென்றால் முதலில் சோற்றைக் குறைக்க வேண்டும். அது அவளால் முடியாது.
தெருக்களெல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தன. வீதிகளையடைத்தபடி இருந்த அங்காடிகளில் ஆடை, அணிமணிகள், உணவுப்பண்டங்கள்... குறிப்பாக, நன்னாளைக்கொண்டாடும் விதமாக இனிப்பு கலந்த வண்ணக் கொழுக்கட்டைகள்... என்று பலவிதமான பொருள்கள் விற்பனையில் இருந்தன.
`` `சிருதொக்’ வாங்கலாமா?’’ கேட்டுக்கொண்டே அவளை மணத்தால் அழைத்த கொழுக்கட்டைகளில் சிலவற்றை வாங்கி பொங்சாவுக்கொன்றைக் கொடுத்துவிட்டு, மற்றவற்றை கைமடிப்பிலும், அதிலொன்றை வாயிலும் அதக்கிக்கொண்டு நடந்தாள் ஆரா.
புனிதமான குஜிமலைச்சாரலிலிருந்து நகர் செல்லும் வழியெங்கும் வண்ணத் தோரணங்களும் பதாகைகளும் பறந்துகொண்டிருந்தன. காலையிலிருந்தே மலைச்சிகரம் செல்லும் பாதை கலகலத்துக்கொண்டிருந்தது. சிகரத்தின் உச்சியிலிருக்கும் பழந்தெய்வ கல்திட்டை வழிபாடு முடிந்து, அரச குடும்பத்தினர் அப்போதுதான் இறங்கியிருந்தனர். அவர்களை வாழ்த்தொலிகொண்டு வரவேற்று ஆரவாரம் செய்தபடி தாமும் பழந்தெய்வ வழிபாடு செய்யும் முனைப்போடு வழிபாட்டுப் பொருள்கள், படையல் பண்டங்கள் கொண்ட காவடிகளோடும், தாமரை விளக்குகளோடும் மக்கள் ஊர்ந்து செல்வதை வழிநெடுகக் காண முடிந்தது.
``நீ மலைக்குப் போகவில்லையா?’’
``இல்லை. என்னால் மலையெல்லாம் ஏற முடியாதப்பா. அங்கே போனாலும்தான் புதிதாக என்ன நடந்துவிடப்போகிறது... எல்லாம் பார்த்த பழசுதானே... நீ ஏன் போகவில்லை?”
``எங்கே? ஒம்மா இப்போதெல்லாம் விடுவதேயில்லை. அப்புச்சி தோளிலிருந்து பார்த்த காலத்தில் கடவுள் கல்லைச் சுற்றி ஏதோ ஆடுவது மட்டும் புலப்படும். என்ன ஏதென்று புரிய முயன்ற வயதிலிருந்தே என்னை மலைக்கு அனுப்புவதில்லை.” அலுத்துக்கொண்டாள் பொங்சா. அவர்கள் பேசிக்கொண்டே அங்காடித்தெருவெல்லாம் சுற்றி முடித்து கொழுக்கட்டைகளைத் தின்று தீர்த்துவிட்டு, அரண்மனை முன் வளாகத்தில் வசந்தவிழாக் கூத்து நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திடலின் அருகே வந்திருந்தனர். ஏற்கெனவே புது மணல் பரப்பி, கூத்துமேடை தயாராக இருந்தது. அதைச் சுற்றிலும் ஊர் மக்களும் வட்டமாக அமர்ந்திருந்தனர். சாய்வதற்கு வாகாக மரத்தண்டு ஒன்றினருகே இடத்தைப் பிடித்துக்கொண்டு ஆராவும் பொங்சாவும் அமர்ந்தனர்.
ஏனென்றால், இது வசந்தவிழாக் கூத்து. போதாக்குறைக்கு அன்றைய விழவு வசந்தத்தை வரவேற்க மட்டுமல்ல என்பதால், பாட்டும், நடனமும், பாவைக்கூத்துமென வழக்கத்துக்கு அதிகமாகவே களைகட்டும். அதனால் நேரமும் பறக்கும். என்னதான் பலவிதக் கொண்டாட்டங்கள் உண்டென்றாலும் இன்றைய விழாவின் முக்கிய அம்சம் வெறியாடி குறி சொல்வதுதான்.
காலையிலேயே மற்ற குடித்தலைவர்கள் என்மரும் நிமித்திகரோடு அரண்மனைக்குள் சென்றது முதல் இளவரசருக்கு சாஜோ (ஆரூடம்) பார்த்திருப்பார்கள், அது பற்றி சிறப்பாகச் சேதி ஏதேனும் கிடைக்கலாம் என்ற பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த முறை சாமியாடி ஊருக்கு என்னென்ன சொல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாகத் தென்பட்டது மக்கள் முகத்தில். அதற்காகவே சிறு மலைக்குடிகளிலிருந்தும், மற்ற எட்டு சிற்றரசுகளிலிருந்தும்கூட மக்கள் வந்திருந்தபடியால் அன்றைக்கு திடலில் கூட்டம் அலைமோதியது.
``ஆரா அதோ வெறியாடியைப் பார்த்தாயா?” ஓரமாக அமர்ந்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தவளைக் கைகாட்டிச் சிரித்தாள் பொங்சா.
``யே! கேட்டால் கடவுளோடு பேசுகிறாள் என்பார்கள். கடவுளிடம் கேட்டுத்தானே இந்த ஆண்டு எப்படி இருக்குமென ஊருக்குச் சொல்ல வேண்டும்... கூப்பிடும்போது அவர் வராவிட்டால் என்ன செய்வது? அதுதான் தனியாகப் பேசிப் பார்க்கிறாள்போல.”
``அவள் சொன்னதுபோல நடக்கிறதா என்ன?” சிரித்தனர்.
``எல்லாம் நடிப்பு. வெறியாடி முடித்த பிறகு அவள் இளித்துக்கொண்டு பேசுவதைப் பல முறை கேட்டிருக்கிறேன். கடவுளெல்லாம் அவளோடு பேசுவதில்லை. எல்லாம் பொய். நம்புவதுபோல பொய் சொல்ல வேண்டும். அவ்வளவுதான் வேலை. ஆனால், இந்த முறை அவள் சொல்வது நடக்கவில்லையென்றால் அடுத்து அவளது மகள் குறிசொல்ல வருவாள்.”
``யார் குட்டைச் சடை அஞ்சொங்கா?’’
``அந்தக் கிறுக்கச்சிதான்.”
சற்று யோசித்துவிட்டு ``அவளுக்குச் சரியான வேலைதானே...” என்று பொங்சா சொல்லவும் இருவரும் வெடித்துச் சிரித்தனர். முன்னே அமர்ந்திருந்த கிழவி திரும்பிப் பார்த்தாள்.
``ஒமோனி (பாட்டி), முன்னே பாருங்கள்... கூத்து இங்கேயா நடக்கப்போகிறது?”
கிழவி சிரித்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள். ஆனால் கவனம் இங்கேதான் இருந்தது.
``அதென்ன பாட்டுப் பாடுகிறார்கள் மலை மேலே?”
``எது... அந்த ஆமைப் பாட்டா? வேண்டாம் கேட்காதே. சின்னப் பெண் நீ கெட்டுப்போவாய்.”
``சொல்லேன் ஆரா.”
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தலை குனிந்து பாடிக்காட்டினாள் ஆரா.
``ஆமைக்குஞ்சே... ஆமைக்குஞ்சே... தலையை நீட்டிப்பார். நீ தலையை நீட்டிப் பார்க்காவிட்டால் சுட்டுத் தின்றிடுவோம், உன்னை சுட்டுத் தின்றிடுவோம்...”
``அய்கோ! அய்கோ!” காதைப் பொத்திக்கொண்டாள் பொங்சா.
``புரிந்துவிட்டதா? பரவாயில்லையே... தேறிவிட்டாய் பொங்சா.”
``அதென்ன இவ்வளவு மோசமான பாட்டையா பாடுவார்கள்?”
``மோசமில்லையடி பெண்டுகளா, அது வளமைக்கான பாடல். ஆமை நம் குலதெய்வமில்லையா?”
``அதற்காக குஞ்சைப் பார்க்கக் கேட்பாயா ஒமோனி”
``வாயில் போடுவேன். பேச்சைப்பார். தூமைச்சிறுக்கி.” மேலங்கியால் ஒரு சாத்து சாத்தினாள் கிழவி. சிரித்தபடி வாங்கிக்கொண்டாள் ஆரா.
``ஒமோனி, ஆனால் ஆரா சொல்லும் பொருளில்தானா அந்தப் பாட்டைப் பாடுவார்கள்?”
``ஆமாமடி. ஆனால் எதற்கு? நம் குடித்தலைவன் வீட்டுத் தொட்டில் ஆட வேண்டுமென்றுதான். நம் இளவரசர் பிறந்தது கடவுள் அருளால்தான். அந்தக் கதை அறியாயோ?”
``எது... நம் தலைவர் மகன் பிறந்ததற்குக் காரணமென்று புதிதாகக் கதை ஒன்று உலாவுகிறதே?”
``கதையல்ல பிள்ளாய் கனவு. அதிலும் முது கிழவர்களுக்கு வரும் கனவு சக்தி வாய்ந்தது. ஒன்பது மூதருக்கும் ஒன்றாகக் கனவு வந்ததென்றால் பார்!”
``அய்கோ... அய்கோ... உன் வாய் ஊர் நீளத்துக்கு விரிகிறதென்று உன் ஒம்மா ஒப்பாரி வைப்பது சரியாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் பேசாமலிரு ஆரா.” வசவு முடித்து பொங்சாவைப் பார்த்துக் கதை சொல்லத் தொடங்கினாள் கிழவி.
``நம் ஒங்ஜா (இளவரசர்) பிறப்பதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னே, ஒன்பது மூதருக்கும் ஒரு கனவு வந்ததாம். அதாவது, ஒரு நாள் ஒன்பது பேரும் குஜி மலை மேல் நடுகல் வழிபாடு முடித்து அமர்ந்திருந்தார்களாம். அப்போது திடீரென்று வானிலிருந்து ஒரு குரல், `யாரங்கே! யாராவது இருக்கிறீர்களா... இது என்ன இடம்?’ என்று கேட்டதாம்.”
``ம்ம்…அப்புறம்?”
`` `இது குஜி மலைச்சிகரம்’ என்றார்களாம் பெரியவர்கள். உடனே அந்தக் குரல் இந்தப் பழைய பாடலைச் சொல்லி `இதைப் பாடி ஆடியபடி இருங்கள். உங்கள் குலம் தழைக்க, இந்த ராஜ்ஜியத்தைக் கட்டியாள தலைவன் உதிப்பான்’ என்று சொன்னதாம்.”
``ம்ம்...”
``அப்படியே அவர்கள் பாடியும் ஆடியும் கொண்டிருக்கையில் வானிலிருந்து கீழாக ஒரு சிவப்புக் கயிறு தோன்றியதாம். அதிலே ஒரு தங்கப்பெட்டி மிதந்துவந்ததாம். அதைத் திறந்து பார்த்தால் அதனுள்ளே செந்நிறப் பட்டுத்துணி சுற்றி சுத்த தங்கத்தில் முட்டை இருந்ததாம்.”
``என்னது முட்டையா... முட்டையில் இருந்து பிள்ளையா?”
``ஆமைக்குஞ்சைக்கேட்டால் முட்டைதானே கிடைக்கும்?” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, மீண்டுமொரு சாத்து வாங்கிக்கொண்டாள் ஆரா.
``அப்படிச் சொல்லக் கூடாது பெண்ணே! அது கனவல்லவா? அப்படித்தான் பூடகமாக வரும். அதன் பிறகு எண்ணி ஒன்பது மாதங்களில் நம் தலைவருக்குப் பிள்ளை பிறக்கவில்லையா?”
``ஆனால் கனவு எப்படி ஓமோனி பிள்ளை பிறக்கக் காரணமாகும்?’
``கனவுக்கு அந்த ஆற்றல் உண்டு. நினைத்த நேரத்தில் ஒரு உலகத்தையே உருவாக்கக் கடவுளுக்கும் கனவுக்கும்தான் ஆற்றல் உண்டு.”
``அப்படியென்றால் அதோ அங்கே கல்லே தெய்வமென்று அடுக்கிவைத்து வணங்குகிறோமே... அதற்கு என்ன ஆற்றல் இருக்கிறது... அதை எதற்காக வணங்க வேண்டும்... அந்தக் கல்லுக்கும் ஆற்றல் உண்டா?” தொலைவில் மூதாதையர் கல்குவியலில் தானும் சிறுகல்லைச் சேர்த்துப் பின் குனிந்து வணங்கிவிட்டு, நடப்பவர்களைக் கைகாட்டிக் கேட்டாள் ஆரா.
``உண்டு. ஆற்றல் உண்டு. ஆனால் கல்லுக்கும் கனவுக்கும் ஆற்றல் வருவது எங்கிருந்து? உன் எண்ணத்தில் இருந்துதான். கனவுக்கும் ஆற்றல் உண்டு. கல்லுக்கும் ஆற்றல் உண்டு. உன் சொல்லுக்கும் ஆற்றல் உண்டு. அதனால்தான் சொல்கிறேன். நீயும் உன் சொற்களைப் பதமாகப் பயன்படுத்த வேண்டும் ஆரா. சொல்லிலும் பெண் சொல்லுக்குப் பேராற்றல் உண்டு. அறிவாயோ?”
``அறிவேன் அறிவேன். அதோ சொல்லின் செல்வி மேடை ஏறப்போகிறாள் அங்கே பாருங்கள்.”
வெறியாட்டத்தின் தொடக்கத்தைக் காட்டும்முகமாக முழவுகள் உறும, யாழ் நரம்பதிர, குழலும் பண்ணும் கூடி இசைக்க, கூம்புத்தொப்பியும் வண்ண அங்கியுமாக, மேடையேறிச் சுழலத் தொடங்கினாள் அகவல் மகள்.
Also Read: செம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1
நெடுநேரம் கூத்து நடந்தது. இரவே வந்துவிட்டது. பொங்சாவுக்கு உறக்கமும் வரத் தொடங்கிவிட்டது. ஒருவழியாகக் குறிசொல்லும் வேளை வந்தது. பல கடவுளரை அழைத்த வெறியாடி, அந்தந்தக் கடவுளுக்கேற்ப வண்ண அங்கிகள் அணிந்து, ஆடி முடித்து, இறுதியாக மலைக்கடவுளை, அவர்களின் மூதாதையர்களுக்கான கடவுளை அழைத்துக் குறிகேட்க வந்தாள்.
ஒரு கையில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், வெள்ளை, கறுப்பு நிறத்துத் துண்டுகளைப் பிடித்துக் காற்றில் வீசிக்கொண்டு சுற்றிச்சுற்றி ஆடினாள். மருளேறிக் கண்கள் சிவக்க வெறியாட்டம் ஆடினாள். மறு கையிலிருந்து கிண்கிணியின் மணிகள் கழன்றுவிடுமாறு ஆடினாள்.
ஆட ஆட அவள் முகத்தில் சினத்தின் வெம்மை படர்வதை அச்சத்தோடு பார்க்கத் தொடங்கினர் மக்கள். இது நல்லதல்லவே.
மூதர் கூட்டணி முன்னே சென்று கேள்விகளை முன்வைத்தனர். அவள் நின்றாள். சிரித்தாள். அவள் முகத்தில் துளியும் நடிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவளது முகம்போலவே இல்லை. யாரோ, எதுவோ அவளைப் பிடித்துக்கொண்டிருந்தது. எந்தக் கடவுளோ அவள் மீதேறியிருந்தது. அந்தக் கடவுளின் முகத்தில் கருணையோ, அன்போ துளியும் இருக்கவில்லை. அருளின் பொலிவு அறவே இல்லை. அங்கே பேரிருண்மை குடிகொண்டிருந்தது. அந்தச் சிரிப்பில் குயா தேசத்தின் வருங்காலம் முழுகிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது பொங்சாவுக்கு. ஆனால், இவள்தான் போலியாயிற்றே... இவளது அருள்வாக்கை நம்பத் தேவையில்லைதானே? தனக்குத்தான் தெரியவில்லை. அந்தச் சிரிப்பின் பொருளை ஆரா அறிவாளென்று எண்ணித் திரும்பியவள் கண்ணில் வெளிறிய தோற்றத்தில் ஆரா தென்பட்டாள். ஆரா மட்டுமல்ல... அரச குடும்பத்தினர், மூதர்கள், மக்கள் என்று அனைவருமே பயத்தில் உறைந்திருந்தனர்.
காரணம், மூதர்களின் கேள்விக்கு பதிலாக வெறியாடி தூக்கிப் பிடித்த கையில் இரண்டு நிறத் துண்டுகள். ஒன்று சிவப்பு. மற்றொன்று கறுப்பு. இரண்டுமே இறப்பையும், முடிவையும், தோல்வியையும் குறிக்கும் நிறங்கள். பதிலில் திருப்தியற்றவராக மீண்டும் ஒரு மூதர் கேட்ட கேள்விகள் அமைதியாகிவிட்ட மந்தையின் மூலை முடுக்குக்கும் கேட்டது.
``எனில் பொன்கயாவின் எதிர்காலம் என்னவாவது... மூதர்களின் கனவு தந்த ஒங்ஜா சுரோவின் எதிர்காலம்தான் என்ன? நல்லது சொல் அகவல் மகளே!”
திடலெங்கும் எதிரொலித்து நடுக்கிய எக்காளச் சிரிப்போடு ஒற்றை நிறத் துண்டை உயர்த்திக் காட்டினாள் அகவல் மகள்.
கறுப்பு. காரிருள்.
(வளர்வாள்...)
Also Read: செம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1
source https://www.vikatan.com/arts/literature/historic-story-of-semba-series-part-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக