Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

505-ல் 202 ஓவர்... முதல்வர் பெருமிதமும் அதிமுக எதிர்வாதமும்!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆகின்றன. ஒருபக்கம் கொலை, கொள்ளை என சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று சொல்லப்பட்டாலும், மறுபக்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்கொள்கிறார். செப்டம்பர் 25-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ``நீங்கள் அளித்த வாக்குகளால்தான் நான் இன்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத, சொல்லாத பலவற்றையும்கூட செய்திருக்கிறோம். இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நானே அரசின் செயல்பாடுகள் குறித்து உங்களிடம் வீடியோவில் பேசுவேன். நீங்கள் உத்தரவிடுங்கள், நான் செய்து முடிக்கிறேன்” என்று நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுப் பேசினார் முதல்வர்.

செப்டம்பர் 27-ம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசும்போதும், ``கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்” என்று பெருமிதம்கொண்டார் ஸ்டாலின்.

ஓ.பி.எஸ் - ஜெயகுமார்

முதல்வர் ஸ்டாலின் வீடியோவிலும், விழாவிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்துப் பேசியதைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை, ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 70 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1,000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500, கல்வித்துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை நம்பித்தான் பொதுமக்கள் திமுக-வுக்கு வாக்களித்தனர். அதனால்தான், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

இந்த வாக்குறுதிகளில் ரூ.4,000 நிவாரணத்தொகை, உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அகவிலைப்படி ஆகியனவும் திரும்ப வழங்கப்படவில்லை. உள்ளதும் போச்சு என்ற நிலையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார் முதல்வர். ஆனால், மக்கள் எந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தார்களோ அதை நிறைவேற்றவில்லை என்பதே மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: `கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுகவினர்!’ -எடப்பாடி பழனிசாமி தாக்கு

மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருப்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதையெல்லாம் மக்கள் சாதனையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக-வில் கல்விக்கடன் ரத்து வாக்குறுதியை நம்பி பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள். இன்றைக்கு அந்தக் கடனுக்கான வட்டி அதிகரித்துக்கொண்டு செல்கிறதே தவிர அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, முதல்வர் மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுக-வுக்கு வாக்களித்தனரோ அதை நிறைவேற்ற, பெரும்பாலான மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஏழை எளிய மாணவ மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, ``நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் அறிவித்த 202 வாக்குறுதிகள் குறித்து பட்டியல் வெளியிட வேண்டும்” என்றார்.

வீடியோவில் பேசும் முதல்வர் ஸ்டாலின்

நம்மிடம் பேசிய அறிவாலய சீனியர் நிர்வாகி ஒருவர், ``ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றினார் முதல்வர். தொடர்ந்து வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, கூட்டுறவு சங்கங்களின் நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலைக்குறைப்பு, நமக்கு நாமே திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைப்பு, ஒலிம்பிக் வீரர்களுக்குப் பரிசு, வழக்குகள் வாபஸ், சி.ஏ.ஏ - வேளாண் சட்டங்களுக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானம், நீட் எதிர்ப்பு தீர்மானம், கொரோனாவில் இறந்த மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும் 25 லட்ச ரூபாய் இழப்பீடு, ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களில் அட்டை வழங்குவது, வாரிசுகள் மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை, 14 வகையான தரமான மளிகைப் பொருள்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளுக்கு அரசுக் காப்பீடு மூலம் நிதி வழங்குதல், மகப்பேறு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு, பெண்களுக்கு அரசுப் பணிகளில் 40 சதவிகித இட ஒதுக்கீடு என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதுமட்டுமின்றி, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து பயணம், கொரோனா நிவாரணம், ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலவாரியம், பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத்தொகை, கொரோனா தொற்றில் இறந்த அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு, மக்களைத் தேடி மருத்துவம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பெண் அர்ச்சகர் நியமனம், பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிப்பு... என வாக்குறுதிகளில் சொல்லாதவற்றையும் முதல்வர் செய்திருக்கிறார்” என்றார்.

சரவணன், திமுக செய்தித் தொடர்பாளர்

தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணனிடம் இது பற்றிப் பேசினோம். ``தலைவர் ஸ்டாலின் காணொலியே வெளியிட்டிருக்கிறார். அப்படியிருக்க, பட்டியல் வெளியிட வேண்டும் என ஜெயக்குமார் கேட்பது அபத்தத்திலும் அபத்தம். எந்தெந்தத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்று சொல்லி 11 நிமிடங்கள் காணொலியில் பேசியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதுபோலப் பேசவிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். முதல்வர் பேசியதற்குப் பிறகு வேறு என்ன பட்டியல் எதிர்பார்க்கிறார் ஜெயக்குமார், பொழுது போகவில்லை என பேசிக்கொண்டிருக்கிறார். ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியாமல் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். இவர் போதாதென்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ் இன்னொரு பக்கம் அறிக்கை வெளியிடுகிறார். இந்த 202 வாக்குறுதிகளுமே மக்கள் எதிர்பார்த்தவைதான் என்பதில் சந்தேகமேயில்லை!” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/out-of-505-election-promises-202-completed-says-stalin-opposition-party-slams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக