Ad

புதன், 29 செப்டம்பர், 2021

``வெங்காயத்தை உரித்தால்... அதேபோலத்தான் முதல்வர் சொல்லும் 202 திட்டங்களும்!’’ - ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்திலுள்ள 12 ஊராட்சிகளின் தேர்தல் தொடர்பான அதிமுக-வினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி, முன்னாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் உதயகுமார்

மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடப்பட்ட யதார்த்தநிலையை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 மாதாந்தர உதவித்தொகை, சமையல் காஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற தாக்கம் மக்களிடையே இருக்கிறது. 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் மத்தியில் அவர்கள் செயல்படுத்தியதற்கான எந்தப் பதிவும் காணவில்லை.

Also Read: `வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு; முதலில் உதயநிதி மீது தான் வழக்கு பதிய வேண்டும்!’ - அண்ணாமலை

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல்தான் மிச்சமாக இருக்கும்; கண்களில் கண்ணீர்வருவதைத் தவிர, உரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றுமில்லை என்பதுபோலத்தான் திமுக கூறியுள்ள 202 திட்டங்களும் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை. முந்தைய 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் மின்தடை இல்லாத அரசாக இருந்தது. தமிழகம் முழுவதும் தற்போது மின் தடை ஏற்படுகிறது. அதே போன்று சட்டம், ஒழுங்கு பெரிய சவலாக இருக்கிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியை காவல்துறையினர் கடுமையாகச் செய்துவருகின்றனர். இதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்ததால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. மக்களிடம் கேட்கும்போது திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கையை விரித்துக் காண்பிக்கும் நிலையே இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அதிமுக அரசு எடுத்த முயற்சியைத்தான் திமுக எடுத்துவருகிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/former-minister-says-cm-stated-202-projects-have-done-but-none-reached-the-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக