Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

எளிய மக்களுக்கான உண்மையான படம்! - ’’ஆண்டவன் கட்டளை’’ ரசிகர்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அரசு அலுவலகங்கள் முன் சுற்றித் திரியும் ஏஜென்டுகளை நம்பாதீங்க என்று எளிய மக்களுக்கு எடுத்து சொன்ன படம் தான் விஜய் சேதுபதி நடிப்பில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான "ஆண்டவன் கட்டளை" திரைப்படம். இந்தப் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தப் படத்தில் என்னை கவர்ந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சினை:

"வெள்ளை காரனுங்க இருந்த வரைக்கும் காந்தி உயிரோட தான் இருந்தாரு..." என்ற வசனம் மனதில் நறுக்கென பதிந்தது. அதே போல தமிழகம் வந்து தன்னுடைய குடும்பத்தை தேடும் அப்பாவி இலங்கை தமிழர் கதாபாத்திரமும் மனதை கவர்ந்தது. அந்த இலங்கை தமிழர் கதாபாத்திரம் வாய் பேச முடியாதவராக ஏமாற்ற... ஒரு கட்டத்தில் அவர் விஜய் சேதுபதியிடமும் யோகிபாபுவிடமும் சிக்கிக் கொள்கிறார். ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள் என்று இருவரும் கேட்க அவர் தன்னுடைய தாய் மொழியான இலங்கை தமிழில் தன்னுடைய பிரச்சினையை விளக்குகிறார். ஆக மொத்ததுல "தமிழ்நாட்டுல தமிழ் பேசுனா ஆகாது..." என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் மிக முக்கியமானது. இலங்கை தமிழர் பிரச்சினையை பேசிய படங்களில் மிக முக்கியமான படமாக தனித்து நிற்கிறது ஆண்டவன் கட்டளை.

ஆண்டவன் கட்டளை

வாடகை வீடு பிரச்னை:

இலங்கை தமிழர் பிரச்னையை போலவே சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காக சென்னை வந்து வாடகை வீடு தேடி அலைபவரின் பிரச்னைகளை அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம் இது. ஒரு காட்சியில் வாடகை வீட்டு ஓனரிடம் "நாங்க ஒன்னும் பிச்சைக்காரனுங்க இல்லடா..." என்று கோபப்பட்டு விஜய் சேதுபதி குண்டானை எட்டி உதைக்கும் காட்சி சென்னையில் உள்ள எளிய வர்க்க மக்களின் ஒட்டுமொத்த கோபத்தின் வெளிப்பாடு.

குறுக்கு வழிகள் தேடுபவருக்கு:

"குறுக்கு வழிகள் தான் மிக தூரமானவை... நேர்வழி எப்போதும் குறைவான தூரம் தான் இருக்கும்..." என்பதை அழுத்தமாக உணர்த்தும் படம். ஏஜென்டுகளை நம்பி நாய்படாத பாடு படும் விஜய் சேதுபதி கடைசி முயற்சியாக உயர் அதிகாரியை சந்திக்க அவர் ஒரு கையெழுத்து போட்டு "இவ்வளவு தான் மேட்டர்... இதுக்கு போயி இவ்வளவு அலைச்சல்... இவ்வளவு குழப்பம்... இவ்வளவு செலவு... " என்பதை உணர்த்துவார் அதிகாரி. அந்த காட்சியை பார்க்கும்போது விஜய் சேதுபதியை போலவே நமக்கும் இவ்வளவு சுலபமாக தீரக்கூடிய பிரச்னைகள் நம் அறியாமையால் எப்படியெல்லாம் நீள்கிறது என்ற வியப்பை உண்டாக்குகிறது.

ஆண்டவன் கட்டளை

பெண் ரிப்போர்ட்டர்:


கோ, எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களை போல பெண் ரிப்போர்ட்டரின் வாழ்வியலை சிறப்பாக பதிவு செய்த படம் இது. (இதற்குமுன் சத்யம், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் மீடியாவில் பணியாற்றும் பெண்கள் பற்றி கூறியிருந்தாலும் கோ, எட்டு தோட்டாக்கள் போன்ற படங்கள் தான் சிறப்பானவை) அரசியல்வாதியிடம் துணிச்சலாக வாதிடும் கார்மேககுழலி நம் மனதை அதிகம் கவர்கிறார். பெண் ரிப்போர்ட்டருக்கு நேரிடும் திருமண வரன் பிரச்சினையை பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் காதலை ஏற்கும் காட்சியில் பேரழகாக தெரிகிறார் கார்மேக குழலி.


எளிய மக்களுக்கான உண்மையான படம்:
பாட்டு, பைட்டு, கொஞ்சம் காமெடி இதெல்லாம் இருக்கும் கமர்சியல் சினிமா தான் எளிய மக்களுக்கான சினிமா என்று இன்றும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆண்டவன் கட்டளைமாதிரியான படங்கள் தான் எளிய மக்களுக்கான படங்கள். சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என்ற பிரிவில் தேசிய விருது பெற்றிருக்க வேண்டிய படம். சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும். அதேபோல யோகி பாபுவும் அப்பாவியாக நடித்து நம்மை கவர்ந்திருப்பார். இந்தப் படத்தில் ஏஜென்டுகளை நம்பாதீங்க என்று சொன்னதுபோல் "கடன் பிரச்சினை தாங்காமல் அந்நிய தேசம் சென்று உழைக்கும் அப்பாவி மக்களுக்கு சமர்ப்பணம்" என்றும் படத்தில் குறிப்பிட்டு இருக்கலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-aandavan-kattalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக