மும்பையின் மையப்பகுதியில் உள்ள கோரேகாவ் ஆரேகாலனி பகுதி அடர்ந்த காடுகளை கொண்டதாகும். இங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சிறுத்தைகளுக்கு மத்தியில் மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவில் பழங்குடியின மக்கள் குடில்களில் வசித்து வருகின்றனர். அதோடு தமிழர்களும் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர். அடிக்கடி இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்பவர்களை சிறுத்தைகள் தாக்குவதுண்டு.
இந்நிலையில் ஆரேகாலனி யூனிட் 3-ல் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வெளியில் ஆயுஷ் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். பக்கத்து வீட்டு வாசலில் ஆயுஷ் மாமா நின்று கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிறுவனை தனது வாயில் கவ்விக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் ஓடியது. இதனை பார்த்த சிறுவனின் மாமா வினோத் குமார், சிறிதும் தாமதிக்காமல் சிறுத்தையை விரட்டிச் சென்றார். தன்னை ஒருவர் பின்தொடர்வதை கவனித்த, சிறுத்தை சிறுவனை புதருக்குள் போட்டுவிட்டு தப்பி சென்றது. இது குறித்து வினோத் குமார் கூறுகையில், ``நான் வாசலில் நின்று கொண்டிருந்த போது விளையாடிக்கொண்டிருந்த ஆயுஷை சிறுத்தை ஒன்று தூக்கிச்சென்றது. நான் சிறுத்தையை விரட்டி சென்றேன். இதனால் பயந்து போன சிறுத்தை சிறுவனை போட்டுவிட்டு சென்றது. நான் சிறுவன் மீது படுத்து சிறுத்தையிடமிருந்து சிறுவனை காப்பாற்றினேன். சற்று தூரத்தில் சிறுத்தை நின்று எங்களை பார்த்துக்கொண்டே இருந்தது.
இதனால் மீண்டும் என்னை தாக்கிவிடுமோ என்ற அச்சம் வேறு இருந்தது. ஆனாலும் சிறுவனை காப்பாற்றவேண்டும் என்பதால் சிறுவன் மீது படுத்துக்கொண்டேன். பின்னர் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது” என்றார். ஆயுஷ் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது. டாக்டர்கள் எட்டு தையல் போட்டு சிறுவனுக்கு சிகிச்சையளித்தனர். சிறுத்தை, ஒரு மாதத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வந்து பொதுமக்களை தாக்குவது இது நான்காவது சம்பவம் ஆகும்.
Also Read: திருச்சி: இரண்டு பேரைத் தாக்கிய சிறுத்தை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறை!
இது குறித்து சிறுவனின் தாயார் ஆர்த்தி கூறுகையில், ``எனது மகன் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். தனது தம்பி சிறுத்தையை விரட்டி சென்று இருக்காவிட்டால் எனது மகனை இப்போது உயிரோடு பார்த்திருக்க முடியாது. இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு போதிய அளவு தெருவிளக்குகளை அதிகாரிகள் பொருத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ``சிறுத்தை சிறுவனை தூக்கி சென்ற இடத்தில் ஒரு தெருவிளக்கு கூட இல்லை. இரவு நேரத்தில் நாங்கள் அடர்ந்த காட்டிற்குள் இருட்டில்தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதிகாரிகளிடம் தெருவிளக்குகள் போட்டுக்கொடுக்கும் படி கேட்டுக்கொண்டும் இதுவரை எந்த பயனும் இல்லை” என்று குறைபட்டுக்கொண்டனர்.
இப்பிரச்னை குறித்து உள்ளூர் சிவசேனா எம்.எல்.ஏ.ரவீந்திர வைக்கர், வனத்துறை அதிகாரி கிரிஜா தேசாய் ஆகியோர் உள்ளூர் போலீஸாருடன் ஆலோசனை நடத்தினர். இதில் உடனடியாக குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், உள் பகுதியில் செல்லக்கூடிய சாலைகளில் தெருவிளக்குகள் பொருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் உடனே தெருவிளக்குகளை பொருத்தும் படியும், குப்பைகளை அகற்றும் படியும் உத்தரவிட்டு இருப்பதாக ரவீந்திர வைக்கர் தெரிவித்தார். குப்பைகள் அதிகமாக கூடும் இடங்களில் தெரு நாய்கள் வருகிறது. இரவு நேரங்களில் சரியான உணவு கிடைக்காத சிறுத்தைகள் தெருநாய்களை பிடிப்பதற்காக அப்பகுதிக்கு வருகிறது. ஆனால் தெரு நாய்கள் இல்லாத பட்சத்தில் இரவில் வெளியில் வரும் பொதுமக்களை சிறுத்தைகள் தாக்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/india/leopard-takes-the-boy-playing-in-mumbai-rescued-by-nephew
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக