Ad

புதன், 29 செப்டம்பர், 2021

`அடிக்க மாட்டேன் வாடா' வீடு வீடாகத் தாவிய போதை இளைஞர்; கெஞ்சிப் பிடித்த ஏட்டு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்திலுள்ள காந்தி ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. இந்த மதுக்கடைக்கு அரை டவுசர் அணிந்து அரை போதையில் வந்த இளைஞர் ஒருவர், மேலும் குடிப்பதற்காக குவார்ட்டர் கேட்டிருக்கிறார். குவார்ட்டருக்கான பணம் குறைவாக இருந்ததால், விற்பனையாளர் தர மறுத்திருக்கிறார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த இளைஞர். டாஸ்மாக் விற்பனையாளர், காவல் நிலையத்தின் தலைமைக் காவலருக்கு போன் செய்திருக்கிறார்.

இளைஞரைக் கீழே இறங்கக் கூறும் ஏட்டு

ஏட்டு பிடிக்க முயன்றபோது, அவரின் கைக்குள் சிக்காமல் எகிறிய இளைஞர், அருகிலுள்ள வீடு, கடைகள் அடங்கிய கட்டடங்களின் மேற்கூரையில் ஜம்ப் அடித்து ஏறினார். `ஷாக்’கான ஏட்டு, ``அடேய் தம்பி கீழே இறங்கி வாடா. உன்னால எனக்குத் தலைவலி மட்டுமில்லை, கால் வலியும் சேர்ந்து வந்துடுச்சு. சோதிக்காதடா. தயவு செய்து கீழே இறங்குடா. ஒண்ணும் பண்ண மாட்டேன்’’ என்று மன்றாடியிருக்கிறார்.

இளைஞரோ, மாட்டினால் கதை அவ்வளவுதான் என்று நினைத்து கட்டடம் கட்டமாக தாவிக்கொண்டே ஓடினார். ஏட்டும் கட்டடங்களுக்குக் கீழ் பொதுமக்கள் உதவியுடன் துரத்த, பெரிய களேபரம்போல் காட்சிகள் இருந்தன. ஒருகட்டத்தில், பொதுமக்களும் இளைஞரைப் பிடித்துக்கொடுக்க ஏட்டுக்கு உதவி செய்ய முன்வந்தனர். சில இளைஞர்கள் கட்டடத்தின்மீது ஏறி போதை இளைஞரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தகர ஷீட்டால் வேயப்பட்டிருந்த ஒரு கடையின் மேற்கூரையை உடைத்து தற்காத்துக்கொள்ள முடிவுசெய்தார். தகர ஷீட்டை வளைக்க முடியாததால், மீண்டும் கட்டடங்களை தாவத் தொடங்கினார் போதை இளைஞர்.

ஒருவழியாக ஏட்டுவிடம் சிக்கிய இளைஞர்

சீரியஸாக இருந்த ஏட்டு சற்று சோர்வடைந்து, ``தம்பி கீழே வாடா’’ என்று கெஞ்ச... அந்த இளைஞரோ, ‘``அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க ஏட்டய்யா... நான் எந்தத் தப்பும் பண்ணலை’ என்று கோரிக்கை விடுத்தார். ஏட்டுவும், ``அடிக்க மாட்டேனண்டா... வாடா செல்லம்’’ என்று அன்போடு அழைத்தார். அதன் பிறகு, பொதுமக்கள் சிலரின் உதவியுடன் அந்த இளைஞரை மேற்கூரையிலிருந்து படாதபாடுபட்டு கீழே இறக்கினார் ஏட்டு. ``எதுக்குடா ஓடுனே’ என்று ஏட்டு கேட்க... ``உங்களைப் பார்த்து பயந்துட்டேன்’’ என்று இளைஞர் சொல்ல... ``நீ ஓடுனதுனாலதாண்டா துரத்துனேன்’’ என்று மீண்டும் ஏட்டு கூற... ``நீங்க துரத்தினதுனாலதான் நான் ஓடுனேன்’’ என்று இளைஞரும் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து ஏட்டுவை கடுப்பேற்றிவிட்டார்.

இதையடுத்து, அந்த இளைஞரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தங்களது பாணியில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் வேலூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அவர்மீது வேறு எந்தத் தவறும் இல்லாததால் விடுவித்துவிட்டதாகவும் சொல்கிறது காவல்துறை.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-the-young-man-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக