Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

ஜெர்மனியின் உயர்ந்த மலை, சூடான உருளை சிப்ஸ்! - ஜூக் ஸ்பிட்ஸ் பயணக்கதை

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உலக வரலாற்றில் ஜெர்மனிக்கு எப்பொழுதும் உயர்ந்த இடம் உண்டு! ஜெர்மனியின்  உயர்ந்த இடத்துக்கு, அதாவது அந்நாட்டின் உயர்ந்த மலைக்கு இப்பொழுது நாம் செல்கிறோம். ஐரோப்பிய நாடுகளில் 'சம்மர்' என்றழைக்கப்படும் கோடை காலத்தைவிடவும், 'வின்டர்'என்றழைக்கப்படும் குளிர்காலமே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

'ஸ்கீ' என்ற பனிசறுக்கு விளையாட்டில், வயது வித்தியாசம், ஆண்-பெண் பேதம், இவைகளின்றி எல்லோரும் பங்கேற்று இன்பமுடன்  விளையாடுகின்றனர். அதோ தெரிவதுதான் அந்த மலை. கீழேயிருந்து மேல் நோக்கிப் பார்த்தாலே செங்குத்தான அந்த மலை நம்மை வியப்படைய வைக்கிறது. அந்த ரோப் கார் ஸ்டேஷன் கம்பீரமாக நிற்கிறது. அந்த ஸ்டேஷனிலிருந்துதான் 2962 மீட்டர் உயரமுள்ள, ஜெர்மனியிலேயே மிக உயரமான, அந்த மலையை, ஒரே மூச்சில் ஏறுகிறது அந்த ரோப் கார் - 120 பேரைச் சுமந்தபடி!

Zugspitze

இந்த ரோப் கார் தடம் ஆரம்பித்தது 1953-ஆம் ஆண்டாம்! அப்போதிலிருந்து 2017 வரை,40 பேர்கள்தான் ஒரு தடவையில்  செல்ல முடியுமாம். 2017 -ஆம் ஆண்டு அதனைப் புதுப்பித்து,120 பேரை ஏற்றிச் செல்வதாக மாற்றியுள்ளார்கள். ஒரு முறை நாம் உயரே சென்று, பின் அங்கிருந்து பனி சறுக்கு விளையாட மற்றொரு இடத்திற்கு, வேறொரு ரோப் காரில் செல்ல வேண்டும்!இரண்டுக்குமான கட்டணம் 50 யூரோ.

உயரே சென்றதும், முகட்டில் அமர்ந்து ரசிக்கவும், சாப்பிட்டு ருசிக்கவும் பெஞ்ச்களும், ரெஸ்டாரண்டும் உண்டு. பல நாட்டினரும் இங்கு வந்து பனியில் சறுக்குவதுடன், ரெஸ்டாரெண்டிலும் ஒரு கட்டு கட்டுகிறார்கள். உலக நாடுகள் அனைத்திலும் பொதுவாக உள்ள உணவு வகைகள் என்று பார்த்தால், நான் வெஜ்ஜில் சிக்கனும், வெஜ்ஜில் உருளைக் கிழங்கும் முன்னிடம் வகுக்கின்றன. பிரெஞ்ச் பிரைஸ் (French Fries) என்ற பெயரில் தரப்படும் விரல் நீள உருளைக் கிழங்கை இளஞ்சூட்டில் சாசுடன் சாப்பிடுகையில், அதிலும் அந்தக் குளிரில் சாப்பிடும் அனுபவத்தை எவ்வளவு எழுத்துக்களால் வடித்தாலும், முழுமையாக உணர்த்திட முடியாது. அனுபவித்தலே அனைத்திலும் சிறந்தது.

ஒரு சிறிய உணவகத்தில் பணிபுரியும் ஒருவர் எம்மைப் பார்த்ததும் தமிழர் என்பதையறிந்து, தமிழிலேயே சாப்பிட அழைத்தது மனதுக்கு இதமளித்தது. உலகத்தின் கூரையிலும், தமிழும், தமிழனும்  இருப்பது மகிழ்ச்சிக்கு உரியதுதானே?

Zugspitze

மேலிருந்து எங்கு நோக்கினாலும் வெண்பனியே கண்களை நிறைக்கிறது. அதிலும் சூரிய ஒளியுள்ள நாட்களில்,குடும்ப சகிதமாகப் பனியில் விளையாட வந்து விடுகிறார்கள்!-தேவையான விளையாட்டு உபகரணங்களுடன்.நாமும் வெண்பனியில் இறங்கித் தடம் பதித்தோம். ஜெர்கின்,ஸ்வெட்டர்,சட்டை,பனியன் இவற்றையும் தாண்டி உள்ளே இருந்த உடம்பில் உற்சாகம் கரை புரண்டது. புதிய பனி மெத்தை போன்றும், நாட்பட்ட பனி கண்ணாடி போலவும்  இருந்தது. ’நாட்பட்ட பனியில் நடக்கையில் மிகுந்த கவனம் தேவை. அது எளிதாக வழுக்கி விட்டு விடும்!’ என்று என் மகன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, சின்ன ஜெர்க்குடன் யாம் தப்பித்தோம்.

நாங்கள் சென்ற நாளும் 'சன்னி டே' என்பதால் அனைத்தையும் தெளிவாகக் காண முடிந்தது. இறைவன்தான் எவ்வளவு ரசனையுள்ளவன். மனிதர்கள் அனுபவிப்பதற்கென்றே எத்தனை விஷயங்களை உலகத்தில் பார்த்துப் பார்த்துச் செய்து வைத்திருக்கிறான். உயரத்தில் இருந்து பார்க்கையில், ஏரியும், வீடுகளும் மனதுக்கு ரம்மியம் அளிக்கின்றன.

சுமார் 3000 மீ உயர மலையிலுள்ள 'வியூ பாயிண்ட்'களிலிருந்து நான்கு பக்கங்களையும்  காணலாம். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மேலே உள்ள அந்த இடத்தை, ஜெர்மனியும். ஆஸ்திரியாவும் பங்கிட்டுக் கொண்டுள்ளன!முகட்டிலிருந்து, ஆஸ்திரிய நிலப் பகுதிக்கு இயக்கப்படும் ரோப் கார் தனியாக இயங்குகிறது. நாம் சென்றதோ, ஜெர்மனி பகுதியிலிருந்து!

Zugspitze

இதே ஒற்றுமையை நாமும் பாகிஸ்தானும்,சீனாவும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த மலை முகட்டிலிருந்து பார்க்கையில் உலகமே நமக்குக் கீழ்தான் தெரிகிறது! ஆம்!

நாம் நிற்பது ஜெர்மனியின் உயர்ந்த மலை முகட்டிலல்லவா?மேலிருந்து பார்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தனி அழகு வந்து விடுகிறதல்லவா? திரும்ப கீழே வரவேண்டுமென்ற எண்ணமே வரவில்லை!அவ்வளவு அழகை அந்தப் பனி மலை அடைகாத்துக் கொண்டிருக்கிறது!  

-ரெ.ஆத்மநாதன்,மெக்லீன் அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-germany-travel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக