கொரோனா வந்த பின் ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா? என் மகனுக்கு கொரோனாவுக்குப் பின் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. அது குறைய என்ன செய்ய வேண்டும்?
- சரோஜா பாலசுப்பிரமணியம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``கோவிட் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுத் திரும்பிய பலருக்கும் தொற்றுக்குப் பிறகு, ரத்த அழுத்தம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது தொற்றின் பாதிப்பால் ஏற்பட்டதா அல்லது சம்பந்தப்பட்ட நோயாளியின் வயது முதிர்வு, உடல்பருமன், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் உருவானதா என்பது தெரியவில்லை.
Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?
கொரோனா வைரஸ் ஏசிஇ 2 ஏற்பிகளில் (ACE2 Receptors) படிந்து, நம் உடலின் செல்களுக்குள் நுழைகிறது. இந்த ஏற்பிகள் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற பல உறுப்புகளிலும் இருக்கின்றன. கோவிட் தொற்றால் ரத்தத்தில் ஆஞ்சியோடென்சின் II (Angiotensin II) எனும் புரத ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இந்தச் செயல்பாட்டால் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
உங்கள் மகனின் வயது மற்றும் அவரின் ரத்த அழுத்த அளவுகளை நீங்கள் குறிப்பிடவில்லை. ரத்த அழுத்தமானது எவ்விதத் தொந்தரவுகளும் இல்லாமல்கூட தொற்றுக்கு முன்பே இருந்திருக்கலாம். தவிர தற்போது நிலவும் பெருந்தொற்றுக்கால மன அழுத்தத்தின் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்திருக்கலாம். கோவிட் தொற்றின்போது எடுத்துக்கொண்ட சில மருந்துகளின் விளைவாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே, ஒரே நாளில் பலமுறை ரத்த அழுத்த அளவை சரிபாருங்கள்.
Also Read: Covid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா?
தொடர்ந்து கண்காணித்து அது உண்மையிலேயே அதிகமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்யுங்கள். மருத்துவ ஆலோசனையின் பேரில் பாதிப்புக்கேற்ப சிகிச்சை கொடுங்கள். உங்கள் மகனை மன அழுத்தமின்றி இருக்கச் சொல்லுங்கள். உணவில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளைக் குறைக்கச் சொல்லுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். போதுமான உறக்கம் முக்கியம். உங்கள் மகனுக்கு சிகரெட் அல்லது மதுப்பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/my-bp-level-increased-after-covid-recovery-what-should-i-do
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக