Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது வலுக்காட்டாய வெளியேற்றமா? - பரவும் தகவல்களும் விளக்கங்களும்!

சென்னை அரும்பாக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் உள்ளது. இந்த நகரில் கூவம் நதிக்கரையை ஒட்டி 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடிசைப் பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றி புளியந்தோப்பில் இருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியமர்த்தும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக முறையான நோட்டீஸ் அந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, இந்தப் பகுதியிலிருந்து புளியந்தோப்பு செல்வதற்கு அரசு சார்பில் வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பூர்வக்குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருவதாக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்த்தோம்.

இடிக்கப்பட்ட வீடுகள்

என்ன பிரச்னை?

தற்போது அரசு 93 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அந்த பகுதியில் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அதில் தற்போது 100-க்கும் அதிகமான வீடுகளை காலிசெய்ய அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வீடு கிடைத்தவர்கள் அந்த இடங்களை விட்டு புதிய வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். வீடு ஒதுக்கப்படாதவர்களும் சேர்ந்து வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய இடமும் கிடைக்காது, இருக்கும் வீடும் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு அதிகாரிகள் சார்பில் எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல இடம் இல்லாது ரோட்டோரத்தில், சாலைகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். சிலர் புதிய வாடகை வீட்டிற்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏன் வீடு ஒதுக்கப்படவில்லை?

தற்போது வீடு ஒதுக்கிய அனைவருக்குமே 2014-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் கணக்கெடுக்காதவர்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில், கணக்கெடுத்தவர்களின் பெயர்களும் பட்டியலில் வரவில்லை என்று கூறுகிறார்கள் பகுதிவாசிகள். அந்த பகுதியில் இருக்கும் அனைவருக்குமே அங்குள்ள வீடுகள் சொந்த வீடுகள் கிடையாது. முன்னொரு காலத்தில் அந்த பகுதியில் வசித்தவர்கள், இப்போது அந்த வீட்டை மற்றவர்களுக்கு 1000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வாடகைக்கு விட்டுவிடு மற்ற இடங்களில் வசிப்பவர்களும் உண்டு.

அரும்பாக்கம் குடிசை பகுதி

சொந்த வீடு இருந்தவர்களில் பலருக்கும் அரசு ஒதுக்கிய வீடு கிடைத்துள்ளது. அந்த இடங்களில் வாடகைக்கு வசித்து வரும் சிலருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. இங்கு வாடகைக்கு வசிப்பவர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் தான் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாது 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியிலேயே வசித்துவரும் சில குடும்பத்தினருக்கும் கூட வீடு ஒதுக்கப்படவில்லை என்கிறார்கள். மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்க வரும்போது, வீடுகளில் இல்லாதவர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வசித்துவரும் வாசுதேவன் - மோகனவள்ளி தம்பதியரிடம் பேசினேன், ``நான் இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். 2014-ம் ஆண்டு பெயர் எடுத்துச் செல்லும் போது என் பெயர் அந்த பட்டியலிலிருந்தது. அதிகாரிகள் மீண்டும் வந்து சொல்லிய போதும் என் புகைப்படம் மற்றும் பெயர்களைக் காட்டினார்கள். ஆனால், இப்போது வீடு ஒதுக்கியதில் என் பெயர் இல்லை. பல ஆண்டுகளாக நானும் என் குடும்பமும் வாழும் வீடு இது. இதை விட்டுவிட்டு வெளியேறச் சொன்னால் நான் எங்குச் செல்வது'' என்றார்.

வாசுதேவன் - மோகனவள்ளி

தொடர்ந்து பேசியவர், ``நீண்ட காலமாக என் ரேஷன் கார்டு முதல் எல்லாமே இந்த முகவரியில்தான் இருக்கிறது. 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோதும் இந்த வீட்டில் தான் வசித்தேன். இப்போதும் அதே வீட்டில் தான் வசித்து வருகிறேன். புதிய வீடும் ஒதுக்காது, இருக்கும் வீட்டையும் காலிசெய்ய சொல்லிவிட்டனர். தினம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலைமையில் இருக்கும் நான் இப்போது எங்கு செல்வது என்று தெரியாது நிற்கிறேன். செல்ல இடமில்லாது என் மனைவி குழந்தையுடன் தவித்து வருகிறேன்" என்று கண்ணீருடன் பேசினார்.

வீடு ஒதுக்கப்படாதவர்களின் ஒருவரான அந்த பகுதியில் வசிக்கும் கல்பனாவிடம் பேசினேன், ``எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலே இந்த பகுதியில் தான் வசிக்கிறேன். இங்கு இருக்கிறதே இந்த நடுவாங்கரை பாலம், இது தரைப்பாலமாக இருந்து, மரப்பாலமாக மாறி இப்போது இந்த பாலமாக இருக்கிறது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை நான் குடும்பத்துடன் இந்த குடிசையில்தான் வசிக்கிறேன். பட்டியல் எடுக்க அதிகாரிகள் வரும்போது நான் வேளைக்குச் சென்றிருந்தேன். நேரில் சென்று கேட்டபோது திரும்ப வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அதிகாரிகள் யாரும் வரவே இல்லை. இப்போது உங்கள் பெயர் பட்டியலில் இல்லை இந்த வீட்டையும் காலிசெய்யவேண்டும் என்று வலுக்கட்டாயமாகக் கூறுகிறார்கள். நான் எங்கு செல்வது என்றே தெரியாது தவித்து நிற்கிறேன்" என்று கவலையுடன் பேசினார்.

Also Read: சென்னை: `வீடுகளை அகற்ற எதிர்ப்பு’ - கூவம் ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டம்

கல்பனா

இதுகுறித்து மாநகராட்சியில் துறைசார் அதிகாரி ஒருவரிடம் பேசினேன், ``இப்போது வீடு ஒதுக்கப்பட்டது அனைத்துமே 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பட்டியலில் அடிப்படையில் தான். மீண்டும் 2019-ம் ஆண்டு அந்த பட்டியல் அந்த பகுதிக்குச் சென்று சரிபார்க்கப்பட்டது. அப்படி எடுத்துள்ளவர்களின் பெயர்களுக்குத் தான் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அன்று பெயர்கள் கொடுத்தவர்களுக்கு எல்லாம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் எல்லாருமே அன்று காலிசெய்ய சொல்லும்போது தான் வீடுகள் தரவில்லை என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் விவரங்களைச் சரிபார்க்கவுள்ளோம்" என்று கூறினார்.

Also Read: சென்னை: `வீடுகளை அகற்ற எதிர்ப்பு’ - கூவம் ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டம்



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-chennai-arumbakkam-people-forced-eviction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக