திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் ஒன்றியத்திலிருக்கும் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஊராட்சியில் முழுக்க முழுக்க பழங்குடி (எஸ்.டி) மக்களே வசிக்கிறார்கள். ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் இருக்கின்றன. இதில், நான்கு வார்டுகள் பழங்குடியின பொதுப் பிரிவினருக்கும், ஐந்து வார்டுகள் பழங்குடியின பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, ஊராட்சித் தலைவர் பதவியை மட்டும் சம்பந்தமே இல்லாமல் பட்டியல் சமூகத்துக்கு (எஸ்.சி) ஒதுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவந்த பழங்குடியின மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவிக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி (ஆதி திராவிடர்) என்ற ஒரேயொரு பெண் மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதுவும் வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளில் தான் இந்துமதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்துமதி ஆம்பூர் பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். நாயக்கனேரி ஊராட்சியிலுள்ள காமனூர்தட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதற்கு நாயக்கனேரியில் பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கணவருடன் வந்த இந்துமதியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனினும் காவல்துறையினரின் உதவியுடன் இந்துமதி மனுத் தாக்கல் செய்துவிட்டு சென்றார். அவரின் மனுவில் வாக்காளர் அடையாள அட்டை எண் விபரங்கள் விடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக மாலை வாக்காளர் அடையாள அட்டை விபரங்களுடன் மீண்டும் மாதனூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த இந்துமதியை நாயக்கனேரி கிராம மக்கள் உள்ளே விடாமல் தடுத்துநிறுத்தினர்.
‘‘எங்கள் உரிமையைப் பறிப்பது தவறு’’ என்றுகூறி கடும் வாக்குவாதம் செய்தனர். எதிர்ப்பையும் மீறி இந்துமதி தனது கணவருடன் ஒன்றிய அலுவலகத்துக்குள் திபுதிபுவென ஓடிச்சென்று விபரங்களை தாக்கல் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால், போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டு கலைந்துச் சென்றனர். இதையடுத்து, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கிராம பஞ்சாயத்தைக்கூட்டி ஊர் மக்கள் அறிவித்துள்ளனர். இந்துமதி ஒருவர் மட்டுமே ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நிலையில் அதிலுள்ள 9 கிராம வார்டுகளுக்கும் ஒருவர்கூட போட்டியிட மனுத் தாக்கல் செய்யவில்லை. பதற்றம் நிலவுவதால் இந்துமதியின் வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து, இந்துமதியின் உறவினர்கள் கூறுகையில், ‘‘ஜனநாயக உரிமையின்படியே எங்கள் தரப்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளோம். மனுவைத் திரும்ப பெறவில்லையென்றால், ‘ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம்’ என்று ஊர் மக்கள் மிரட்டுகிறார்கள். நாயக்கனேரி ஊராட்சியில்தான் இந்துமதிக்கும் வாக்குரிமை இருக்கிறது. ஆனால், பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள் தொந்தரவு தருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.
நாயக்கனேரி கிராம மக்களிடம் பேசியபோது, ‘‘எங்கள் ஊராட்சியில் மொத்தம் 3,440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில், 2,889 வாக்குகள் எங்களுடைய பழங்குடி சமூகத்தினருடையது. மீதமுள்ள 551 வாக்குகளும் பொதுப்பிரிவினருடன் கலந்துள்ள பட்டியல் சமூகத்தினருடையது. காலம் காலமாக எஸ்.டி பிரிவிக்கு ஒதுக்கப்பட்டுவந்த இந்த ஊராட்சியைத் திடீரென எஸ்.சி பிரிவுக்கு ஒதுக்கியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துவிட்டோம். நாங்கள் யாரும் ஓட்டுப்போட போவதில்லை. பட்டியல் சமூகப் பெண்ணான இந்துமதியின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அவரை போட்டியின்றி தேர்வு செய்தாலும் கட்டாயம் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை’’ என்றனர் கொந்தளிப்புடன்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tension-continuing-in-tirupathur-district-nayakkaneri-panchayat-local-body-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக