Ad

வியாழன், 23 செப்டம்பர், 2021

JAM 2022: IIS, IIT நிறுவனங்களில் M.Sc., Ph.D படிப்பு... முதுநிலை அறிவியல் இணைச் சேர்க்கைத் தேர்வு!

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (Indian Institute of Technology) இடம் பெற்றிருக்கும் முதுநிலை அறிவியல் (M.Sc.), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல், முனைவர் பட்டப்படிப்பு (Joint M.Sc, Ph.d), முதுநிலை அறிவியல் - முதுநிலைப் பொறியியல் இரட்டைப் பட்டப்படிப்புகள் (M.Sc.-M.Tech), முதுநிலை அறிவியல், முனைவர் பட்டப்படிப்பு (M.Sc, Ph.d), மற்றும் மேல் இளநிலைப் பட்டப்படிப்புகள் (Post Bachelor degrees), இந்திய அறிவியல் நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப்படிப்புகளில் (Integrated Ph.D) சேர்க்கை பெறுவதற்கான முதுநிலை அறிவியல் இணைச் சேர்க்கைத் தேர்வு - 2022 (Joint Admission Test for M.Sc. - JAM -2022) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்கள்

இந்தியாவில் பிலாய், புபனேஸ்வர், மும்பை, டெல்லி, தான்பத், காந்திநகர், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், காரக்பூர், சென்னை, மண்டி, பாலக்காடு, பாட்னா, ரூர்கி, ரோபர், திருப்பதி, வாரணாசி என்று மொத்தம் 20 இடங்களில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institute of Technology) இருக்கின்றன. இதே போன்று, பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) எனும் உயர்கல்வி நிறுவனமும் அமைந்திருக்கிறது.

Indian Institute of Science (IISc), Bengaluru

படிப்புகள்

இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் கீழ்க்காணும் படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
  • பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் உயிரியல் (Biology), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளில் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப்படிப்புகள் (Integrated Ph.D)

  • பிலாயிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் (Chemistry), கணிதம் மற்றும் கணினியியல் (Mathematics and Computing), இயற்பியல் (Physics) ஆகிய துறைகளில் இரண்டாண்டு கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc)

Also Read: LLB Law Degree: மூன்றாண்டு கால இளநிலைச் சட்டப்படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

  • புபனேஸ்வரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வளிமண்டலம் மற்றும் பெருங்கடல் அறிவியல் (Atmosphere & Ocean Sciences), வேதியியல் (Chemistry), நிலவியல் (Geology), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான இணை முதுநிலை அறிவியல் ஆய்வுப் படிப்புகள் (Joint M.Sc-Ph.D)

  • மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு வருட கால அளவிலான பயன்பாட்டு நிலவியல் (Applied Geology), பயன்பாட்டுப் புவி இயற்பியல் (Applied Geophysics), பயன்பாட்டுப் புள்ளியியல் மற்றும் தகவலியல் (Applied Statistics and Informatics), உயிர்த்தொழில்நுட்பம் (Biotechnology), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc), ஆற்றல் (Energy), சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Science) மற்றும் செயல் உகம ஆய்வியல் (Operations Research) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (M.Sc-Ph.D) கொண்ட இரட்டைப் பட்டப்படிப்பு.

வேதியியல் (Chemistry)
  • டெல்லி, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc)

  • தான்பாத், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் மற்றும் கணினியியல் (Mathematics and Computing) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc), மூன்று வருட கால அளவிலான பயன்பாட்டு நிலவியல் (Applied Geology), பயன்பாட்டுப் நில இயற்பியல் (Applied Geophysics), தொழில்நுட்ப முதுநிலைப் பட்டப்படிப்புகள் (M.Sc.[Tech])

  • காந்திநகர், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc)

  • கவுகாத்தி, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் / கணிதம் மற்றும் கணினியியல் (Mathematics / Mathematics and Computing) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc)

  • ஐதராபாத், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் மற்றும் கணினியியல் (Mathematics and Computing) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc)

  • இந்தூர், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வானியல் (Astronomy), உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc), இப்படிப்பை இரண்டாவது பருவத்தில் சில விதிமுறைகளுக்குட்பட்டு முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கு (Joint M.Sc.,Ph.D) மாற்றிக் கொள்ளக் கூடியதான இரட்டைப் பட்டப்படிப்பு.

  • ஜோத்பூர், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் முதுநிலைப் படிப்புகள் (M.Sc), கணிதம் – தரவு மற்றும் கணக்கீட்டு அறிவியல் (Mathematics - Data & Computational Sciences), இயற்பியல் மற்றும் மூலப்பொருட்கள் பொறியியல் (Physics and Materials Engineering) ஆகிய முதுநிலை அறிவியல் – முதுநிலைப் பொறியியல் இரட்டைப் பட்டப்படிப்புகள் (M.Sc.-M.Tech)

  • கான்பூர், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் புள்ளியியல் (Statistics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc), இயற்பியல் துறையிலான முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான (M.Sc.,Ph.D) இரட்டைப் பட்டப்படிப்பு.

  • காரக்பூர், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான வேதியியல் (Chemistry), நிலவியல் (Geology), நில இயற்பியல் (Geophysics), கணிதம் (Mathematics), மருத்துவ இயற்பியல் (Medical Physics), மூலக்கூறு மருத்துவ நுண்ணுயிரியல் (Molecular Medical Microbiology), அணு மருத்துவம் (Nuclear Medicine), இயற்பியல் (Physics) துறைகளிலான முதுநிலைப் படிப்புகள் (M.Sc)

ஆய்வுப்படிப்பு
  • மாண்டி, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு வருட கால அளவிலான வேதியியல் (Chemistry), பயன்பாட்டுக் கணிதம் (Applied Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc)

  • ரூர்கி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு வருட கால அளவிலான பயன்பாட்டு நிலவியல் (Applied Geology), வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics)) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc)

  • திருப்பதி, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு வருட கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் மற்றும் புள்ளியியல் (Mathematics & Statistics) மற்றும் இயற்பியல் (Physics)) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc)

  • வாரணாசி, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டு வருட கால அளவிலான வேதியியல் (Chemistry), மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc)

  • சென்னை, பாலக்காடு, பாட்னா மற்றும் ரோபர் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் இரண்டு வருட கால அளவிலான வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளிலான முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் (M.Sc)

கல்வித்தகுதி

மேற்காணும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்குமான குறைந்தபட்சக் கல்வித்தகுதி குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாக தரப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் நிலையில் இளநிலைப் பட்டப்படிப்பில் மொழியியல் மற்றும் துணைப்பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களிலும் பொது, இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் 55% மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் தரக்குறியீட்டில் (Grade) இருப்பின் மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான தரத்தில் இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்குப் பின்பு 30-9-2022 அன்று உரிய தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு படிப்புக்குமான இட ஒதுக்கீட்டு விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இணைச் சேர்க்கைத் தேர்வு

மேற்காணும் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு நடத்தப்படும் இணை சேர்க்கைத் தேர்வு (JAM 2022) தேர்வு இணைய வழியில் 1. உயிரியல் அறிவியல் (Biological Sciences), 2. உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology), 3. வேதியியல் (Chemistry), 4. நிலவியல் (Geology), 5. கணிதம் (Mathematics) 6. கணிதப் புள்ளியியல் (Mathematical Statistics), 7. இயற்பியல் (Physics) எனும் ஏழு பாடப்பிரிவுகளில் (தாள்களில்) நடத்தப்படுகிறது. விண்ணப்பத்தில் எழுதவிருக்கும் பாடப்பிரிவு (தாள்) குறித்து குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் இரு பாடப்பிரிவுகளுக்குத் தேர்வு எழுத முடியும்.

ஆண்டுதோறும் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வரும் இத்தேர்வில், 2022-ம் ஆண்டுக்கான தேர்வினை உத்தரகாண்ட் மாநிலத்திலிருக்கும் ரூர்கி, இந்தியத் தொழில்நுட்பக்கழகம் நடத்துகிறது.

ஆய்வுப்படிப்பு

விண்ணப்பம்

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் JAM 2022 இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் (Information Brochure) தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்து, தெளிவாகத் தெரிந்து கொண்டு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு பாடப்பிரிவுக்கு (தாளுக்கு) பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ.1500/-, எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750/- என்றும், இரு பாடப்பிரிவுகளுக்கு (தாள்களுக்கு) பொது மற்றும் இதர பிற்பட்ட வகுப்புப் பிரிவினர் ரூ.2100/-, எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.1500/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தினை மின்பரிமாற்ற முறையில் (Online Transaction) செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11-10-2021.

அனுமதிச் சீட்டு

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் JAM 2022 இணையதளத்திலிருந்து 4-1-2022 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கான அனுமதி அட்டை தபால் வழியாகவோ, வேறு வழிகளிலோ அனுப்பி வைக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு நாள்

இணைய வழியிலான கணினித் தேர்வு முறையில் நடத்தப்பெறும் இத்தேர்வுக்கு பெங்களூர், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கி என்று எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மண்டலத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி என்று 6 தேர்வு மையங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் இருக்கிறது.

தேர்வு முடிவுகள் | JAM 2022

அனைத்துத் தேர்வு மையங்களிலும் 13-2-2022 அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையில் உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology), கணிதப் புள்ளியியல் (Mathematical Statistics) மற்றும் இயற்பியல் (Physics) பிரிவுகளுக்கும், மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology), வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), நிலவியல் (Geology) மற்றும் கணிதம் (Mathematics) பிரிவுகளுக்கும் தேர்வுகள் நடைபெறும்.

இத்தேர்வானது முற்றிலும் கொள்குறி வகைத் தேர்வாக (Objective Type Test) அமைந்திருக்கும். இத்தேர்வுக்கான வினாக்கள் பன்முகத் தெரிவு வினாக்கள் (Multiple Choice Questions - MCQ), பல்முனைத் தேர்வு வினாக்கள் (Multiple Select Questions - MSQ), எண் பதில் வகை (Numerical Answer Type - NAT) எனும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள் மேற்காணும் இணையதளத்தில் 22-3-2022 அன்று வெளியிடப்படும். அதே நாளில் அகில இந்திய அளவிலான தரப்பட்டியலும் வெளியிடப்படும். தேர்வுக்கான மதிப்பெண் அட்டையினை 1-4-2022 முதல் 31-7-2022 வரை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Also Read: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர் சேர்க்கை

இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (Indian Institute of Technology) இடம் பெற்றிருக்கும் மேற்படிப்புகளில் சேர்க்கைக்கு மேற்காணும் தரப்பட்டியலில் இடம் பெற்றவர்கள், இணையதளம் வழியாக 11-4-2022 முதல் 25-4-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

இணை சேர்க்கைத் தேர்வு (JAM 2022) மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும். இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வாரியாக, மாணவர் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 1-6-2022 அன்று வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் தொடர்புடைய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.10000/- எஸ்சி. எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.5000/- முன்பணமாகச் செலுத்தித் தங்களது சேர்க்கையை உறுதிப்படுத்திட வேண்டும்.

ஆய்வுப்படிப்பு

இதில் சேர்க்கை பெறாமல் காலியாகும் இடங்களுக்கு இரண்டாவது மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 16-6-2022 அன்று வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் தங்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த மேற்காணும் முன்பணத்தைச் செலுத்திட வேண்டும். இதிலும் காலியிடங்கள் ஏற்படும் நிலையில், அதற்கான மூன்றாவது மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் 25-6-2022 அன்று வெளியிடப்படும். அதன் பின்பும், காலியிடங்கள் இருப்பின் நான்காவது பட்டியல் 5-7-2022 அன்று வெளியிடப்படும். நான்காவது பட்டியலே இறுதிப்பட்டியலாகும். மாணவர் சேர்க்கை நிறைவு செய்யப்பட்ட பின்பு, வகுப்புகள் தொடங்கும்.

கூடுதல் தகவல்கள்

இத்தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus), தேர்வு தொடர்பான தகவல்கள் (Examination Related Information), இட ஒதுக்கீட்டுத் தகவல்கள் போன்ற மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் JAM 2022-க்கான இந்த இணையதளத்தினைப் பார்க்கலாம் அல்லது திங்கள் முதல் வெள்ளி வரையிலான அலுவலக நாள்களில், 01332 – 284531 எனும் உதவித் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம்.



source https://www.vikatan.com/news/education/jam-2022-exam-date-other-details-and-a-complete-guide-on-how-to-apply-for-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக