Ad

வியாழன், 23 செப்டம்பர், 2021

அஸ்ஸாம்: நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோதல்; காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

அஸ்ஸாம் மாநிலம், தர்ராங் மாவட்டம், தோல்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட கோருகுட்டி கிராமத்தில் சிவன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் அத்துமீறிக் குடியிருப்பதாகக் கூறி, அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அண்மையில் அங்கு வசிப்பவர்களை வெளியேற்றி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்குமாறு நேரில் ஆய்வு செய்து விட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேற்கொண்டு, மீட்கப்படும் நிலம் வேளாண்துறையின் புதிய திட்டத்திற்கு ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கோருகுட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, தர்ராங் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியது. அதையடுத்து, அந்த பகுதியிலேயே தாங்கள் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருவதால், தங்களால் அங்கிருந்து வெளியேற முடியாது என்று கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அத்திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், மாநில முதல்வரின் நேரடி உத்தரவு என்பதால் வருவாய்த் துறை அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதில் மிகவும் உறுதியாக இருந்தது. ஜூன் மாத இறுதி முதலே தொடர்ந்து பல கட்டங்களாக மக்களை வெளியேறி நிலத்தை கையகப்படுத்தி வந்தது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

இந்நிலையில், அஸ்ஸாம் அரசு கோருகுட்டி கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று தனது ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. அதன் விளைவாக, அங்கு காலம்காலமாக வசித்து வந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களை மாவட்ட அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி 4,500 பிகா'ஸ் நிலங்களைக் கையகப்படுத்தினர். 900 சதுர அடி ஒரு பிகா என்று கணக்கிடப்படுகிறது. கோருகுட்டி கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் இந்துக்கள் என்றும் கூறப்படுகிறது. திங்கள் முதல் தீவிரமாக நடைபெற்று வரும் நில கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோருகுட்டி கிராம மக்கள் அனைவரும் அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: அஸ்ஸாம்-மிசோரம் எல்லை மோதல் - பிரச்னை... பின்னணி... தீர்வு?

இந்நிலையில், நேற்று மீதமிருக்கும் வீடுகளை இடித்து அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன கோஷங்களை எழுப்பித் தடுத்த மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காகக் காவலர்கள் கண்ணீர் குண்டுகளை வீசினார்கள். அதில், அங்கிருந்து கலைந்தோடியவர்கள் காவலர்கள் மீது கற்களை வீசியதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவலர்களுக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. அதில், தடியடி நடத்திய காவலர்கள் திடீரென உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் துப்பாக்கிகளைக் கையிலெடுத்தனர். வானத்தை நோக்கி குண்டுகளைச் செலுத்தி மக்களை எச்சரித்தவர்கள், யாரும் எதிர்பாராத நேரத்தில் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கி தாக்குதல் தொடுத்தனர்.

காவலர்கள் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதைச் சம்பவ இடத்திலிருந்த செய்தி புகைப்பட கலைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, மாவட்ட நிர்வாகம் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் தாக்கியதில் 9 காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் கள நிலவரம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது.

ஆனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஷாந்த பிஸ்வா சர்மா இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், "9 காவலர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். பொதுமக்கள் 2 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது கிராமத்தில் நிலைமை சீராக இருக்கிறது. மக்கள் போராட்டத்தால் நாங்கள் தற்போது பின்வாங்குகிறோம். ஆனால், மீண்டும் எங்களின் ஆக்கிரமிப்பு அகற்றப் பணி தொடரும்" என்று கூறியிருக்கிறார்.

அதே போல், தொடர்பாக பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, "காவல்துறையினர் அவர்களுக்கு அரசு ஆணையிட்ட பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மக்கள் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு முதலில் தாக்கியிருக்கின்றனர். அதற்கு பிறகே, காவலர்கள் துப்பாக்கிகளைக் கையிலெடுத்திருக்கின்றனர். எனவே, ஆக்கிரமிப்பு அகற்றப் பணி தொடர்ந்து நடைபெறும்" என்று கூறியிருக்கிறார்.

Also Read: துப்பாக்கிச்சூடு விவகாரம்: அஸ்ஸாம் முதல்வர்மீது வழக்கு தொடர்ந்த மிசோரம்!

காவலர்களின் தாக்குதலில் மக்கள் 2 பேர் உயிரிழந்துள்ள போதிலும் கூட, அவர்களின் மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் காவல்துறையினரின் தாக்குதலை முதல்வர் ஹிமந்தா நியாயப்படுத்தியிருப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாஜக தலைமையிலான அஸ்ஸாம் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "அஸ்ஸாம் அரசின் ஆதரவுடன் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. மாநிலத்தில் உள்ள எங்களது சகோதர, சகோதரிகளுக்கு எப்போதும் நாங்கள் துணையாக இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

அஸ்ஸாம் அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அஸ்ஸாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபேன் குமார் போரா, "கொரோனா பரவல் மிகுதியாக உள்ள நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அஸ்ஸாம் அரசு இந்த இக்கட்டான சூழலில், 1970-களிலிருந்து அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களை அடாவடியாக வெளியேற்றியிருப்பது மனிதாபிமானமற்ற செயல்" என்று கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "அஸ்ஸாம் அரசு கோருகுட்டி கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து வெளியேறக் கூறிய போது, மக்கள் மாற்று இடம் வழங்கினால் நாங்கள் வெளியேறுகிறோம் என்று தான் சொன்னார்கள். ஆனால் அரசோ, மாற்று இடம் கூட அவர்களுக்கு ஒதுக்கித் தராமல் அங்கிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கமே இன்று 2 உயிர்களைக் காவு வாங்கியிருப்பது அதிகார போதையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்" என்று அஸ்ஸாம் அரசைக் கடுமையாக விமர்சித்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/two-killed-several-injured-in-assam-during-the-clash-between-police-and-public

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக