புனேயைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்துக்காகத் தனது பெயரை திருமண மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்திருந்தார். சென்னையைச் சேர்ந்த பிரேம் ராஜ் தேவராஜ் (32) என்பவர், அந்தப் பெண்ணின் விவரங்களைப் பார்த்துவிட்டு போனில் தொடர்புகொண்டு பேசினார்.
அவர்கள் இருவரும் போனில் அடிக்கடி பேசியிருக்கின்றனர். சில மாதங்களில் அந்தப் பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகையில், ``என்னிடம் திருமண ஆவணங்களில் பிரேம் ராஜ் கையெழுத்து வாங்கிச் சென்றதோடு திருமணச் சான்றையும் கொடுத்தார். திருமணச் சான்றைக் காட்டிய சில நாள்களில் கொரோனாவால் தனது தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது எனக் கூறி என்னிடம் 11 லட்சம் ரூபாயை வாங்கினார். நானும் வங்கியில் கடன் வாங்கி இந்தப் பணத்தைக் கொடுத்தேன். ஆனால், நாங்கள் பேச ஆரம்பித்த ஒன்றரை ஆண்டில் பிரேம் ராஜிடம் எனது பெற்றோரை வந்து பார்க்கும்படி பல முறை கேட்டுக்கொண்டேன். ஆனால், பிரேம்ராஜ் எனது பெற்றோரை வந்து பார்க்கவில்லை. அதன் பிறகுதான் அவர்மீது சந்தேகம் வர ஆரம்பித்தது. தற்போது தொடர்பைத் துண்டித்துவிட்டார்’’ என்று அந்தப் பெண் தெரிவித்தார். அந்தப் பெண் புனே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரேம் ராஜுவைக் கைதுசெய்துள்ளனர்.
Also Read: மும்பை: மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் வலை... 12 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்! சிக்கிய இன்ஜினீயர்!
இது குறித்து புனே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் கமிஷனர் கிருஷ்ண பிரகாஷ் அளித்த பேட்டியில், ``30 வயதுக்கு மேற்பட்ட படித்த பெண்கள், விதவைகள், பணக்காரப் பெண்கள், விவாகரத்தான பெண்களின் விவரங்களை திருமண தகவல் மேட்ரிமோனியல் இணையதளத்தில் எடுத்து, அவர்களிடம் பேசித் திருமணம் செய்துகொள்வதாக அந்த இளைஞர் ஆரம்பத்தில் கூறுவார். நன்றாகப் பழகிய பிறகு திருமண நிச்சயதார்த்தமும் செய்துகொள்வார். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பிறகு, தனக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிடுவார். புனே உட்பட நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார். புனேயில் பணத்தை இழந்த இரு பெண்கள் புகார் செய்துள்ளனர். பிரேம் ராஜ் போன் விவரங்களைப் பார்த்தபோது அதிக அளவில் பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர். ஆனால், அவர்கள் புகார் செய்ய வர மறுக்கின்றனர். இதுவரை 50 பெண்களை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணிடம் மட்டும் 98 லட்சம் ரூபாயை மோசடி செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-man-arrested-in-pune-for-cheating-to-marry-50-women
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக