Ad

வியாழன், 23 செப்டம்பர், 2021

புதிரான புதின்; `தில்' வெற்றியா, `தில்லு முல்லு' வெற்றியா? - ரஷ்யா நாடாளுமன்றத் தேர்தல் சம்பவங்கள்!

ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றிபெற்றிருப்பதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் எக்கச்சக்க முறைகேடுகளில் ஈடுபட்டுத்தான் புதினின் கட்சி இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடந்த சம்பவங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்..!
ரஷ்யா அதிபர் புதின்

நாடாளுமன்றத் தேர்தல் முறை!

ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் இருக்கின்றன. ரஷ்யாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். கீழவையிலுள்ள 450 இடங்களில் 225 இடங்களுக்கு நேரடி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வாக்குச் சீட்டு முறைப்படி இந்தத் தேர்தல் நடைபெறும். மீதமுள்ள 225 இடங்களுக்குக் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலவையிலுள்ள 170 இடங்களுக்குக் கட்சிகள் கைப்பற்றியிருக்கும் மாகாணங்களின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிபர் தேர்தல்!

நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்றுக் கொண்டிருந்த ரஷ்யா அதிபர் தேர்தல், 2012-ம் ஆண்டிலிருந்து 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில், மக்கள் நேரடியாக வாக்களித்து அதிபரைத் தேர்ந்தெடுக்கலாம். ரஷ்யாவில் பிரதமரைவிட அதிபரே சக்திவாய்ந்தவராக திகழ்கிறார்!

அதிபராக புதின்!

1999 ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக ரஷ்யப் பிரதமரானார் புதின். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் தனது பதவியை ராஜினாமா செய்ய, சில காலத்துக்குத் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் புதின். தொடர்ந்து 2000-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, ரஷ்ய அதிபரானார் அவர். அந்தக் காலகட்டத்தில் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அதிபர் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தொடர்ந்து, 2004-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் புதினே வெற்றிபெற்றார். ரஷ்ய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். எனவே, 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரஷ்யாவின் பிரதமராக இருந்துவிட்டு, மீண்டும் 2012-ல் ரஷ்ய அதிபரானார் புதின். இவர் பிரதமராக இருந்தபோதுகூட ரஷ்யாவின் முழுக் கட்டுப்பாட்டையும் இவரே வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது ரஷ்ய அதிபராக இருந்த டிமிட்ரி மெத்வதேவ், புதினின் கட்டளைகளுக்கு இணங்கவே செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

புதின் - மெத்வதேவ்

Also Read: `ரஷ்யாவின் நிரந்தர அதிபர் ஆகிறாரா புதின்?!' -பிரதமர் மெட்வதேவ் ராஜினாமா பின்னணி

2012 அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, 2018 அதிபர் தேர்தலிலும் புதினே வெற்றிபெற்றார். அந்தத் தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என பல்வேறு விஷயங்களில் முறைகேடு செய்துதான் புதின் வெற்றிபெற்றார் என ரஷ்ய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. முறைகேடுகள் தொடர்பான சில வீடியோ ஆதாரங்களும் வெளியாகின. இருந்தும், அதையெல்லாம் மீறி அதிபர் அரியணை ஏறினார் விளாடிமிர் புதின்.

2024 அதிபர் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட ரஷ்ய அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்காததால், அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்தார் புதின். 2020-ம் ஆண்டு இதுதொடர்பான அறிவிப்புகளை நாடாளுமன்றத்தில் புதின் வெளியிட, பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

2020 ஜூலை மாதத்தில், `2036 வரை புதினே ரஷ்ய அதிபராக இருக்கலாம்' என்கிற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஒருவார கால வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 77.9% மக்கள், புதின் 2036 வரை அதிபராக இருக்கலாம் என வாக்களித்திருந்தனர். இந்த வாக்கெடுப்பு போலியானது என எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டங்களில் குவிந்தன. எதிர்ப்புகளை மீறி அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டார் புதின். புதினின் பதவி நீட்டிப்புச் சட்டத்தை அமல்படுத்த, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இப்போது நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

புதின்

2021 நாடாளுமன்றத் தேர்தல்!

செப்டம்பர் 17,18,19 ஆகிய மூன்று நாள்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை 99 சதவிகித வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆன்லைன் வாக்குகள், தபால் வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில், சுமார் 49.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி. கம்யூனிஸ்ட் கட்சிக்கு 18.9 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 225 இடங்களில் 198 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது ஐக்கிய ரஷ்யா கட்சி. இதன்படி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ஐக்கிய ரஷ்யா கட்சியினருக்கே கிடைக்கும். இதனால், 2036 வரை தானே அதிபராக இருக்க வேண்டும் என்கிற புதினின் கனவு கிட்டத்தட்ட சாத்தியமாகியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மீதான வேதிப்பொருள் தாக்குதல்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி, தொடர்ச்சியாக அதிபர் புதினைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். அவரோடு இணைந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் புதினுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். புதின் செய்யும் தில்லு முல்லு வேலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்கான பல்வேறு ஆதாரங்களையும் நவால்னி வெளியிட்டுவந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் டாம்ஸ்க் (Tomsk) நகரிலிருந்து மாஸ்கோ நகருக்கு விமானம் மூலம் வந்துகொண்டிருந்தார் நவால்னி. அப்போது திடீரென கடுமையாக நோய்வாய்ப்பட்டு மயங்கிவிழுந்தார். விமானம் தரையிறங்கியதும் நவால்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த நோவிசோக் வேதிப்பொருள் தாக்குதலுக்கு அவர் உள்ளானது கண்டறியப்பட்டது. சிகிச்சையின்போது கோமாவுக்குச் சென்ற நவால்னி 2020 செப்டம்பர் மாதத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினார். தொடர்ந்து இதற்கான சிகிச்சைகளைப் பெற்றுவந்தார் அவர்.

அலெக்சி நவால்னி

இந்த விவகாரத்தில், ``டாமஸ்க் நகரிலுள்ள உணவகத்தில் யாரோ வேண்டுமென்றே நவால்னி சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருக்கிறார்கள். அதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்'' எனப் பல தரப்பட்டவர்களும் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்தது அரசு. இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஆட்சியாளர்கள்தான் இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர் நவால்னியின் ஆதரவாளர்கள்.

இந்தநிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பண மோசடி வழக்கில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது மாஸ்கோ நீதிமன்றம். இதன் காரணமாகக் கைது செய்யப்பட்டார் நவால்னி. `அதிபர் புதினை எதிர்த்த காரணத்தால்தான் நவால்னி கைது செய்யப்பட்டிருக்கிறார்' என அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதே காரணத்தைச் சொல்லி நவால்னியின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகத் தாக்கிய ரஷ்யக் காவல்துறை, பலரையும் கைது செய்தது.

`தில்லு முல்லு' வெற்றி?

புதினின் நடவடிக்கைகள் குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சிலர், ``நவால்னியை கைது செய்தது, அவரது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தது எனத் தேர்தலுக்கு முன்பே ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றிபெறுவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார் புதின். வாக்குப்பதிவு நேரத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில், தேர்தல் அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையின்போதும் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.

ரஷ்ய அதிபர் புதின்

Also Read: 2020 Rewind: வெளியேறிய இளவரசர்; கிம் ஜாங் உன் வதந்தி; அதிரடி புதின் - உலகை அதிரவைத்த சம்பவங்கள்!

2036 வரை தானே அதிபராக இருக்க வேண்டுமென்பதற்காக புதின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார். உள்ளூர் எதிர்க்கட்சிகளால் புதினை ஓரளவுக்குத்தான் எதிர்க்க முடிகிறது. அந்த அளவுக்கு மொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அவர்'' என்கிறார்கள்.

``இந்த விவகாரங்களில் உலக நாடுகள் தலையிட்டு, தீர்வு காண உதவ வேண்டும்'' என்பதே புதினுக்கு எதிராக நிற்பவர்களின் கோரிக்கையாக இருக்கிறது!



source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-2021-russia-legislative-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக