தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்புவிழா ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுவருகின்றன. இத்தகைய சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன என்றும், இப்போது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது வரலாற்றை மாற்றும் செயல் என்றும் ஒரு குற்றச்சாட்டை அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிளப்பியிருக்கிறார். அவர் முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, முன்னாள் சபாநாயகரும்கூட. ஜெயக்குமார் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஜெயக்குமார் சில கேள்விகளையும் வாதங்களையும் எழுப்புகிறார். ``தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1937-ம் ஆண்டு நடைபெற்றது. சட்டமன்ற பொன்விழா கொண்டாடவிருந்த நேரத்தில், அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே, அப்போது அந்த விழாவை நடத்த முடியவில்லை. இந்த நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அப்போது, இரண்டு வருடங்கள் கழித்து 1989-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. 1937-ம் ஆண்டை கணக்கிட்டுத்தான், அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் பொன்விழா கொண்டாடப்பட்டது” என்கிறார் ஜெயக்குமார்.
அப்படிப் பார்த்தால் 2037-ல்தான் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. எனவே, தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் முரண்பாடு இருக்கிறது என்பது ஜெயக்குமாரின் வாதம். அது என்ன முரண்பாடு?
``1937-ம் ஆண்டைக் கணக்கில்கொள்ளாமல், 1921-ம் ஆண்டின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார். அப்படியென்றால், 1937-ம் ஆண்டை கணக்கிட்டு கருணாநிதி பொன்விழா எடுத்தது தவறா?” என்று கேள்வியெழுப்பும் ஜெயக்குமார், ``சட்டமன்றத்தில் கருணாநிதி படத்தைத் திறக்கட்டும். இது அவர்களின் கட்சியும் ஆட்சியும் எடுக்கும் முடிவு. அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், விழா கொண்டாடும் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்றி எழுதக் கூடாது. நூற்றாண்டு விழா கொண்டாட இன்னும் பல ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஏன் இந்த அவசரம்? வரலாற்றை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவதை ஏற்க முடியாது” என்கிறார்.
இன்னொரு லாஜிக்கையும் ஜெயக்குமார் முன்வைக்கிறார். `1937-ம்கூட கணக்கிடக் கூடாது, 1952-ம் ஆண்டைத்தான் கணக்கில் எடுக்க வேண்டும்’ என்கிறார். அதாவது,1937-ம் ஆண்டு சட்டமன்றம் கூடியபோது ஓட்டுரிமை என்பது அனைத்து மக்களுக்கும் கிடையாது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகுதான் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. எனவே, அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் 1952-ம் ஆண்டு கூடியது. எனவே, ஜனநாயக முறைப்படி, 1952-ம் ஆண்டைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஜெயக்குமாரின் வாதம்.
விழா கொண்டாட்டத்துக்கான வரலாற்றை தி.மு-க மறைக்கிறது என்ற விமர்சனத்துக்கு தி.மு.க தரப்பிலிருந்து பலரும் பதில் தந்துகொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமார் கேள்வி எழுப்பியது முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, ``சபாநாயகராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது” என்று பதிலடியாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
``1919-ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அன்றைய மாகாண சட்டமன்றங்களில் முதன்முதலாக இடம்பெறத் தொடங்கினர். சென்னை மாகாண மன்றத்துக்கு 1920-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில், நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி, சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது. 1921-ம் ஆண்டு, ஜனவரி 12-ம் தேதி கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது. பனகல் ராஜா, டாக்டர் பி.சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி.ராசன், குர்மா வெங்கடரெட்டி நாயுடு என நீதிக்கட்சியின் முதல் அமைச்சர்கள் 17 ஆண்டுக்காலம் பதவிவகித்தார்கள்.
டாக்டர் பி.சுப்பராயன் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை அமல்படுத்தப்பட்டது. எனவேதான், டாக்டர் பி.சுப்பராயனின் உருவப்படம் சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. பின்னர் 23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓ.பி.ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே, அவருடைய உருவப்படமும் சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட சட்டமன்ற வரலாறு 1921-ம் ஆண்டே தொடங்கிவிட்டது.
ஜெயக்குமார், தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தவர். சட்டப்பேரவைக்கும், சட்டமன்றப்பேரவைக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 1937-ம் ஆண்டில் மதராஸ் மாகாண சட்டமன்றம், சட்டமன்ற மேலவையாகவும், வாக்குரிமை பெற்ற வயது வந்த அனைத்து மக்களாலும் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக்கொண்ட சட்டப்பேரவையாகவும் செயல்படும் முறை பிறந்தது. அதன் அடிப்படையில், 1989-ம் ஆண்டில் சட்டசபையின் பொன்விழா கொண்டாடப்பட்டது.
1997-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற பவளவிழா மற்றும் சட்டமன்றப் பேரவை வைரவிழா கருணாநிதியால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. `விழா கொண்டாடும் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்றி எழுதக் கூடாது’ என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் ஜனாதிபதியும் கவர்னரும் பங்கு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் எ.வ.வேலு.
Also Read: நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மம்தா?! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரிக்குமா?
இந்தச் சர்ச்சை குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ``இந்த விஷயத்தைச் சாதாரண மக்கள் புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும், இதைத் தெளிவுபடுத்த முடியும். 1921-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் அமைந்தது. அது நீதிக்கட்சி தலைமையிலான ஆட்சி. அந்தச் சட்டமன்றத்தைக் கணக்கில்கொண்டுதான் தமிழ்நாடு அரசு 2021-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
நீதிக்கட்சி ஆட்சிக்குப் பிறகு, ராஜாஜி தலைமையிலான சட்டமன்றம் அமைந்தது. அப்போது,1937-ல் சட்டமன்றம் என்பது மேலவையுடன் கூடியதாக அமைந்தது. அப்போதுதான், முதன்முறையாக மேலவை, கீழவை என்று அமைக்கப்பட்டன. கீழவை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்டது. மேலவை என்பது பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக்கொண்டது. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல.
மேலவை, கீழவை என்ற இரண்டு அவைகளைக்கொண்ட முதல் சட்டமன்றம் 1937-ல் அமைந்தது என்பதால், அதன் பொன்விழா 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டாடப்பட்டது. 1921-ல் அமைந்த முதல் சட்டமன்றத்துக்கும், 1937-ல் அமைந்த மேலவையுடன் கூடிய சட்டமன்றத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். 1921-ல் அமைந்த முதல் சட்டமன்றத்தைக் கணக்கில்கொண்டுதான் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1921-ல் அமைந்த சட்டமன்றத்தையும், 1937-ல் அமைந்த மேலவையுடன் கூடிய சட்டமன்றத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டியவதில்லை. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு சரியானதுதான்” என்றார் ப்ரியன்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-on-tamilnadu-assembly-centenary-celebration
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக